Monday, March 27, 2017

காணாமல் போனவர்கள் எல்லோருமே இறந்துவிட்டதாக என்னால் கூற முடியாது


னக்கு யுத்த குற்றம் தொடர்பாக நம்பிக்கை இல்லை. யுத்த குற்றம் நடந்திருக்காது என்று உறுதியாக கூற மாட்டேன். அது ஒரு அரசியல்நிலைப்பாடு மட்டுமே என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச யுத்த குற்றம் என்ற கொள்கையில் இருந்திருந்தால் கிராமத்தில் இன்று உள்ளவர்கள்மீது வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். முன்னாள் போராளிகளுக்கு புனருத்தாபனம் செய்திருக்க முடியாது. அவர்களை கைது செய்திருக்க வேண்டும். அப்படியென்றால் யாழ்ப்பாணத்திலுள்ள அரைவாசிப்பேர் சிறைச்சாலைகளில் தான் இன்று  இருந்திருப்பார்கள்.இளைஞர்களும் சிறையில்தான் இருந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவரது இந்த செவ்வி இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் தோல்வியடைந்து புதிய அரசாங்கம் உருவாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன இன்றைய நிலை என்ன?
இந்த இரண்டு வருடத்தில் மக்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகிவிட்டது. சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை என அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியாகவில்லை. வடக்கு, கிழக்கு, மேற்கு என்ற பாகுபாடின்றி இவ்வாறு நடந்துள்ளது. தற்போது விவசாயிகளின் நிலைமையை பாருங்கள். உரம் உட்பட பலவற்றை நிறுத்திவிட்டார்கள். ஆனால் எனது காலத்தில் அனைத்தையும் வழங்கினோம். இலவசமாக வழங்கினோம். யுத்தம் நடந்த ஒரு நாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது என்பது சாதாரணமான விடயம் அல்ல.

லட்சக்கணக்கில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றி இடங்களை சுத்தப்படுத்தி மக்களை மீளக்குடியமர்த்தினோம். அந்த இடங்களில் அவர்கள் விவசாயம் செய்ய உழவு இயந்திரம், நீர் இறைக்கும் இயந்திரம் என விவசாயத்துக்கு தேவையான பொருட்களை வழங்கினோம். அவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி பொருட்களை விற்கமுடியாத சந்தர்ப்பத்தில் அதனை இராணுவம், அரசாங்கம் பெற்று பணத்தை வழங்கியது. எனவே அந்த மக்களால் வருமானத்தை நிலையாக பெறமுடிந்தது. ஆனால் வடக்கு மக்களை பொருத்தமட்டில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்ற மக்கள் அனுப்பும் பணத்தில் வாழ முடியும் ஆனால் அந்த பணம் தொடர்ந்து கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். 

அது மற்றவருடைய பணம். எனவே தான் உள்நாட்டு மக்களின் உற்பத்தியை அதிகரித்தோம்.
வேலையில்லாமல் வடக்கில் எத்தனையோபேர் இருக்கின்றனர். தெற்கிலும் உள்ளனர். இன்று அவர்களுக்கு வேலை இல்லை. இன்று இது 92 வீதமாக இருக்கின்றது. நாங்கள் கடன் வாங்கியதாக கூறுபவர்கள் வடக்கில் நாம் செய்துள்ள அபிவிருத்தியை பார்க்கவேண்டும். இலவசமாக பாதைகள், மின்சாரம்,  வைத்தியசாலைகள் என நாம் செய்து கொடுத்தோம். ஆனால் நாங்கள் செய்ததை தவிர இந்த அரசாங்கம் ஒரு கல்லையேனும் நட்டு வைத்துள்ளார்களா? அரசாங்கம் ஒதுக்கிய பணத்தை கூட செலவிடவில்லை. பணத்தை கூட செலவிடவில்லை என்றால் இந்த அரசாங்கம் எதிர்ப்பார்ப்பது என்ன? அரசாங்கம் என்றவகையில் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது.

