“ஒற்றையாட்சியா சமஷ்டியாட்சியா சிறந்தது என்ற சம்பிரதாயபூர்வவாதங்களை தவிர்ப்பது நல்லது”
டாக்டர். பாக்கியசோதி சரவணமுத்து |
நாட்டினதும், மக்களினதும் நலனுக்காகவே என்ற சிந்தனையுடன் தான் அரசியலமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அவை அரசியல் பின்னணியில் உருவாவதை எவராலும் தவிர்க்க முடியவில்லை. காரணம் அரசாங்கம் என்பது அரசியல் வலையமைப்புக்களினால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கை அரசியலமைப்பும் கூட அரசியலுடன் இன்றுவரை பிண்ணிப் பினைந்துள்ளது. இதுவரை மக்கள் பிரதிநிதிகள் என்று பாராளுமன்றத்தில் நிரம்பியுள்ள அரசியல் தலைவர்கள் எடுத்தது தான் முடிவு. இப்படியிருக்க இப்போது மட்டும் ஏன் அரசியலமைப்பை மாற்ற மக்கள் கருத்துக்களைக்கேட்க வேண்டும்?
சுமார் பத்து வருடங்கள் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் சொன்னது தான் சட்டம் என்று இருந்தது. இதனை எவராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. தமக்கு ஏற்ற சட்டங்களை உருவாக்குவதற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் இருந்தது. இன்றைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திலும் அதே நிலைமைதான். என்றாலும் மஹிந்த ஆட்சியில் முக்கியமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை பலப்படுத்திக்கொண்டமை நீதித்துறையில் நிறைவேற்று துறை தலையிட்டமை குடும்ப உறவுகளுக்கு வழங்கிய முக்கியத்துவம் மற்றும் பல அதிகார துஷ்பிரயோகம் என்பன இலங்கையின் ஆட்சிமாற்றத்துக்கான தேவையையும் அரசியலமைப்பு மாற்றத்தையும் உணர்த்தியது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி அவசியமான ஆட்சி மாற்றமும் நிகழ்ந்தது. ரணில் தரப்பு முன்வைத்த அரசியலமிப்பு மாற்ற யோசனை மட்டும் ஒரு வருடம் கழிந்த நிலையில் மக்கள் கருத்து கேட்க சந்தர்ப்பம் அமைந்துள்ளது. மக்களுக்கான அரசியலமைப்பாக உருவாக வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்கிறார் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக மக்கள் கருத்து கேட்கும் பிரிவின் தலைவர் லால் விஜேநாயக கூறுகின்றார்.
இந்த சந்தர்ப்பம் வரலாற்றில் முதன் முறையாக நடைபெறுகின்ற அதேநேரம் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான தேவையை மக்களும் உணர்ந்துள்ளனர். எனினும் நாட்டு மக்கள் எல்லோரும் இது தொடர்பான விழிப்புணர்வை பெற்றவர்கள் அல்லர். எனவே மக்கள் தங்களுக்கு என ஒரு சட்டம் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து கருத்துக்களை தெரிவிப்பதே பொருத்தமானது என துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் கொழும்பு விசும்பாயவில் நடந்த மக்கள் கருத்துகேட்கும் நிகழ்வில் மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து முன்வைத்த பரிந்துரைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. நிறைவேற்று அதிகார ஜனதிபதிமுறை நீக்கம் தேர்தல் முறை மாற்றம் உரிமைகள் மீதான சட்டம் அரசியலமைப்பு நீதிமன்றம் அதிகார பகிர்வு மற்றும் மாகாணசபை என்கின்ற இரண்டாவது சபை போன்றவைதொடர்பாகவும் குறித்த கலந்துரையாடலில் விரிவாக பேசப்பட்டது. மேலும் ஒற்றை ஆட்சியா சமஷ்டி ஆட்சியா சிறந்தது என்ற சம்பிரதாய வாதங்களை தவிர்ப்பது நல்லது எனவும் மாற்றுக் கொள்கைக்கான நிலையம் சார்பில் கூறப்பட்டிருந்தது.
பரிந்துரைகள் பற்றிய தொகுப்பு
அடிப்படைக் கோட்பாடுகள்: புதிய அரசியலமைப்பை வலுவானதொரு அரசியலமைப்பாக, ஆளுகையில் பல்-கலாசார பிரஜைகளின், பால்நிலை நீதி மற்றும் பன்மைத்துவ ஜனநாயகத்தின் விழுமியங்களை மதிக்கும், மாற்ற முடியாத அடிப்படையை ஏற்படுத்தும், அதனை அடிப்படையாகக் கொண்ட அடிப்படைக் கோட்பாடுகளின் பிரகடனமாக உள்ளடக்கப்பட வேண்டும். இவற்றிற்கு குடியரசுக் கோட்பாடுகள்,மதச்சார்பின்மை, அரசியல் பன்மைத்துவம், அரசியலமைப்பின் உயர் ஆதிக்கம், சட்டத்தின் ஆதிபத்தியம், அதிகார வேறாக்கம், அதிகாரப் பங்கீடு என்னும் கோட்பாடுகளும் உள்ளடக்கப்பட வேண்டும். இவை அனைத்தையும்விட அனேகமாக மனித கௌரவத்தின் அடிப்படையில் அமைய வேண்டும்.
