Monday, May 15, 2017

யார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கொண்டாடுவது?

தாயின் பெயரையும் பிள்ளைக்கு முதலெழுத்தாக வைக்கவேண்டுமென்ற ஒரு ஆணின் போராட்டமும் வெற்றியும்

வதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்று எம்மில் பலர் பெண்கள் பற்றிபெருமையாக பேசிய அடுத்த கணமே அவளா என்று ஓர் வித ஏளனமாக பார்க்கும் சமூகத்தில் நாம் வாழ்கின்றோம். இங்கு ஆவதும் பெண்ணாலே என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதில் ஓர் உண்மையான தத்துவம், பெண்களால் மட்டுமே கருத்தரித்து குழந்தையை பிரசவித்து மனிதனை ஆளாக்க முடியும்  என்றும் கூறப்படுகிறது.

ஆணுடன் கொண்ட உடலுறவினால் பெண்ணொருத்தி தாய்மையடைந்து, பத்து மாதம்பிள்ளையை வயிற்றிலே சுமந்து, பெற்று, பிள்ளையை வளர்த்து ஆளாக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். இதில் ஆணுடைய பங்கை விட பல மடங்கு கடமை, பொறுப்பு பெண்ணுக்கே அதிகமாக உரித்தாகிவிடுகிறது. இலங்கை போன்ற நாடுகளில்இது மரபு ரீதியாக தொடரப்படுகிறது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பெண்ணுக்கு ஆணை விட குறைந்த மதிப்பும் முன்னுரிமையுமே வழங்கப்படுகிறது.


தனதுபிள்ளைக்காக மறுபிறப்பு எடுத்த தாயின் பெயரைக்கூட பிள்ளைக்கு
முதல்பெயராகவைத்துக்கொள்ளமுடியாத துர்ப்பாக்கசாலியாகிறாள் தாய்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பின்
நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே என்ற கவிஞர் புலமைப் பித்தனின் வார்த்தைகளுக்கு பதில் புது வார்த்தைகள் இன்றும் உருவாக இல்லை.

பெண்ணில்லை என்றால் மனித குலம் இல்லை என்று பெருமைப்படுத்துகின்றார்கள். எதுவரை இந்தப் பெருமை தனது பிள்ளையின் பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் கூட தனது பெயரின் ஒரு எழுத்தைக் கூட அனுமதிக்காத இந்த சமூகத்தின் பெருமை எதற்கு? தாய்க்கு சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்குவது இல்லை. இப்படி எழுதுவோம் பேசுவோம். ஆனால், யாரும் அதற்காக குரல்கொடுப்பதில்லை.

இப்படியான ஒரு நிலையில் தனது பிள்ளையின் பெயருக்கு முன்னால் தனது மனைவியின் பெயரையே போடவேண்டும் என கடந்த எட்டுவருடமாக போராடி வெற்றி கண்டுள்ளார் வீரசிங்கம் என்ற தனிமனிதன்.

|நம்ம குடும்பத்துல எல்லாம் இப்படி யாருக்கும் பெயர் வைச்சது இல்ல"
எனமுதலாவதாக எதிர்ப்புக் கிளம்பியது. "இது என் குடும்பம் என் பிள்ளையைபெற்றெடுக்க என் மனைவிதான் அதிகமாக பாடுபடுகிறாள். அவளுக்கு நான் முன்னுரிமை கொடுக்கவேண்டும்" என குடும்பத்தில் எழுந்த முதலாவது கேள்விக்கு பதிலடி கொடுத்தேன் என்கிறார் வீரசிங்கம்.

வீரசிங்கத்தின் மனைவியின் பெயருக்கு முன்னுரிமை கொடுத்து அதன் பின்னர் தந்தையின் பெயரை வைக்கவேண்டுமென வீரசிங்கம் விரும்புகிறார். "ஆணாகிய நான் எனது பிள்ளையை சுமந்து பெறவில்லை. நான் தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டேனே தவிர கருவை நான் சுமக்கவில்லை. அது ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். கரு உருவாகும்போது பெண்களினிடத்தில் ஏற்படும் வேதியல் மாற்றங்கள், வாந்தி, தலைச் சுற்று, சுமை என்று மட்டுமல்லாமல் கரு உருவாக்கி பிள்ளையாக பிறக்கும் வரையில் வயிறு, முதுகு கால் என பல வகையான பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கிறாள். இதில் சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை என உயிருடன் போராட்டமே
நடக்கிறது.

எத்தனை குழந்தைகள் இறக்கின்றன. எத்தனை தாய்மார்கள் இறக்கின்றனர். பிரசவத்துக்கு போன ஆண் இறந்ததாக என்றாவது ஒரு தகவல் வந்திருக்கிறதா?  இறப்புக்கு பல காரணங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் முகம் கொடுப்பவள் கருவை சுமைக்கு தனியொரு பெண் தான். இதனால் தான் குழந்தையை பெற்ற பின்னர் அவளை மறுபிறப்பு பெற்றவள் என்கின்றனர்.

குழந்தையை பெறாவிட்டால், குழந்தை இறந்தே பிறந்தால் அல்லது குழந்தையை பெற தாமதமானாலோ அதே சமூகம் அவளை எந்தளவுக்கு நிந்திக்கிறது. இத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்து குழந்தையை பெற்றெடுத்தாலும் ஆணின் பெயர் மட்டுமே குழந்தைக்கு முன்னால் வைக்கப்படுகிறது.