இந்த அரசாங்கத்தை கொண்டுவர பாடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலையுடன் பாராளுமன்றில் அமர்ந்துள்ளனர். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் போன்ற விடயங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர். இது தான் வடக்கு மக்களின் மனதை வெல்ல தனது கையிலிருக்கும் ஒரே ஒரு சுலோகன். மக்கள் பிரச்சினையை மறந்து வேறு ஒரு பிரச்சினையை உருவாக்கி திசை திருப்பியுள்ளனர். அரசியலமைப்பை மாற்றவேண்டுமென்பது ஒரு அரசியல் காரணம் மட்டுமே. இதற்கு ஏமாறுபவர்களும் இருக்கின்றார்கள். இது ஒரு அரசியல் காரணம்.தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் மக்களுக்கு மட்டுமான எதிர்க்கட்சித்தலைவர் இல்லை என்பதை  நினைவிற் கொள்ளவேண்டும். அவர் இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர். எங்களுக்கும் அவர்தான் எதிர்க்கட்சித்தலைவர். ஆனால் அவர் அப்படி செயற்படுகின்றாரா? 

அதனால் தான் பொது எதிர்க்கட்சி என்ற ஒன்றை உருவாக்கி கொண்டீர்களா?
ஆம், எதிர்க்கட்சித்தலைவர் என்ற வகையில் அவர்  செயற்படவில்லை. அரசாங்கத்தின் பங்காளியாகவே செயற்படுகின்றார். இவர் மட்டுமல்ல ஜே.வி.பி.யும் இதனைத்தான் செய்கின்றார்கள். புதிய அரசாங்கம் உருவான பின்னர் அரசாங்த்தில் இருக்கின்றNhம் என்றே நினைத்துக் கொண்டுள்ளனர். சம்பந்தனுக்கு எப்போதும் எங்களது மரியாதையும் கௌரவமும் உண்டு. சுமந்திரனுக்கு அந்த கௌரவம் எங்களிடம் இல்லை என்ற உண்மையை கூற வேண்டும்.

பொது எதிர்க்கட்சியினூடாக நீங்கள் எதிர்ப்பார்ப்பது என்ன? பொது எதிர்க்கட்சிக்குள்ள சவால்கள்  என்ன?
எங்களைத்தவிர இந்த அரசாங்கத்தை கொண்டுசெல்ல வேறு யாராலும் முடியாது. காரணம் நங்கள் அந்தளவுக்கு வேலை செய்துள்ளோம். எனது காலத்தில் வடக்கிற்கு 98 வீத மின்சாரம் வழங்கப்பட்டது. இலங்கையிலேயே சிறந்த தரமான வைத்தியசாலைகள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ளன.எனக்கு சுகயீனம் ஏற்பட்டாலும் நான்  யாழ்ப்பாணத்துக்கு சென்று மருத்துவம் பெற இலகுவாக இருக்கும் என நான் நினைக்கிறேன். பாடசாலைகளை உருவாக்கினோம்.மஹிந்தோதய ஆய்வு கூடங்களின் ஊடாக நாட்டில் விஞ்ஞானத்தை வளர்த்தோம். பல்கலைக் கழகங்களில் பொறியியல் விஞ்ஞான பீடங்களை அமைத்தோம். அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்தோம். அன்று அமைக்கவில்லை என்றால் இன்று அதுவும் இல்லை. எனவே எமக்கு இத்தகைய அமைப்பு தேவை.

நாங்கள் ஒரு எதிர்க்கட்சியாக செயற்பட முடியாமல் இருக்கிறது. அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. சபாநாயகர் ஏகமனதாக முடிவெடுக்கிறார். என்னை பொறுத்தவரை பொது எதிர்க்கட்சியை செயற்பட முடியாதளவுக்கு சபாநாயகர் எடுத்த முடிவு தவறானது. இருப்பினும் நாங்கள் பாராளுமன்றத்துக்குள்ளே குரலெழுப்புகின்ம். இந்த குரல் ஓசை பிரசித்தமாக வெளியே வருவதில்லை காரணம், எங்களுக்கான இடம் இன்னும் வழங்கப்படவில்லை. ஜனநாயக தன்மைகளை முற்றாக ஒழித்துவிட்டார்கள்.பாராளுமன்றில் அதிகமாக குரலெழுப்பும் போது அதிகமாக வழக்குகள் போடப்படுகின்றன. இந்த அரசாங்கம் குறிவைத்து தாக்குகின்றது.பாரிய ஊழல் மோசடிகளை விசாரிக்கும் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் இந்த அரசாங்கம் ஆட்சி நடத்துகிறது. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்தார்கள் 16 நாட்களுக்கு மேலாகிறது. அவருக்கு இன்றும் பிணை வழங்கப்படவில்லை. இப்படித்தான் தான் இன்றைய அரசின் போக்கு இருக்கிறது.

