Saturday, February 27, 2016

கச்சதீவு திருவிழா ஓர் இணக்கப்பாட்டுக்கான தளம்

கச்சதீவில் அந்தோனியாரை வழிபாடும் பக்தை 
இலங்கை இந்திய மக்களும் ஒற்றுமையின் வழியாக கடலைத்தாண்டி ஒன்று சேரும் ஒரு தீவு தான் கச்சதீவு. 1974இல் கச்சதீவு இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டது. ஆனால் கச்சதீவை இந்தியாவுக்கே வழங்கவேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடுத்த வழக்கு இன்றும் தொடர்கிறது. இவ்வாறு கச்சதீவு தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்தாலும், தடைகளை கடந்து ஒருநாள் கச்சதீவில் மக்கள் ஒன்றுகூடுகின்றனர் என்பது தான் உண்மை.

தற்பொழுது இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கச்சதீவில் மீனவர்களுக்கெல்லாம் படியளக்கும் கடவுளான புனித
அந்தோனியார் குடிகொண்டுள்ளார். அந்தோனியாரின் ஆசிவேண்டியே இரு
நாட்டு மக்களும் கச்சதீவுக்கு படையெடுக்கின்றனர்.
அன்று இருநாட்டு மக்களும் தமது குரோதம் மற்றும் முரண்பாடு மறந்து ஒருவருக்கொருவர் கட்டியணைத்துக் கொள்கின்றனர். மனித மனதில் இறைவன் தானே இருக்கிறான் என்பது போல தொப்புள்கொடி உறவாக மக்கள் திரள்கின்றனர்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் சீனிகுப்பன் படையாட்சி என்பவரால் கச்சதீவில் கட்டப்பட்டது. இந்த ஆலயம் 1913 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இது ஒரு கத்தோலிக்க தேவாலயமாகும்.இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அந்தோனியார் ஆலய விழா நடைபெற்று வந்துள்ளது. பின்னர் , அவை மாற்றமடைந்துள்ளது.ஆரம்பத்தில் கச்சதீவு அந்தோனியார் திருவிழா இருநாட்டு மக்களும் சந்தித்து பொருட்களை பண்டமாற்று செய்ய வழிவகையாக இருந்துள்ளது. இரு நாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதி தீவாகவே கச்சதீவு விளங்கியது என்பது வரலாறு.

அன்றுமுதல் இன்றுவரை கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்க வரும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்வது வழமையாகிவிட்ட நிலையிலும் கூட , இலங்கையர் இந்தியர் என்ற வேறுபாடு களைந்து கடவுளை வழிபடுகின்றனர்.இது இம்மக்களின் தூய மனதை பறைசாற்றும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகின்றது.
காலம் காலமாகவணங்கிவரும் புனித அந்தோனியாரை இம்முறையும் மக்கள் வழிபட வந்திருந்தனர். இலங்கை கடற்படையும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய உதவித்தூதரகமும் இருநாட்டு மக்களும் கச்சதீவில் வழிபாடுகளை மேற்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தன.

இத்திருவிழாவிற்காக  இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் இருந்து சுமார் 7500 இற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். இலங்கையிலிருந்து 203 படகுகளிலிருந்து 4605 பக்தர்களும் தமிழ்நாட்டிலிருந்து 94 படகுகளில் 3248 பக்தர்களும் இத்திருவிழாவில் கலந்துகொண்டனர் என இலங்கை கடற்படை தெரிவித்தது. 

இலங்கை , இந்திய படகுகள் புடை சூழ கச்சதீவு அலங்கார தோரணங்களால் பக்தர்களின் கண்களுக்கு விருந்தளித்தது. இலங்கை , இந்திய தேசிய கொடிகள் வித்தியாசமான மீன்களின் வண்ணமயமான உருவங்கள் என அலங்காரங்கள் கச்சதீவுக்கு மக்களை வரவேற்றன. 

சுமார் 285 ஏக்கர்களே கொண்டு இந்து சமுத்திரத்தில் மிதக்கும் புகழ்பெற்ற கச்ச தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கிலோ மீற்றர் தூரத்திலும் இலங்கையின் நெடுந்தீவிலிருந்து 9 கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது. இவற்றுக்கிடையிலான ஆபத்தான கடற்பயணத்தில் மட்டுமல்ல கடலை 
நம்பியுள்ள அனைத்துமக்களுக்கும் அந்தோனியார் அருள்புரிய வேண்டும் என்பதே மோசெஸ் எனும் இந்திய பக்தர் ஒருவரின் வேண்டுதலாக இருந்தது.
கடந்த வாரம்19 ஆம் திகதி வெள்ளிக்கிழமைஆரம்பமான கச்சதீவு வருடாந்த திருவிழா 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை திருப்பலி ஒப்புகொடுத்தல் மற்றும் விசேட ஆராதனை நிகழ்வு யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானபிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து 300 இற்கும் மேற்பட்ட மதகுருமார்கள் கலந்துகொண்டமை விஷேட அம்சமாகும்.

