Wednesday, February 24, 2016

ஒரு ஊடகவியலாளரின் ராஜினாமா கடிதம்!

Vishwa deepak
டெ ல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் பல்கலை மாணவர்களின் கனவுகள், படிப்பு மற்றும் குடும்பங்களை அச்சுறுத்தும் விதமாக செய்திகளை தொடர்ந்து வெளியிட்ட ஜீ (zee news) செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார் ஊடகவியலாளர் விஷ்வா தீபக். அவருடைய ராஜினாமா கடிதம் தமிழில்,


ஊடகவியலாளர்களாகிய நாம் பிறரை கேள்வி கேட்கிறோமே அன்றி, நம்மை நாம் கேள்வி கேட்பதே இல்லை. பிறரின் கடமைகளை தீர்மானிக்கும் நாம் நம்முடைய கடமைகளை குறித்து கவலை கொள்வதில்லை. நாம் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக அறியப்படுகிறோம். ஆனால், நம்முடைய நிறுவனங்களோ, சிந்தனையோ, நம் செயல்முறைகளோ ஜனநாயகப்பூர்வமாக இருக்கிறதா? இந்த கேள்வி என்னுடையது மட்டுமில்லை, இது அனைவராலும் கேட்கப்பட்டுவரும் கேள்விதான்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்ஹையா குமார் மீது தேசியவாதத்தை முன்வைத்து நடத்தப்பட்ட ஊடக விசாரணைகள், அவரை தேசவிரோதி என்று தீர்ப்பெழுதியது, இது மிகவும் ஆபத்தான போக்காகும். ஊடகவியலாளர்களாக அதிகாரத்தை கேள்வி கேட்பதுதான் நம் கடமை, மாறாக அதிகாரத்தோடு கைகோர்த்து நடப்பது கிடையாது. இந்த கேள்விகள்தான் ஊடகவியலில் நிகழ்ந்த அழகான, நல்ல பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது.

கேள்வி கேட்பதும், கேட்காமல் இருப்பதும் ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒருவருடைய தனிநபர் வெளி என்பது அரசியலானதுதான். தன்னுடைய பணி சார்ந்த கடமை அல்லது சமூக-பொருளாதாரக் கண்ணோட்டம் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய காலம் என்பது வந்துவிட்டது. நான் இரண்டாவதைத் தேர்வு செய்திருக்கிறேன், ஜீ செய்தி தொலைக்காட்சி நிர்வாகத்தோடு இதனை முன்னிட்டு எழுந்திருக்கும் முரண் காரணமாக எனது பணியை ராஜினாமா செய்கிறேன்.

தங்களுடைய கனவுகளுக்காக, தொடர்ந்து போராடி தியாகம் செய்ய தயாராக இருக்கிற லட்சக்கணக்கான கோடிக்கணக்கான கன்ஹையாக்களுக்கும், ஜேஎன்யூ மாணவர்களுக்கும் எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன்.

அன்பிற்குரிய ஜீ நியூஸ்,

ஒரு வருடம் நான்கு மாதங்கள் இந்த நிறுவனத்தோடு பின்னிப் பிணைந்து வேலை பார்த்த பின்பு, இன்று என்னை இந்த நிறுவனத்திலிருந்து விலக்கிக் கொள்வது என்ற முடிவுக்கு வர நேர்ந்திருக்கிறது. இந்த முடிவை நான் முன்னரே எடுத்திருக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால், இப்போதேனும் இந்த முடிவை எடுக்காவிட்டால், என்னை நானே மன்னிக்க முடியாது
நான் இப்போது சொல்லப்போவது உணர்ச்சிவசப்பட்டோ, கோபத்திலோ, எரிச்சலிலோ சொல்வதல்ல; ஆழ்ந்து சிந்தித்துதான் இதை சொல்கிறேன். நான் ஒரு ஊடகவியலாளன் மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனும் கூட. இந்த நாட்டின் பெயரால் குருட்டு ‘தேசியவாதம்’ எனும் நஞ்சு பரப்பப்படுகிறது
ஒரு குடிமகனாகவும், வேலை சார்ந்த அறத்தின் அடிப்படையிலும் இந்த நஞ்சு மேலும் பரவாமல் இருக்கச் செய்வது எனது கடமையாகும். இது, சிறு படகில் பேரலைகளை கடக்கும் முயற்சி என்று நானறிவேன், ஆனாலும், இதை நான் தொடங்க விரும்புகிறேன். குருட்டு தேசியவாதத்தை பரப்புரை செய்து, கன்ஹையா சொல்லாததைச் சொன்னது போல தொடர்ந்து பரப்பி வந்த ஜீ நியூஸ் தொலைக்காட்சியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே எனது வேலையை ராஜினாமா செய்கிறேன்.