இது அரசியல் பழிவாங்கலா?
நிச்சயமாக இன்று அரசியல் பழிவாங்கல் நடக்கிறது. இவ்வாறு செய்துகொண்டு மறுபுறம் அரசியல் பழிவாங்கல் நடந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்குகின்றார்கள். தமக்கு வேண்டியவர்களுக்கு நட்டஈடு வழங்குகின்றார்கள்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு தற்போது இருக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை அறிந்துள்ளீர்களா?
தெற்கிலுள்ள மக்களுக்குள்ள பிரச்சினைகள் போலவே தான் இன்று வடக்கு, கிழக்கு மக்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டும் தீர்வில்லை. வைத்தியசாலைகளை கட்டிக்கொடுத்தோம் ஆனால் இன்று மருத்துகளின் விலைகள் அதிகம். 30 வருடங்கள் யுத்தம் நடந்த வடமாகாணத்துக்கு அதிக செலவுகள் செய்து நாம் மீளக்கட்டியெழுப்பினோம். ஆனால் இந்த அரசாங்கம் வடமாகாணத்துக்கு வழங்கவேண்டிய பணத்தை நிறுத்திவிட்டது. யாழ்தேவி புகையிரத போக்குவரத்துக்கான ரயில் பாதையை ஏன் விரைவாக அமைத்தீர்கள் என இப்போது எம்மிடம் கேள்வி எழுப்புகிறார்கள். யாழ்ப்பாணத்தை மீள உருவாக்கி யாழ் தேவியை மீண்டும் அனுப்பியது பிரச்சினை இல்லை. ஏன் விரைவாக அனுப்பினீர்கள் என்பது தான் இப்போதைய பிரச்சினையாக உள்ளது. இது தான் இன்று அவசியமா? மக்களுக்கு தெரியும் என்ன நடக்கிறதென்று.

அப்படியென்றால் இந்த அரசாங்கத்திடம் உள்ள குறைபாடுகள் என்ன?
உண்மையில் இந்த அரசாங்கத்திடம் திட்டங்கள் இல்லை. நிறைவேற்று தலைவர்கள் இருவர் இருக்கிறார்கள். இரண்டு நிறைவேற்று தலைவர்கள் இருக்க முடியாது.நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டுமின்றி அதே அதிகாரத்தை கொண்ட அமைச்சர்களும் இருக்கின்றார்கள். இது எந்தவிதத்திலும் நியாயமானது அல்ல.

நீங்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வடக்கு கிழக்கில் இருந்த மிக முக்கியமான பிரச்சினைகளில் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் எனவும் காணாமல் போனவர்கள் கண்டுபிடித்து தரப்படவேண்டும் எனவும் காணிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் கூறப்பட்டது. இந்த பிரச்சினைகள் இன்னும் தொடர்கிறது இது பற்றி உங்கள் கருத்து என்ன?
தேர்தல் காலத்தில் இந்த பிரச்சினைகளைத்தானே எனக்கு எதிரான தேர்தல் பிரசாரமாக கொண்டு சென்றார்கள். தற்போது இந்த பிரச்சினை தீர்ந்துவிட்டதா?இந்த அரசாங்கம் உருவாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஆகக்குறைந்தது இந்த பிரச்சினைகளை தீர்க்க வழியமைத்துள்ளார்களா? முன்னாள் புலிகள் இயக்கத்தினரை புனருத்தாபனம் செய்யும் பொது அவர்களை ஏன் வெளியேவிடவில்லை என்று குரல் எழுப்பியவர்கள் இன்று முறையாக புனருத்தாபனம்  செய்யவில்லை என்றனர். புனருத்தாபனம் செய்யப்பட முன்னாள் புலி இளைஞர்கள் இன்றும் ஈழ நாடு கேட்கின்றனர் என்று என் மீது குற்றம் சுமத்தினர். இன்று சுமந்திரன் புலி கடிக்குது என்று கத்துகின்றார்.