அன்று காலை ஏழுமணிக்கு ஆரம்பிக்கப்பட்ட திருப்பலி ஆராதனை முற்பகல் 11.30 மணியளவில் நிறைவடைந்ததை தொடர்ந்து வருகைதந்த பக்தர்கள் அனைவருக்கும் சிரமம் பாராது மதகுருமார்கள் , மக்கள் கூடி பிரார்த்தனை செய்த இடத்துக்கே சென்று நற்கருணை வழங்கினர். 


வாழ்வாதாரத்துக்கு வழிசெய்ய கடல் தாண்டும் எனது உறவுகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என ஓர் தாய் அந்தோனியாரிடம் மன்றாடினார். இன  ,மத , மொழி  வேறுபாடுகளை கடந்து பங்குனி வெயிலில் வெந்து வேண்டுகின்ற வேண்டுதல்கள் எல்லாம் அந்தோனியாரை நோக்கியே இருந்தன.
புழுதித் தரையிலும் , காட்டுக்குள்ளேயும் கூடாரங்களை மக்கள் அமைத்துக்கொண்டு இந்து சமுத்திரத்தில் நீராடி மகிழ்ந்தனர். குழந்தைகள் 
சிறுவர்கள் பெண்கள் எனப் பலரும் சமுத்திரத்தின் ஓரம் விளையாட படகில் 
வந்த களைப்பில் சிலர் பாய்போட்டு களைப்பாரினர். 

தீவின் முகப்பில் இலங்கை நாட்டின் வாசனைதிரவியங்கள்  ,சவர்க்காரங்கள் , தேயிலை , ஆடை , நிலக்கடலை என வியாபாரம் புழுதி பறந்தது. அதேபோல இந்திய பொருட்களும் பண்டமாறின.

பாதுகாப்பு கடமைகளுக்கென இலங்கை கடற்படை பொலிஸ் என்பவற்றுடன் ஒரு நீதிமன்றமும் தயார் நிலையிலிருந்ததை காணக்கூடியதாய் இருந்தது. 
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்னும் நாமத்தை உச்சரித்து கண்ணீர் சிந்தி வழிபட்டவர்கள் இரு நாட்டு மீனவர்கள் மட்டுமல்ல வெளிநாட்டு பக்தர்களும் தான்.

இலங்கை , இந்தியா என்ற வேறுபாடு எமக்குள் இல்லை நாம் மனிதர்கள் மீன்பிடி எமது தொழில் எம் தொழில் சார்ந்தவரை மட்டுமல்ல அனைவரையும் அந்தோனியார் காக்கவேண்டும் என்கிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேரி. 
இந்தியாவில் தான் நாங்களும் யுத்தகாலத்தில் தஞ்சம் புகுந்தோம். எமக்கு அடைக்கலம் தந்த அவர்கள் செல்வச்செழிப்போடு இருந்தால் மனதுக்கு நிம்மதி என்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மயூரன் கூறுகின்றார்.
இவ்வாறாக மனித மனங்கள் இருந்துவிட்டால் பிரச்சினைக்கு இங்கு வழி ஏது? இந்த விவகாரத்தில் அரசியல் லாபம் கருதிய அரசியல் தலைவர்கள்தான் பிரச்சினைக்குரியவர்கள் என்று கச்சதீவு திருவிழா உணர்த்தியது.
திருவிழாவுக்காக வந்தவர்களை வழிபாடு முடித்த கையோடு வீடு திரும்ப விடாமல் அமைச்சர் , ஆளுநர் , தளபதிகள் என  துரத்தி துரத்தி கருத்துக்கேட்ட ஊடகங்களும் பிரிவினைவாதத்துக்கு துணையானவர்கள் என்று கூறாமல் இருக்க முடியவில்லை.காரணம் அவர்களின் கேள்விகள் அந்த கோணத்தில் இருந்தன.

பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் , வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே , இலங்கை கடற்படைதளபதி 
ரவீந்திர விஜேரட்ண , யாழ்ப்பாணத்துக்கான இந்தியதூதுவர் நட்ராஜன் , வடமாகாண அரச அதிபர் மற்றும் இலங்கை இந்திய கடற்படை அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர். ஞாபகார்த்தமாக கச்சதீவில் இருநாட்டு அதிகாரிகளும் தென்னைமரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.அந்த கணம் மரத்துடன் பிரச்சினை வளராமல் இருந்தால் சரி என்று அப்போது ஓர் குரல் கேட்டது. நியாயத்தின் குரலோ.

கச்சதீவு திருவிழா என்பது வரலாற்றில் முக்கியம் பெற இருநாட்டு மக்களின் ஒன்று கூடலே காரணம். எல்லை தாண்டி வரும் மீனவர்கள் பிரச்சினையை தவிர, கச்சதீவு திருவிழா ஓர் இணக்கப்பாட்டுக்கான தளம். 
ஏ.ஜெயசூரியன்




No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...