இதில் தனிப்பட்ட நலன் என்பது கொஞ்சம் கூடக் கிடையாது - பணி சார்ந்த அறம், சமூக பொறுப்பு மற்றும் நாட்டின் மீதான பற்றின் அடிப்படையில்தான் இதை நான் செய்கிறேன். இந்த மூன்று அம்சங்களில் ஜீ நியூஸோடு இணைந்திருந்த காரணத்தினால், பல தருணங்களில் நான் தோல்வி அடைந்திருக்கிறேன்.

திரு. நரேந்திர மோடி பிரதமரான காலத்தில் இருந்து, நாட்டின் ஒவ்வொரு செய்தி அறையும் மதவாதத்தை கண்டு உணர்ந்து வருகிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த நிறுவனத்துடன் இந்த போக்கை ஓப்பிடும்போது, அது கூடுதல் ஆபத்தானதாக இருக்கிறது. இவ்வளவு பெரிய சொல்லை பயன்படுத்துவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். ஆனால், இதைவிட பொருத்தமான சொல் இல்லை. ஒவ்வொரு செய்திக்கும் ’மோடி கோணம்’ கொடுத்து, மோடி அரசின் செயல்திட்டத்திற்கு ஊக்கம் சேர்க்க வேண்டிய தேவை எங்கிருந்து எழுகிறது?

இவற்றையெல்லாம் பார்க்கும் போது நாம் இன்னும் ஊடகவியலாளர்களாக இருக்கிறோமா? என்ற சந்தேகம்தான் எழுகிறது. நாம் அரசின் ஊதுகுழல்களாக மாறிவிட்டோம் என்றுதான் நினைக்கத் தூண்டுகிறது. எனக்கும் சேர்த்து மோடிதான் இந்நாட்டின் பிரதமர். ஒரு ஊடகவியலாளனாக இந்த அளவு மட்டும்தான் மோடி புராணத்தை ரசிக்க முடியும். என்னுடைய மனசாட்சி எனக்கு எதிராகவே போர் தொடுக்க தொடங்கிவிட்டது. என்னை பற்றியே எனக்கு எரிச்சல் வரத் துவங்கிவிட்டது.

ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் மோடி அரசை போற்றி புகழும் ஒரு செயல்திட்டம், மோடி அரசை விமர்சிப்பவர்களை காலி செய்யும் யுக்தி. இவையனைத்தும் என்ன? இவற்றை பற்றி நின்று நிதானித்து சிந்தித்தால் பைத்தியம் பிடித்ததைப் போல உணர்கிறேன்

நாம் ஏன் இவ்வளவு கேவலமானவர்களாக, அறமில்லாதவர்களாக, பூமியின் மேலுள்ள அழுக்குகளாக மாறிப் போனோம்? இந்தியாவின் சிறந்த ஊடகக் கல்வி நிலையத்தில் படித்துவிட்டு ஆஜ் தக், பிபிசி மற்றும் ஜெர்மன் அலை எனப்படும் ட்யூட்ஸ் வெல் போன்ற உயர்தர நிறுவனங்களில் பணி புரிந்துவிட்டு, நான் ஈட்டிய நற்பெயரை எல்லாம் ’ச்சீ’ (அழுக்கடைந்த) ஊடகவியலாளன் என்னும் சொல் சிதைக்கிறது.