இந்தியாவுக்கு ஈழம்  வேண்டுமென்றால் இந்தியாவில் முதலில் அங்கு ஈழத்தை வழங்க வேண்டும். தென் இந்தியாவில் ஈழம் உருவாக்கினால் இங்கு ஈழம் உருவாகும் என ஒரு கூட்டம் கத்துகிறது. எட்டு கோடி மக்களுள்ள இந்தியாவில் ஈழத்தை இந்தியாவினாலேயே வழங்க முடியாவிட்டால் லட்சக்கணக்கிலுள்ள இலங்கைக்கு இந்தியா எப்படி ஈழத்தை வழங்க முடியும் என்று இவர்களிடம் கேட்கிறேன். நாங்கள் ஒன்றாக இருப்போம். மத்திய அரசாங்கத்திடம் உள்ள அதிகாரங்களை பிரித்துக்கொள்வோம். மாகாண சபைக்காக பிரதேச மட்டத்திற்கு அதிகாரத்தை பகிரவேண்டும். கிராமிய மட்ட அபிவிருத்திக்கு அதுவே சிறந்தது.

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும் காணிகளை மீள மக்களுக்கு வழங்குவது தொடர்பாக உங்களிடம் இருந்த திட்டம் என்ன?
எம்மிடம் இருந்த திட்டங்களின் அடிப்படையில் தான் நாங்கள் செயற்பட்டோம்.தேடிக்கொண்டு சென்றNhம். அனாதரவானவர்கள் எங்களிடம் வந்தார்கள். 2 லட்சம் மக்கள் முகாம்களில் இருந்தார்கள். அவர்களுக்கு உணவளித்து பின்னர் முகாம்களை அகற்றிவிட்டு அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தோம் தானே. யுத்தத்தை நிறைவு செய்து இவ்வளவு விரைவாக நாட்டை கட்டியெழுப்பி நாங்கள் வேறு எங்கும் இல்லை. தற்போதைய ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய கடிதங்களில் என்னுடைய கையெழுத்துதானிருந்தது. அப்படியென்றால் பிரச்சினைக்கு தேர்வு நான் தேடித்தந்தது. இவர்களிடம் யாரும் போகவில்லை.

தற்பொழுதும் காணாமல்போனவர்களை கண்டுபிடித்து தரும்படி ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றதே..?
காணாமல் போனவர்களில் சிலர் இறந்திருக்கலாம். யுத்தத்திற்கு சென்றவர்கள் இறந்துவிட்டார்கள். இன்னும் சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர் ஆனால் இதில் எல்லோரும் வெளிநாடு சென்றுவிட்டார்கள் என்றும் எல்லோருமே இறந்திருக்கலாம் என்றும் கூற மாட்டேன். வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்கள், யுத்தத்திற்கு சென்று இறந்தவர்கள் இங்கு காணாமல் போய்விட்டார்கள் என முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் இறந்துவிட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச கூறியதாக ஜெனிவாவில் நவநீதம்பிள்ளை தெரிவித்த கருத்து உண்மையானதா?
சிலர் இறந்திருக்கலாம். தெற்கிலும் இவ்வாறு நடந்தது. தெற்கில் 89, 90 களிலும் காணாமல் போனார்கள். கண்டுபிடித்ததாக ஒருவரும் இல்லை. அக்காலத்தில் எனது கிராமத்தில் வலஸ்முல்லையை சேர்ந்த ஒருவர் காணாமல் போனதாக கூறிய பின்னார் இரண்டு வருடத்தில் மரண சான்றிதழ் மற்றும் நட்டஈடாக 25 ஆயிரம் ரூபா பணமும்  குறித்த குடும்பத்துக்கு கிடைத்தது. பின்னர் நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவர் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எனக்கு இலங்கைக்கு வர கடவுச்சீட்டு மற்றும் விசா தர மறுக்கிறார்கள் என்று கூறுகின்றார்கள் என்று என்னிடம் கூறினார். இறந்தவருக்கு எப்படி கடவுச்சீட்டு விசா வழங்குவது? என்று கூறி நீ இறந்துவிட்டாய் வேண்டுமென்றால் பெயரை மாறிக்கொண்டு வா என்று கூறினேன். இப்படி தெற்கிலும் நடந்தது. வடக்கிலும்  நடந்திருக்கலாம்.  அதிகமானவர்கள் இறந்திருக்கலாம். இதனை பெற்ர்கறோர்கள் தெரிந்தும் இருக்கலாம். உயிரோடு இருந்திருந்தால் இத்தனை வருடங்களில் இந்த உலகில் எங்கிருந்தாலும் அவர்களது பெற்றறோர்களுடன் கதைத்திருக்கவேண்டும்.
அத்துடன் எனது காலத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஒருவர் விமானநிலையத்தில் பிடிபட்ட சந்தர்ப்பமும் இருக்கிறது. அதேநேரம் காணாமல் போனவர்களை தேடி கண்டறியும் திட்டமொன்று எம்மிடம் இருந்தது. அதன்படி தான் செயற்பட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் இந்த அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் இல்லை.

