Monday, May 15, 2017

மலையக இன அழிப்புக்கு மோடியின் பதில் என்ன?

லங்கையில் மலையகத் தமிழர்கள் என அறியப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்து இருநூறு ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இவ்விருநூறு ஆண்டுகளில் மலையகத்திற்கு வருகைதரும் முதலாவது இந்தியப் பிரதமர் என்ற வகையிலும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மேல் அக்கறையுடையவர் எனும் ரீதியில் உங்களை மலையக மக்கள் சார்பில் வரவேற்கின்றோம்  இந்தப் பின்னணியில் இலங்கையில் வதியும் மலையகத் தமிழர்கள் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) பற்றியும், அவர்கள் எதிர் கொள்ளும் நெருக்கடிகள் பற்றியும் உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம் என மலையக சமூக ஆய்வு மையம் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள இந்திய தூதுவராலயத்தில் கடிதம் வழங்கியது. அக் கடிதத்தின் முழுவிபரம் இங்கு தரப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது பல்வேறு தேவைகளுக்காக (குறிப்பாக பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களாக) தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து பல இலட்சம் தமிழர்கள் குறிப்பாக இலங்கையின் மத்திய மலைநாட்டு பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டனர். இன்று இம்மக்கள் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 7மூ மாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (ஒரு காலத்தில் 13மூ மாக காணப்பட்டனர்).

1817 முதல் அமைந்த இம்மக்களின் வருகையானது தொடர்ச்சியாக 1956 வரை இடம் பெற்றது. இம்மக்களின் அயராத உழைப்பினாலேயே இலங்கையின் பெருந்தோட்டத்துறை வளம் கொழிக்கும் பூமியாக மாறியது. இன்றும் இலங்கையின் பெருமளவு அந்நிய செலாவணியை உழைத்து கொடுக்கும் மக்கள் பிரிவினராக இம்மக்களே உள்ளனர் .

1963 வரை இம்மக்களே இலங்கையின் இரண்டாவது பெரிய சனத்தொகையை கொண்ட இனமாக காணப்பட்டனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1964 இல் மேற்கொள்ளப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலமும், 1974 இல் மேற்கொள்ளப்பட்ட சிறிமா - இந்திரா ஒப்பந்தத்தின் மூலமும் இம் மக்களில் சரி அரைவாசிப் பேர் அவர்களின் விருப்பமின்றியே இந்தியாவிற்கு குடிப்பெயர்த்தப்பட்டனர். இவ்வாறு இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்ட மக்களில் மிகப்பெறும் எண்ணிக்கையானோர் தமிழகத்திலும் (குறிப்பாக நீலகிரி மாவட்டம்) அண்டை மாநிலங்களிலும் இன்று சொல்லில் அடங்கா துன்பங்களை அனுபவிப்பதை அறியக்கூடியதாக உள்ளது.

இவ்வாறே இலங்கையில் காலத்துக்கு காலம் ஏற்பட்ட இன வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட இம்மக்களில் கணிசமானோர் இன்று வடக்கே வன்னியில் குடியேறியுள்ளனர் .இந்நிலையில் மலையக பிரதேசங்களிலும், தெற்கிலும் வாழும் இம்மக்களின் மிகப் பெரும் எண்ணிக்கையானோர் பல்வேறு நெருக்கடிகளை அன்றாடம் சந்தித்து வருகின்றனர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இம்மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கருத்தடை காரணமாக இம்மக்களின் இன விகிதாசாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இலங்கையின் சராசரி குடிசன அதிகரிப்பானது 37.13% ஆக இருக்கும் நிலையில் இந்திய வம்சாவளி மலையகத் தமிழரின் அதிகரிப்பானது 2.55% மாக மட்டுமே உள்ளது. (இதே வேலை முஸ்லிம்களின் அதிகரிப்பானது 80.78% மாக அதி உச்சத்தில் உள்ளது)

மலையகத் தமிழருக்கு சொந்தமாக காணி கிடையாது. கடந்த இருநூறு வருடங்களாக இம் மக்கள் காணி உரிமை அற்றவர்களாகவே உள்ளனர். மலையகத் தமிழர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் இம்மக்களின் செறிவுத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.