நமது நேர்மை கந்தலாகி கிடக்கிறது. இதற்கு யார் பொறுப்பாவது?

சொல்வதற்கு நிறைய இருக்கிறது. டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலைக் குறித்து தொடர்ந்து எதிர் பிரச்சாரம் நடந்து வருகிறது ஏன்? அதிகாரம் மற்றும் தண்ணீர், கல்வி குறித்து அவர் கொண்டிருக்கும் நிலைப்பாடுகளை மட்டுமில்லாமல், அவர் செயல்படுத்த நினைக்கும் திட்டங்களையும் தீவிரமாக விமர்சிப்பது ஏன்? ஒரு ஊடகவியலாளனாக கெஜ்ரிவாலோடு முரண்படுவதற்கு அனைத்து உரிமைகளும் ஒருவருக்கு உண்டு. ஆனால், கோடாரியால் தாக்குவது உரிமை அல்ல. இதுவரை கெஜ்ரிவாலுக்கு எதிராக வந்த செய்திகளைத் தொகுத்தால், பல பக்கங்களை தாண்டும். பார்வையாளரை பொறுத்தவரையில் சார்பில்லாமல், நேர்மையோடு செய்திகளை எடுத்துச் செல்லும் அடிப்படை அறம் என்பதெல்லாம் என்னவானது, ஏதாவது மிஞ்சியிருக்கிறதா?

இதேபோன்ற அணுகுமுறைதான் தலித் ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா விஷயத்திலும் நிகழ்ந்தது. முதலில் நாம் அவரை தலித் ஆய்வு மாணவர்கள் என்றோம், பின்னர் தலித் மாணவர் என்றோம். இப்படியெல்லாம் அழைத்தது கூட, செய்திகள் நேர்மையாக சென்றிருந்தால் பிரச்சினையாக இருந்திருக்காது. ரோஹித் வெமுலாவை தற்கொலைக்குத் தள்ளியதில் ஏபிவிபி தலைவர்கள் மற்றும் பண்டாரு தத்தாத்ரேயா போன்றவர்களுக்கு இருக்கும் பங்கைக் குறித்து விசாரணை நடந்து வருகிறது (என்ன சிக்கல் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது). ஆனால், ஊடக நிறுவனமாக பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதில்தான் முனைப்பாக இருந்தோம். இதன் மூலம், யார் மீது கேள்வி எழுப்பப்பட்டதோ, அவர்களை காப்பாற்றும் வேலையை பார்த்தோம்.

பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கமே இல்லாத காணொளியை மீண்டும், மீண்டும் ஒளிபரப்பி பற்ற வைக்க முனைந்தோம். இருட்டில் வெளிவந்த குரலை எப்படி கன்ஹையா மற்றும் அவருடைய நண்பர்களின் குரல் என்று நம்பினோம்.? முன்முடிவோடு அணுகியதால் நமது காதுகளுக்கு ‘பாரதீய கோர்ட் ஜிந்தாபாத்’ என்பது ’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கேட்டது
சகிப்புத்தன்மை பற்றிய விவாதம் மேலெழுந்த போது, மதிப்பிற்குரிய எழுத்தாளர் உதய் பிரகாஷ் மற்றும் அனைத்து மொழிகளின் முக்கியமான எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திருப்பி கொடுத்தனர். எப்போதும் போல நாம் அவர்களை பற்றி கேள்வி எழுப்பினோம். நமது மொழியின் பெருமை அவர். உதய் பிரகாஷை எடுத்துக் கொள்ளுங்கள்,

பரந்த வாசகர் வட்டம் கொண்ட அவரது எழுத்தில் நம் வாழ்க்கை இருக்கும், நம் கனவு இருக்கும், நம் போராட்டங்கள் இருக்கும். ஆனால், விருதை திருப்பித் தரும் அவரது எதிர்ப்புணர்வு என்பதை பணம் வாங்கிக் கொண்டு செய்யும் செயலாகவே பரப்புரை செய்தோம். அந்த காலகட்டம் மிகவும் வலி தருவதாக இருந்தது.