தெற்கில் துறைமுகங்களையும் விமனநிலையங்களையும் அமைத்ததுபோல காங்கேசன்துறைமுகம் பரந்தன் இரசாயன தொழிற்சாலை போன்று பலற்றை மீள கட்டியமைப்பீர்களா?
காங்கேசன் துறைமுகம் இன்று மிகவும் அழகான முறையில் செய்யப்படுகிறது. நான் ஆரம்பிக்கும்போது காங்கேசன்துறைமுகத்தை இந்தியா தனக்குவேண்டுமென கூறியது. ஆனால் ஒப்பந்த அடிப்படையில் ஸ்பெயின் நாட்டின் 40 மில்லியன் டொலர் எமக்கு கிடைத்தது. அதனை இன்னும் ஆழப்படுத்தினால் கடல் நீர் நன்னீரில் கலக்குமென அக்காலத்திலேயே கூறப்பட்டது. இந்த அரசாங்கம் எதனையும் செய்யவும் இல்லை செய்த துறைமுகம், விமான நிலையங்களை விற்கிறது. மிஹின் லங்காவை ஆரப்பித்தபோது அதனை ஏயார் லங்காவுக்கு கொடுத்து விற்கிறார்கள். 

சுற்றுலாத்துறையை விருத்திசெய்ய புதிதாக விமானங்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டோம். இப்போதிருக்கும் மோசமான விமானங்களின் மூலம் சுற்றுலாத்துறையை வளர்க்க முடியாது. நாங்கள் ஓடர் செய்த விமானங்களுக்கு மிகப்பெரிய நட்டஈடு கொடுத்து அதனை வேண்டாம் என்றனர்.அவர்கள் செலுத்திய 900 மில்லியன் டொலருக்கு புதிய விமானத்தையே வாங்கியிருக்கலாம். தற்போது பாகிஸ்தானிடம் இருந்து வாங்கியிருக்கும் விமானங்களில் மாலைதீவுக்குக்கூட சென்றுவர முடியாதநிலை உள்ளது. இவர்கள் விமானம் வாங்கிய நிறுவனத்தின்  நிறைவேற்று பணிப்பாளரை ஊழல் மோசடிக்காக கைது செய்துள்ளார்கள். இந்த நிலையில் விமான கொள்முதலுக்கு வந்த இலங்கை அமைச்சர் யாரென தற்போது தேடுகின்றார்களாம். எனது காலத்தில் உருவான துறைமுக நகரத்தை விட மோசமான உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுள்ளார்கள்.
 
கடந்த அரசாங்கம் செய்த பிழைகளுக்குத்தான் நாங்கள் இன்றும் நட்டஈடு கட்டிக்கொண்டுள்ளோம் என்று இந்த அரசாங்கம் கூறுவது பொய்யா?
இது பெரிய நகைச்சுவையான விடயம். காரணம் நாங்கள் பிழை என்று தெரிந்துதானே நீங்கள் இந்த அரசாங்கத்தை கொண்டுவந்தீர்கள்.தெரிந்துகொண்டு இப்படி கூறமுடியுமா? இனி திட்டங்களை வகுத்து தீர்க்கவேண்டியதுதானே. எங்களுக்கென்றால் என்ன செய்ய வேண்டுமென்று நன்றாக தெரியும்.நாளை அரசாங்கத்தை எங்கள் கையில் கொடுத்தாலும் மாற்றத்தை கொண்டுவர முடியும். ராஜபக்சக்களை தோற்கடிப்பதாக நினைத்து தவிக்கின்றார்கள்.இந்தியா எமது ஆட்சி தொடர்பாக தவறான நிலைப்பாட்டை கொண்டிருந்தது. உண்மையில் இந்தியா உட்பட எல்லோருக்கும் மாற்றம் ஒன்று தேவைப்பட்டது. மக்களும் மாற்றமொன்றை கோரினார்கள். 
 