யார்பெற்ற பிள்ளைக்கு யார் உரிமைகொண்டாடுவது? மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தாய்க்கு முதலிடம் கொடுப்பதும் அன்னையர் தினத்தில் தாயை வாழ்த்துவதும் சட்டரீதியாக அமையாது.

இது ஒரு ஆணாதிக்க சித்தனையால் உருவான வழிமுறை என்கிறார் வீரசிங்கம். பிறப்புச்சான்றிதழில் தாயின் பெயரையும் தந்தையின் பெயரையும் தனித்தனியே தான் பதிக்கின்றார்கள். ஆனால், தந்தையின் பெயர் தான் முன் வருகிறது இது எப்படி எங்கு நடந்தது என்று ஆராய்ந்ததில் வங்கி மற்றும் பாடசாலைகள் என்பனவே இந்த தவறை செய்வது அறியமுடிகிறது. குழந்தை பிறந்ததும் சிலபெற்ர்கள் வங்கி கணக்கொன்றை பிள்ளையின் எதிர்காலத்துக்காக ஆரம்பிக்கின்றார்கள்.

இன்னும் சிலர் பாலர் பாடசாலை அல்லது பாடசாலைக்கு
அனுப்புகின்றனர். இந்த இரு சந்தர்ப்பங்களில் தான் குழந்தையின் பெயர்
முதன் முதலாக பதியப்படுகிறது. இங்கு வழங்கப்படும் பெயர் தான் அந்த
குழந்தையின் வாழ்நாள் முழுக்க பயன்படுத்தும் பெயராகயிருக்கிறது.

அநேகமாக இங்கு தந்தையின் பெயர் என்ன என்ற கேள்வி தான்
கேட்கப்படுகிறது. முதல் எழுத்துக்காக தந்தையின் பெயரை மட்டுமே அவர்கள் கேட்கிறார்கள்.

இங்கு தான் அந்த தவறு நியாயப்படுத்தப்படுகிறது. மேலும், ஏன்
தந்தையையே மட்டும் முதலெழுத்தில் எழுதுகின்றீர்கள் என யாரும் கேட்டது இல்லை. மேலே குறிப்பிட்ட இரண்டு சந்தர்ப்பங்களுக்கும் வீரசிங்கம் முகம் கொடுத்துள்ளார். தந்தையின் பெயரை மட்டுமே இது  நாள் வரைக்கும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றார்கள். எனவே, உங்களது மகளுக்கும் உங்களது பெயரைத்தான் போடுவோம் என வங்கியும் பாடசாலை நிர்வாகமும் விடாப்பிடியாய் இருந்துள்ளது.

தந்தையின் பெயரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என சட்டம் இருக்கிறதா அல்லது உங்களது நிர்வாக சுற்று நிருபம் இருக்கிறதா? என வீரசிங்கம் கேட்ட கேள்விக்கு வங்கி மற்றும் பாடசாலை நிர்வாகத்தால் பதிலளிக்க முடியவில்லை.

இலங்கை ஆட் பதிவு திணைக்களத்தில் இது தொடர்பான சட்டங்கள் எதுவும் இல்லை. பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் மட்டுமே வழங்கப்படுகிறதே தவிர, பெயரை தீர்மானிப்பது குறித்த பெற்றோர்களே. வெளிநாடுகளிலும் இதே பிரச்சினை தான் இருக்கிறது என்ற நிலையில் இது தொடர்பாக இலங்கை பதிவாளர் நாயகத் திணைக்களத்துக்கு வீரசிங்கம் கடிதம் மூலம் விளக்கம் கோரி இருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள பிரதி பதிவாளர் நாயகம் ஜி.ஏ.எல்.டி கனெபொல தமிழ் பாரம்பரிய முறைப்படி குழந்தையின் பெயருக்கு முன்னால் பெற்றோரின் பெயர் குறிப்பிடப்படுகிறது. இதற்கு சட்டரீதியான எவ்வித சரத்துக்களும் இலங்கையில் இல்லை. எனவே, உங்களது விருப்பத்தின் படி தாயின் பெயரை முதலிலும் தந்தையின் பேரை எடுத்ததாகவும் பின்னர் குழந்தையின் பெயரையும் எழுதலாம் என தெரிவித்துள்ளார்.

தாயின் பெயர் பிள்ளைக்கு முதல் எழுத்தாக அமைய வேண்டும் என்ற கருத்தை கடந்த எட்டு வருடங்களாக  தனது பிள்ளையின்  பெயர் பாவிக்கும் இடத்திலெல்லாம் விளக்கம் கொடுத்துவந்த வீரசிங்கத்திடம் தற்போது ஆவணம் இருக்கிறது. இந்த தனி மனிதனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, கணவனை இழந்து தனது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய
தாய்மாருக்கும், பிள்ளைகளுக்கு பாதுகாவலராக இருக்கும் பெண்களுக்கும் மன உறுதியை ஏற்படுத்திடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

 ஆசிய நாடுகள் குழந்தை பிறந்தவுடன் பெயர் வைக்க விழா எடுத்து கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறது ஆனால், குழந்தையை இந்த உலகத்துக்கு வழங்கியவளை கொண்டாடுவது இல்லை. குழந்தை ஆண்களின் வீரியத்தால் மட்டும் வெளிவந்த உருவம் அல்ல. பெண்ணின் அர்ப்பணிப்பால் வெளிவந்த கருவும் கூட என்பதை வீரசிங்கத்தின் இந்த செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. இதற்கு பின்னர் தாய்க்கு இனி எத்தனை பேர் முன்னுரிமை கொடுக்கக்போகிறோம்?

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...