ஆனால், இது எவ்வளவு நாளைக்கு, ஏன் இது தொடர வேண்டும்?

என்னுடைய உறக்கமே தொலைந்து போயிற்று, நான் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறேன்.. என்னுடைய குற்றவுணர்ச்சியின் விளைவாகத்தான் இப்படி இருக்கிறேன். தேசத்துரோக முத்திரை குத்தப்படுவதைவிட ஒருவருக்கு வேறெது இழிவாக இருக்க முடியும்? இது ஒருபுறம் இருக்க, அப்படி ஒருவர் மீது முத்திரை குத்துவதற்கு நாம் யார்? நீதிமன்றத்தின் வேலைதான் என்ன?

கன்ஹையாவையும், ஜேஎன்யூவின் பிற மாணவர்களையும் தேச விரோதிகள் என்று முத்திரை குத்துவதில் நாம் வெற்றியடைந்துவிட்டோம். ஆனால், நாளை ஏதாவதொரு மாணவர் கொல்லப்பட்டால், யார் பொறுப்பு? சிலரின் கொலைகளுக்கு மட்டுமல்ல, சில குடும்பங்களின் இருப்புக்கும் அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கிறோம். கலவரங்களை மட்டுமல்ல உள்நாட்டுப் போரையே உருவாக்கும் அளவுக்கு நஞ்சை மனித மனங்களில் விதைத்து வைத்திருக்கிறோம். இது எந்த வகையான நாட்டுப்பற்று? எந்த வகையான ஊடகவியல்?

நாம் என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிப்பதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ்-இன் ஊதுகுழல்களா நாம்? பாகிஸ்தான் வாழ்க என்ற குரல் இல்லவே இல்லாத காணொளியை பலமுறை ஒளிபரப்பினோம். இருட்டில் கன்ஹையாவின் குரல்தான் கேட்டது என்று உறுதியாக எப்படி நம்ப முடிந்தது? பாரதீய கோர்ட் ஜிந்தாபாத் என்னும் முழக்கத்தை பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று திரித்து, அரசின் செயல்திட்டத்திற்கு அடிபணிந்து, சில இளைஞர்களின், குடும்பங்களின் கனவுகளை சிதைக்கும் நிலைக்கு சென்று இருக்கிறோம். காவல்துறை தனது விசாரணையை முடித்து, முடிவை சொல்லும் வரை காத்திருந்திருக்கலாம்.

உமர் காலித்தின் சகோதரியை வண்புணர்ச்சி செய்துவிடுவோம், ஆசிட் வீசி விடுவோம் என தொடர்ச்சியாக மிரட்டப்பட்டு, துரோகியின் சகோதரி என்று முத்திரை குத்தப்பட்டதில் நமக்கு பங்கில்லையா? ஒன்றுக்கு நூறு முறை தேசத்திற்கு விரோதமாக எந்த முழக்கத்தையும் ஆதரிக்கவில்லை என கன்ஹையா கூறும்போது, நாம் பற்ற வைத்தது பாஜக அரசின் திட்டத்திற்கு உதவியாக இருந்ததால், எவருமே கன்ஹையாவின் குரலை கேட்கவில்லை. கன்ஹையாவின் வீட்டை பார்த்தீர்களா? அது வெறும் வீடல்ல, இந்நாட்டின் விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களின் துயர வெளிப்பாடு. இந்நாட்டில் புதைக்கப்படும் எண்ணற்ற கனவுகளின் புதைவிடம் அது.