இந்தியா ஏன் தவறான நிலைப்பாட்டை எடுத்தது என்பது பற்றி இன்று அறிந்துவிட்டீர்களா ?
நான் நினைக்கிறேன். சீனா எம்மிடம் நெருங்குவதாக இருந்திருக்கலாம். இந்தியாவிடம்தானே எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறோம். ஹம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம் என்பவற்றை அமைக்கும் போது அவர்கள் வேண்டாம் என்றனர். ஆனால் நான் இது தொடர்பில் இலங்கைக்கா அல்லது இந்தியாவிற்கா நான் பதில் பொறுப்பு கூற வேண்டும்? எனக்கு இந்தியாவா கொரியாவா அமெரிக்காவா சீனாவா இவற்றில் யார் அமைக்க வேண்டும் என்பது எனது பிரச்சினை இல்லை. சீனாவுக்கு சென்றபோது அவர்கள் இதனை ஏற்றுக்கொண்டார்கள்.இது தான் நடந்தது.

யுத்த குற்றம் தொடர்பாக இலங்கையில் விசாரணை மேற்கொள்ளவேண்டுமென இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றதே..?
எனக்கு யுத்த குற்றம் தொடர்பாக நம்பிக்கை இல்லை. யுத்த குற்றம் நடந்திருக்காது என்று உறுதியாக கூற மாட்டேன். அது ஒரு நிலைப்பாடு மட்டுமே. அரசியல் நிலைப்பாடுகளில் ஒன்று. ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் நடந்த யுத்தத்தில் இரண்டு தரப்பினரும் இறந்து போகின்றார்கள். யுத்த குற்றம் என்ற கொள்கையில் இருந்திருந்தால் கிராமத்தில் இன்று உள்ளவர்கள்மீது வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். முன்னாள் போராளிகளுக்கு புனருத்தாபனம் செய்திருக்க முடியாது. அவர்களை கைது செய்திருக்க வேண்டும். அப்படியென்றால் யாழ்ப்பாணத்திலுள்ள அரைவாசிப்பேர் சிறைச்சாலைகளில் தான் இன்று  இருந்திருப்பார்கள். இளைஞர்களும் சிறையில்தான் இருந்திருக்க வேண்டும். இங்கு பிரசாரமானது வெறுமனே ஒரு சுலோகம் மட்டுமே. என்ஜியோக்காரர்கள் கொண்டு செல்லும் ஒரு பிரசாரம் இதனால் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது. 

பிரதேசசபைக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்பது புதிய அரசியலமைப்புக்குள் உள்வாங்கவேண்டும் என நீங்கள் கூறியுள்ளீர்களா?
இவர்கள் கூறிக்கொண்டு மட்டும் தான் இருக்கின்றார்கள். ஒன்றும் செய்வதில்லை.கூறியதையே செய்யவில்லை. வாக்குறுதிகளை கொடுப்பதுபோல நிறைவேற்ற வேண்டும். புதிய அரசியலமைப்பை மக்கள் வாக்கெடுப்புக்கு விடுவதாக கூறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு நன்றாக தெரியும் சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்றால் அது தோல்வியடையும். இதுதான் உண்மை நிலை.

தமிழ் மக்களுக்கு நான் கூறிக்கொள்வது சாத்தியமான அரசியல் நிலைப்பாடுள்ள தலைவர்கள் வேண்டும். இனவாத நிலைப்பாட்டிலோ அல்லது பிரிவினை வாத நிலைப்பாட்டிலோ இருக்க முடியாது ஒரு நாட்டில் வாழும் போது அது தவிர்க்கப்பட வேண்டும். யுத்த காலத்தில் மக்களின் நலனுக்காக  வடக்கில் நாம் பல விடயங்களை செய்து காட்டி இருக்கிறோம். வேலை வாய்ப்பு, விவசாயம் போன்ற அனைத்தும் செய்துள்ளோம். இப்படியான திட்டங்களை உருவாக்கி வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு  வழங்க முடியாது. 

இந்த அரசை கவிழ்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
தற்போதைய அமைச்சர்களால் கிராமங்களுக்கு செல்ல முடியவில்லை. மரணவீடு ஒன்றுக்கு சென்றாலும் விடியற் காலையில் செல்லுகின்றார்கள். காரணம் மக்கள் அவர்களை விரும்பவில்லை. இந்த அரசாங்கம் எங்களது ஆட்களை பயமுறுத்துகிறது. ஒரு அமைச்சர் வெளியேற நினைத்தபோது இன்னொரு அமைச்சர் எதிர்வரும் வழக்கின்போது உன்னை சிறைக்குள் தள்ளுவோம் என்று கூறியவுடன் அவர் அழுது அழுது அரசாங்கத்தில் நிற்கிறார். பயமுறுத்தி  வைத்துள்ளனர்.கொழும்பில் வரலாற்றில் நடக்காத அளவுக்கு அதிகமான ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. ஆட்சியை கவிழ்ப்பதில் பல சவால்கள் இருக்கின்றன.