மலையகத் தமிழர்கள் ஐதாக வாழும் தென் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் , மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டம் போன்ற இடங்களில் இம் மக்கள் திட்டமிட்ட வகையில் இன மாற்றத்திற்கு குறிப்பாக சிங்கள - பௌத்தர்களாக மாற்றப்பட்டுக் கொண்டுள்ளனர். (இங்கு தமிழ் மொழி மூல பாடசாலைகள் அரிதாக காணப்படுவதால் சிங்கள மொழி மூலம் கல்விகற்று தங்கள் இனத்துவ அடையாளங்களை இழந்து வருகின்றனர்)

இம் மக்களின் வாழ்வாதாரமாக உள்ள பெருந்தோட்டப் பொருளாதாரம் இன்று திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டு தரிசு நிலங்களாக மாற்றப்பட்டு மக்கள் சிதறடிக்கப்படுகின்றார்கள். வேறு தொழில்களை நோக்கி மறைமுகமாக தள்ளப்படுவதால் இம் மக்கள் வாழ்ந்த பூமியிலிருந்து விரட்டப்படுகின்றார்கள்.

படித்த இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புகள் இம் மக்கள் வாழும் பிரதேசங்களில் உருவாக்கப்படுவதில்லை. இதனால் இவர்கள் வேலைதேடி கட்டாயமாக வேறு நகர்ப் பகுதிகளுக்கு இடம் பெயரவேண்டியுள்ளது. இதனாலும் இம் மக்கள் சிதறடிக்கப்பட்டு செறிவாக வாழும் நிலையை இழந்து கொண்டு வருகிறார்கள்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்பிற்கேற்ப ஊதியம் வழங்கப்படுவதில்லை. மிக குறைந்த ஊதியமே வழங்கப்படுகின்றது.

கல்வி நிலையில் சமமான வளப்பங்கீடு இம் மக்கள் வாழும் பிரதேசங்களில் வழங்கப்படுவதில்லை. இம் மக்கள் வாழும் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் உயர் தரம் கணித, விஞ்ஞான துறையில் படிப்பதற்கு போதிய கட்டட, ஆய்வு கூட மற்றும் ஆசிரியர் வசதிகள் கிடையாது. இதனால் மருத்துவர்களும் பொறியியலாளர்களும் இச் சமூகத்திலிருந்து வருவது மிகவும் குறைவாகவே உள்ளது.

இதே போல் இலங்கையில் ஒவ்வொரு சமூகம் சார்ந்தும் பல்கலைக்கழகங்கள் இருந்த போதிலும் , மலையகத் தமிழர்கள் சார்ந்து ஒரு பல்கலைக்கழகம் இல்லாத குறையும் காணப்படுகின்றது.

மலையகத் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் மொழி அமுலாக்கம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இதனால் அன்றாட தேவைகளை நிறைவு செய்து கொள்வதில் இம் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

இம் மக்கள் வாழும் இடங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்படுவதோடு, இம் மக்களிடையே மிகவும் குறைந்த போஷாக்கு நிலையே காணப்படுகின்றது. இதனால் இலங்கையிலேயே அதி கூடிய மாணவர் இடை விலகல் இச் சமூக மாணவர்களிடத்திலேயே காணக் கூடியதாக உள்ளது.

மேற் போன்ற பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு மூல காரணம் இந்த நாட்டில் மலையக மக்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படாமையே ஆகும். எனவே உங்களது வருகையும் உங்களது எதிர்கால செயற்பாடுகளும் மலையக மக்களை இந்நாட்டில் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க உதவும் என்று நம்புகின்றோம். இதனடிப்படையில் நாம் உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வந்த மேற் சொன்ன விடயங்களையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுத்து இம் மக்களின் எதிர்கால இருப்பிற்கு உதவுமாறு தயவுடன் கேட்டு கொள்கின்றோம்.

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...