ஆனால், நாம் இவற்றையெல்லாம் பார்க்க கண்ணற்றவர்களாகவே இருக்கிறோம்! இதை சொல்வதற்கு எனக்கு மிகுந்த வலியாகத்தான் இருக்கிறது, ஆனால், சொல்ல வேண்டும், நான் வசிக்கும் பகுதிகளிலேயே இதுபோன்ற ஏராளமான குடிசைகள் இருக்கின்றன. இந்தியாவின் கிராமப்புற வாழ்க்கை என்பது உண்மையாகவே துயர்மிக்கது, அசிங்கமானது.

விளைவுகளை குறித்த எந்த கவலையுமில்லாமல் எளிய மக்களின் மனங்களில் விஷத்தைக் கலந்திருக்கிறோம். முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள கன்ஹையாவின் தந்தைக்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது? இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை அவருடைய குடும்பத்தைப் பற்றி செய்தி வெளியிட்டிருக்காவிட்டால், விளிம்பு மக்களின் நலன்களுக்காக பேச வேண்டும் என்ற ஊக்கத்தை கன்ஹையா எங்கிருந்து பெற்றிருப்பார் என்று எவருக்கும் தெரிந்திருக்காது

ராம நாகா மற்றும் இதரர்களின் பின்புலமும், வறுமையை எதிர்கொண்டு போராடுவதுதான். ஜேஎன்யூவில் வழங்கப்படும் உதவித்தொகையின் வழியாகத்தான் அவர்கள் தங்கள் கல்வியை தொடர்வதோடு, வாழ்க்கையில் நெடுந்தூரம் பயணிப்பதற்கான உறுதியையும் பெறுகிறார்கள். ஆனால், டி.ஆர்.பி-க்காக அலையும் வக்கிரமான நமது மனநிலை ஏறக்குறைய அவர்களது வாழ்க்கையையே நாசப்படுத்தியிருக்கிறது

அவர்களது கருத்துக்களோடு நமக்கு முழுமையான உடன்பாடு இல்லாமல் இருக்கலாம், ஏன் அவர்களது கருத்துகள் தீவிரத் தன்மை கொண்டவை என்று கூட தோன்றலாம். இருந்துவிட்டு போகட்டும், இதனால் எல்லாம் எப்படி அவர்கள் தேசத்துரோகிகள் ஆவார்கள்? இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எப்படி செயல்பட வேண்டும் என்று தீர்மானிக்க நாம் யார்?

டெல்லி காவல்துறையினர் இந்த விவகாரத்தில் ஜீ நியூஸை கை காட்டியிருப்பது தற்செயலானதா? நாம் டெல்லி காவல்துறையோடு கூட்டு வைத்திருக்கிறோம் என்று பேசப்படுகிறது. இதற்கு விளக்கமாக மக்களிடம் சொல்ல நம்மிடம் ஏதாவது இருக்கிறதா?

எந்த வகையிலும், ஜேஎன்யூ அல்லது அதன் மாணவர்களுடன் நாம் ஏன் வன்மம் கொண்டிருக்கிறோம். நவீன வாழ்க்கைக்கான கருத்துக்கள், ஜனநாயகம், பன்முகத்தன்மை, மாற்று கருத்துக்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய அழகான கலவைதான் ஜேஎன்யூ என்பது என் கருத்து. ஆனால், அது கிரிமினல்கள் மற்றும் தேசவிரோத சக்திகளின் கூடாரமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஜேஎன்யூ கிரிமினல்களின் கூடாரமா அல்லது நீதிமன்ற வளாகத்தில் வைத்தே இடதுசாரித் தொண்டர்களை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ ஓபி சர்மா கிரிமினலா? எம்.எல்.ஏவும் அவரது நண்பர்களும் சிபிஐ தொண்டர் அமீக் ஜமேய்யை கீழே தள்ளி தாக்கும்போது, காவல்துறையினர் வேடிக்கை பார்த்தனர். நம்முடைய தொலைக்காட்சியும் இதே காட்சியை காண்பித்து ஓபி.சர்மா தாக்கியதாக குற்றம் சாட்டியது. அது என்ன குற்றச்சாட்டு என்று நான் கேட்டேன். மேலிட உத்தரவு என்ற பதில் வந்தது. நமது மேலிடம் எப்படி இவ்வளவு அதள பாதாளத்தில் தள்ளப்பட்டது. மோடிக்கு ஆதரவாக எழுதுவதை கூட புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது ஓபி.சர்மா, ஏபிவிபிக்கும் கூட பரிந்துரைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை எப்படி புரிந்து கொள்வது?
என்னுடைய கையறு நிலையையும், என்னுடைய ஊடக செயல்பாட்டையும் எண்ணி வெட்கப்படுகிறேன். இதற்காகத்தான் அனைத்தையும் விட்டுவிட்டு ஊடகப்பணிக்கு வந்தேனா? கண்டிப்பாக இல்லை.