உங்களது காலத்தில் உருவாக்கப்பட்ட வடமாகாண சபையின் இன்றைய நிலை பற்றி உங்கள் கருத்து என்ன?
நாங்கள் மூன்றாந்தரப்பு என்பதால் வட மாகாண மக்களிடம் தான் இந்த விடயத்தை பற்றி கேட்க வேண்டும். தற்போது எமக்கு தகவல்கள் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் வடமாகாண சபையையும் பிரதேச சபையையும் நான்தான் நடத்தினேன். இன்று புதிய அரசு வந்தும் அதுவும் நடந்தபாடில்லை. வட மாகாண மக்களின் வாக்குரிமையை இல்லாமல் செய்துவிட்டனர். இந்த நிலையில் தேர்தலை நடத்துமாறு எந்த தலைவராவது குரல் எழுப்புகின்றாரா? இல்லை. எந்தளவுக்கு வெற்றியளித்துள்ளது என்பது என்னால் கூறமுடியாது ஆனால் வெற்றிகரமாக கொண்டு செல்ல பணம் வேண்டும். அரசுதான் வடமாகாண சபைக்கு பணம் கொடுக்க வேண்டும். அரசிடமே பணம் இல்லை என்றால் மாகாண சபை எப்படி வெற்றிகரமாக நடக்கும்? எனது காலத்தில் வடமாகாண சபையை நடத்தியது போல இன்று தேர்தலை நடத்த இந்த அரசாங்கம் பயப்படுகிறது. தேர்தல் நடத்தினால் தோல்வியடைவார்கள் என்று அவர்களுக்கு தெரியும்.

நீங்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் தற்போதைய அரசிலும் நிலவும் ஊடக சுதந்திரத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
எனது காலத்தில் இருந்த ஊடக சுதந்திரமா இன்று உள்ளது.  இன்று நேரடியாக பெயரை சொல்லியே அச்சுறுத்துகின்றனர். பாராளுமன்றத்திலேயே பெயரை கூறி அச்சுறுத்துகின்றனர். அரசாங்கத்துக்கு எதிராக  பயம். சி.என்.என். தொலைக்காட்சியை நிறுத்திவிட்டார்கள். இதுபற்றி கதைக்க ஊடகவியலாளர்களுக்கு பயம். 

மலையகத்தில் உள்ள மக்களுக்கு நீங்கள்  கூற விரும்புவது என்ன?
இலங்கையில் அதிகளவு சுமைகளை தாங்கிநிற்கும் மலையக மக்கள் பற்றி நினைக்கும்போது மிகவும் கவலையடைகிறேன். தேயிலையின் விலையில் வீழ்ச்சி கவனிப்பார் இல்லை. கொடுப்பனவுகளை தருவதாக கூறித்தானே அரசாங்கத்தை வாங்கினார்கள். நிலா தருவதாக கூறிவிட்டு இன்று நிலாவும் இல்லை நட்சத்திரமும் இல்லை என்ற நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள். 

எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு உங்களது தீர்வு என்ன?
மீனவன் என்பவன் மீனுக்கு பின்னால் செல்பவனே தவறான எல்லைக்கு பின்னால் செல்லுபவன் அல்ல. இந்திய மீனவர்கள் மட்டும் எல்லைகளை தாண்டி வரலாம் ஆனால் இலங்கை மீனவர்கள் அங்கு செல்ல முடியாது. யுத்த காலத்தில் இந்த பிரச்சினை ஆரம்பிக்கப்பட்டது. இது எங்களது கடல். உரிமை இலங்கை மீன்வர்களுக்கானது. இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதை கண்காணித்து பொறுப்பு கூறுவது இந்திய அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால் என்னை பொறுத்தவரை இந்திய மீனவர்கள் மீது பிழையில்லை. அதனை கண்காணிக்காதுவிட்ட அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும். 

ஏ.ஜெயசூரியன்

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...