பன்மைத்துவ சமூகத்தில் அரசு: இலங்கையின் அரசியலமைப்பு அரசின் பிரதான விடயம் வெறுமனே இனத்துவப் பன்மைத்துவமோ அல்லது ஏனைய அரசியல் பன்மைத்துவமோ அல்ல. அரசியல் முறைமையை கூட்டாக ஒன்றிணைக்கும், அனைத்து நபர்களையும், குழுமங்களையும் ஏற்றுக்கொள்ளும், பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்களுக்கு உரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும், அரசியல் முறைமையைப் பாதுகாப்பது அனைத்து இலங்கையர்களினதும் உரிமையையும், அரசிற்கு அர்ப்பணிப்பதுபற்றிய விளக்கத்தைக் கொடுக்க வேண்டும்.
பாராளுமன்ற அரசாங்கம்: அரசியலமைப்பு ரீதியான உரிமைகள், நல்லாட்சி, பன்மைத்துவம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான உரிய சட்டரீதியான பாதுகாப்புடன்;, சட்டவாக்கச் சபைக்கு நிறைவேற்றுத்துறையின் அரசியல் வகைப்பொறுப்பை உறுதிசெய்யும், முழுமையான "வெஸ்ட் மினிஸ்டர்" மாதிரிக்கு மீண்டும் செல்ல வேண்டுமென நாம் கோருகிறோம். பிரதிநிதித்துவ ஜனநாயகத்தினதும், அரசியல் வகைப்பொறுப்பினதும் முக்கிய நிறுவனமாக தேசிய வாழ்வின் மைய இடத்தில் பாராளுமன்றம் நிலைநாட்டப்படுவதைக் காண நாம் விரும்புகிறோம்.
தேர்தல் முறைமை: பன்மைத்துவ சமூகத்தில் சரியான ஜனநாயக பிரதிநிதித்துவத்திற்கு, மிக முக்கியத்துவம் வாய்ந்த அனைத்தையும் உள்ளடக்குகின்ற, விகிதாசார பிரதிநிதித்துவ முறையைப் பாதுகாக்கும், அதேசமயம் தொகுதிவாரியான தேர்தல் முறையின் நல்லம்சங்களை ஒன்றிணைக்கும், கலப்புப் பிரதிநிதித்துவ விகிதாசார முறையை அமுல்படுத்துமாறு நாம் கோருகிறோம்.
உரிமைகள் மீதான சட்டம்: ஐக்கிய நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய மனித உரிமைகள் சாசனப் பத்திரங்கள்; பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியமங்களை முழுமையாகப் பூர்த்தி செய்யும், மேற்படி நியமங்களுக்கு அப்பால்கூடச் செல்லக்கூடிய, அதேசமயம் ஏற்புடைய உடன்படிக்கைச் சபைகளுக்கு தடையேதுமின்றி பிரவேசத்தை ஏற்படுத்தக் கூடிய, அடிப்படை உரிமைகள் பற்றிய புதிய அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிக்குமாறு கோருகிறோம்.
அரசியலமைப்பு நீதிமன்றம்: அரசியலமைப்பு வரைவிலக்கணமும், அடிப்படைக் கோட்பாடுகளும், முக்கிய பிரச்சினைகளுக்கு ஏற்புடைய வழக்குகள் தொடர்பாக மாத்திரம் செயற்படும், பால்நிலை சமத்துவம் உட்பட இலங்கையின் சமூக மற்றும் பிராந்திய பன்மைத்துவத்தின் பிரதிநிதியான அரசியலமைப்பு நீதிமன்றத்தை உருவாக்குமாறு நாம் பரிந்துரை செய்கிறோம். அரசியலமைப்பு நீதிமன்றம் அரசியலமைப்பின் உயர் ஆதிக்கத் தன்மை பற்றிய அடிப்படை கோட்பாட்டின் பொறுப்பு நிறுவனம் ஆகும்.
அதிகாரப் பகிர்வு: அதிகாரப் பகிர்வு என்பது வெறுமனே மத்தியிலும், மாகாண நிறுவனங்களுக்கம் இடையே சிறந்த சமநிலையைப் பேணுவதற்கு, மாகாண மட்டங்களில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான அதிகாரங்களை ஒப்படைப்பது மாத்திரமல்லாமல், வகைப்பொறுப்பு மற்றும் பொறுப்பு என்பவற்றைப் பிரித்து, அதிகாரப் பகிர்வை குறைநிரப்புச் செய்யக் கருதும், அதிகாரத்தைப் பகிரும், புதிய பிரவேசத்திள் மூலம் மாகாணங்களும், மையங்களும் ஒன்றிணைக்கப்படும். மையத்திற்கும் மாகாணங்களுக்கும் இடையே இசைவான சமநிலையைப் பேணிப் பாதுகாத்து, தேர்ச்சிப் பிரிவு மாகாணங்களின் சுயாட்சி மற்றும் வினைத்திறன் என்பவற்றை உயர்த்துவதுபற்றி மீள ஆராய வேண்டும்.
இரண்டாவது சபை: பௌதீக அலகுகளுக்கிடையே கூட்டுறவைப் போஷிக்கும், சட்டவாக்க ரீதியான ஆழ்ந்;தாராய்வை, அதிகரிக்கும் இரண்டாவது சபையை திட்டமிடுவதற்கு நாம் பரிந்துரைக்கிறோம். இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அது அரசியலமைப்புச் சபைமூலம் நியமிக்கப்படும், உயர்ந்த ஆற்றல்களைக் கொண்ட உறுப்பினர்கள் மற்றும் மாகாண நியதிச்சட்டவாக்கச் சபைகளில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் கலவையாக அமையும்.
ஏ.ஜெயசூரியன்
No comments:
Post a Comment