என் முன் இரண்டு தேர்வுகள் இருக்கின்றன - ஒன்று ஊடகப்பணியையே துறக்க வேண்டும் அல்லது தர்மசங்கடமான இந்த நிலையிலிருந்து விலக வேண்டும். நான் இரண்டாவதை தேர்வு செய்கிறேன். என்னுடைய வேலைக்கும், அடையாளத்திற்கும் சம்பந்தமுள்ள விஷயங்களை தாண்டி தேவையில்லாத எதையும் கேட்கவில்லை. சிறு துரும்பென்றாலும், ஏதோவொரு வகையில் நானும் இதற்கு பொறுப்புதான். இதை செய்வதின் வழியாக எனக்கு வேறு இடங்களில் வேலை கிடைக்காது என்பதை உணர்ந்து இருக்கிறேன்.

ஆனால், இதே வேலையில் தொடர்ந்து நீடித்தால் லட்ச ரூபாய் சம்பளத்தை விரைவில் எட்டிவிட முடியும் என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறேன். ஆனால், இந்த நல்ல சம்பளம் என்னிடமிருந்து கடுமையான விலையை கேட்கிறது. அதை இனிமேலும் என்னால் தர இயலாது. சாதாரண நடுத்தர வர்க்க குடும்ப பின்புலத்திலிருந்து வருகிறவன் என்ற முறையில், ஒரு மாதம் சம்பளம் இல்லையானாலும் கடுமையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பது புரிந்தாலும், இனிமேலும் என் மனசாட்சியை நான் கொல்ல விரும்பவில்லை.

எனக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். என்னுடைய கேள்விகள் அனைத்துமே ஆசிரியர் குழு மற்றும் நிர்வாகத்தின் கொள்கைகளை குறித்துதான். இது சரியான பொருளில் புரிந்து கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

தனது வலதுசாரி சாய்வை வெளிப்படுத்துவதற்கு ஊடகத்திற்கு உரிமை உண்டென்றால், தனிநபர் மட்டத்தில் எங்களுக்கும் எங்கள் அரசியல் சாய்வை வெளிப்படுத்துவதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு.
ஒரு ஊடகவியலாளனாக தனிநபர் கருத்து திணிப்பு இருக்கக் கூடாது என்பது பணி சார்ந்த கடமை. ஆனால், தனிப்பட்ட முறையில், விழிப்புற்ற குடிமகனாக எனது பாதை இடதுவயப்பட்டது - கட்சி அலுவலகத்தில் இருப்பதைவிட எங்கள் சொந்த வாழ்க்கையில் இருப்பதுதான் இடது மனநிலை. அது என் அடையாளம்

இறுதியாக, ஒராண்டு காலமாக தொடர்ந்து பயணம் செய்ய அனுமதித்த, ஜீ நியூஸில் நிறைய நண்பர்களை உருவாக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி.

அன்புடனும், மதிப்புடனும்

விஷ்வா தீபக்.

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...