Saturday, February 27, 2016

மீனுக்கும் எல்லை இல்லை மீனவனுக்கும் எல்லை இல்லை

இந்திய மீனவர் சங்கத்தின் ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தலைவர் எமிரேட்
கடல் வளம் குறையவில்லை மீன் பிடிக்க பிடிக்கத் தான் மீன்வளம் பெருகும். அள்ள  ஊறும் குளம் போன்றது தான் கடல் வளம். எல்லைகள் என்பது இரு
நாட்டு கடற்படைகளுக்கே தவிர மீனவர்களுக்கு இல்லை. இந்திய மீன் இலங்கை மீன் என்று பிரிக்க முடியாது. மீனுக்கும் எல்லை இல்லை மீனவனுக்கும் எல்லை இல்லை. இதில் இரு நாட்டு அரசாங்கமும் பிடிவாதத்தை கைவிட்டு மீனவர்களின் நலனுக்காக பேச முன்வரவேண்டும் என்கின்றார் அனைத்து இந்திய மீனவர் சங்கத்தின் ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தலைவர் எமிரேட்.

கச்சதீவு திருவிழாவுக்காக வந்த அவரை ஞாயிறு தினக்குரலுக்காக பேட்டி கண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அப்படி அவர்கூறிய சில விபரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. 

கேள்வி- எல்லைதாண்டிய மீன்பிடியை இந்திய மீனவர்கள் 
ஏ ற்றுக்கொள்கின்றார்களா?

பதில்-இந்திய மீனவர்கள் நாங்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கிறோம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நானும் எல்லை தாண்டவில்லை.பாரம்பரியமாக  எனது பாட்டன் முப்பாட்டன் மீன்பிடித்த இடத்தில் நானும் இன்று மீன் பிடிக்கின்றேன். புதிதாக ஒரு இடத்தில் நான் மீன்பிடிக்கவில்லை.1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் இந்திய இலங்கை கடலெல்லை வரையறுக்கப்பட்டு இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டார்கள் சிறை பிடிக்கப்பட்டார்கள். உடைமைகள் பறிக்கப்பட்டன. அவர்களில் 2000 பேர் இன்னும் ஊனமுற்ற நிலையில் வாழ்கின்றனர். 

எங்களுடைய வாழ்வாதாரம் இந்த இடத்திலேயே இருக்கிறது. இலங்கை இந்தியாவின் நட்பு நாடு. இருந்தாலும் , இதில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் இந்திய மீனவர்களே.ஆரம்பத்தில் ஏன் இந்திய மீனவர்களை தாக்குகின்றீர்கள் என இலங்கை கடற்படையிடம் கேட்டோம் அதற்கு எல்.ரி.ரி.ஈ யார் மீனவர்கள் யார் என்று தெரியாததால் தாக்குதல் நடத்தினோம் என்றனர். 

இன்று யுத்தம் முடிந்து விட்ட நிலையிலும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்கிறது. 20 லட்சம் , 25 லட்சம் ரூபா பெறுமதியான படகுகளை கைப்பற்றி வருகின்றனர். அந்த ஒரு படகை நம்பித் தான் 30 மீனவர்களுடைய வாழ்வாதாரமே இருக்கிறது. இதனால் அந்த மீனவர்கள் கூலித்தொழில் செய்கின்றனர். எல்லை தாண்டுவதாக கூறப்படுவது தொடர்பாக இரு நாட்டு அரசாங்கங்களுமே முடிவெடுக்கவேண்டும்.

2004 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை நடந்தது. இன்று 14 வருடங்கள் கடந்த நிலையில் இன்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைகளை நடத்தும் போதெல்லாம் இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்களை எல்லை தாண்டிவரக்கூடாது என்று கூறுகின்றனர். அதனால் பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாமல் இருக்கின்றது. 

எதுக்குமே கால அவகாசம் வழங்கி பேச்சுவார்த்தைகளை நடாத்தினால் இரு 
நாட்டு மீனவர்களுக்கும் மீன்பிடிக்க வழிசெய்யலாம். பிரச்சினை இல்லாமல் பாரம்பரிய இடத்தில் மீன் பிடிக்கலாம். ஆனால் எல்லைதாண்டவே கூடாது என கூறமுடியாது.

இருநாட்டு அரசியல்வாதிகளுமே எங்களுடைய தொப்புள்க்கொடி உறவுகளை முறித்துக்கொள்ளும் விதமாக மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. என்றாலும் , எமக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றே நாம் நம்புகின்றோம்.

கேள்வி-பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு நீங்கள் கூறுவது என்ன?

பதில்-எனது தொப்புள்கொடி உறவுகளுக்கு கூறுவது சிங்கள மீனவர்கள் 
இந்தியாவை சுற்றி மீன்பிடித்து செல்கின்றனர். அதனால் எமக்கு பிரச்சினையில்லை ஆனால் சிங்கள மீனவர்கள் பயன்படுத்தும் 
தொழிணுட்பங்களை ஏன் இலங்கைத் தமிழ் மீனவர்கள் பயன்படுத்தவில்லை. 
அந்த தொழிணுட்பத்தை இலங்கை அரசாங்கம் தமிழ் மீனவர்களுக்கு வழங்கவேண்டும். இந்திய அரசாங்கம் எங்களுக்கு ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிக்க 60 லட்சம் ரூபா பெறுமதியுள்ள படகுகளை 30 லட்சம் ரூபாவுக்கு மானியமாக வழங்குகின்றது. 

கரையோரத்தில் கூண்டு மீன்களை வளர்க்கவென ஒன்பது லாடம் மானியம் வழங்குகிறது. இப்படி இலங்கை அரசாங்கம் தமிழ் மீனவர்களுக்கு உதவிகளை செய்தால்இருநாட்டு மீனவர்களின் பிரச்சினையும் குறையும். இந்திய அரசாங்கமே எல்லை தாண்டுவதை குறைக்கவேண்டும் என்று இறங்கி எமக்கு கூறவந்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தவேண்டும். 

பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். கால அவகாசம் வழங்க வேண்டும். இருநாட்டு மீனவர்களும் ஒருஇடத்தில் அமர்ந்து பேசினால் மீனவர் பேச்சுவார்த்தை ஒருநாளில் தீரும். ஆரோக்கியமான நிலை இருக்கின்றபோதே இரு நாட்டு அரசாங்கங்களும் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும்.

கேள்வி-சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்துவது சரியா? இதனால் கடல் வளம் அழிக்கப்படுகின்றதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்-சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை இந்தியர்கள் பயன்படுத்தினால் அவர்களது படகு இந்தியாவிலேயே பறிமுதல் செய்யப்படும்.அத்துடன் 
5 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்படும். இலங்கையில் இழுவை மடி தடை 
செய்யபட்டிருந்தாலும் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை. இருந்தாலும் , இலங்கையிலும் இழுவை மடிகளை பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள். நரம்புவளை மற்றும் அட்டை என்பன  இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது அது இலங்கையில் தடை செய்யப்படவில்லை. இப்படியாக ஒவ்வொரு நாட்டுக்குமிடையில் பல தொழில்முறைகள் வித்தியாசப்படுகின்றன. கண்டிப்பான முறையில் எந்த முறையில் எந்த வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கவேண்டுமென இரு நாட்டு மீனவர்களும் பேசவேண்டும். இது இரு நாடு அரசாங்கங்களும் நினைத்து செய்யவேண்டிய விடயம். 

கேள்வி-சர்வதேச கடல் எல்லை என்று ஒன்று  இருக்கின்றது உங்களுக்கு தெரியுமா இல்லையா?

பதில்-ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது ஒருநாட்டில் கடற்கரையில் இருந்து 200 நாட்டிக்கல் மைல்  தூரம் தான் இருக்கவேண்டும். ஆனால் மொத்தமாக 12 நாட்டிக்கல் மைல் தூரத்தை வைத்துக்கொண்டு சர்வதேச எல்லை ஒன்றை வகுத்தது இருநாட்டு அரசாங்கங்களும் செய்த தவறு. சர்வதேச சட்டம் இப்படியான குறுகிய கடல் பரப்பில் கடல் எல்லைகளை பிரிக்கக் கூடாது என்று கூறுகிறது. 

எல்லைகள் என்பது இருநாட்டு கடற்படைகளுக்கே தவிர மீனவர்களுக்கு இல்லை. இந்திய மீன் இலங்கை மீன் என்று பிரிக்க முடியாது. மீனுக்கும் எல்லை இல்லை மீனவனுக்கும் எல்லை இல்லை. இதில் இரு நாட்டு அரசாங்கங்களும் பிடிவாதத்தை கைவிட்டு மீனவர்களின் நலனுக்காக முன்வரவேண்டும். கடல் வளம் குறையவில்லை மீன் பிடிக்க பிடிக்கத்தான் தான் மீன்வளம் பெருகும். அள்ள அள்ளத்தான்  ஊறும் குளம் போன்றது தான் கடல் வளம்.

கேள்வி-இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது ஏன்?

பதில்-எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்கிறது. முன்பெல்லாம் 30 நாட்டிக்கல் தூரம் வந்து நாம் மீன்பிடிப்போம் இப்போது 12 நாட்டிக்கல் தூரம் வந்து தான் மீன்பிடிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலை மாறவேண்டும். கடலெல்லையில் சங்கிலியைப்போல இலங்கை கடற்படை குவிந்துள்ளது. இதனால் எங்களுக்கு எல்லை தாண்டி வரவும் முடியாதுள்ளது. படகையும் பறிகொடுத்து வாழ்வாதாரமும் இல்லாமல்  கஷ்டப்படுகின்றார்கள் .

கேள்வி- கச்சதீவு இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வாகுமா?

பதில்-கச்சதீவை இந்தியா தாரைவார்த்தது. இன்று அதனை கேட்டு வழக்குத் தொடுத்துள்ளது. இந்த கச்சதீவை எங்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுத்தால் 12 நாட்டிக்கல் வந்து பிடிக்கும் மீனை இன்னும் 10 நாட்டிக்கல் மைல் தூரம் வந்து மீன்பிடிப்போம். வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இந்திய அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு தமிழக மீனவர்களாகிய நாம் ஆதரவளிக்கின்றோம்.

கேள்வி- சர்வதேச கடல் எல்லையை தாண்டி மீனவர்கள் போதைப்பொருள் கடத்துவதாக கூறப்படுகிறதே?

பதில்-கடத்தல் செய்பவன் மீனவனே அல்ல அவ்வாறு கடத்தப்பட்டது உறுதி
செய்யப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். 2011 இல் கைது செயப்பட்ட ஐந்து மீனவர்கள் மீது பொய்யான வழக்கு போடப்பட்டதால் இந்திய மீனவர்கள் போராட்டம் செய்தார்கள். ஆனால் போதைப்பொருள் கடத்துபவர்களாக 
இருந்தால் கைது செய்யுங்கள் அதற்கு இந்திய மீனவர்கள் எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்க மாட்டார்கள்.
ஏ.ஜெயசூரியன்

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...