Tuesday, February 7, 2017

மனிதவள நிறுவனங்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை

42 நாட்களாக தொடரும் சத்தியாகிரக ஆர்ப்பாட்டத்தின் பின்னணி

கிட்டத்தட்ட ஒன்றறை மாதங்கள் வீதியில் இறங்கி போராடும் அந்த மக்களை யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இன்றுடன் 42 நாட்களாக வீதியில் கிடைக்கும் மனிதர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது அரசாங்கம் மீதான வெறுப்பை அதிகரிக்கவைக்கிறது என்கின்றனர் ஆர்ப்பாட்டக்காரர்கள். இலங்கை தகவல் தொடர்பாடலில் தவிர்க்கமுடியாத ஒரு நிறுவனத்தில் முழுநேர வேலையாட்கள் 2100 பேரை நிரந்தரமாக்கும் படி மட்டுமே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துக்கான வரவுசெலவு திட்டத்தில் இவர்களை நிரந்தரமாக்குவதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியும் வாக்குறுதியளித்துள்ளார், துறைக்கு பொறுப்பான அமைச்சரும் வாக்குறுதியளித்துள்ளார். இருந்தபோதும் இவர்களது வேலை நிரந்தரமாக்கப்படவில்லை. ஆனால் இந்த வேலைகளுக்காக ஆட்கள் புதிதாக உள்வாங்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றார்கள். 

பதவியை நிரந்தரமாக்குமளவுக்கு இவர்களுக்கு தகுதிகள் இல்லை என்று ஒரு பொய்யான கருத்தை குறித்த நிறுவனத்தின் தொழிற்ச்சங்கம் ஊடகங்களுக்கு தெரிவித்தது. தகுதிவாய்ந்தவர்களை மட்டுமே தெரிவுசெய்து எந்தெந்த கம்பனிகளில் வெற்றிடம் இருக்கின்றதோ அங்கு ஆட்களை அனுப்பும் அரசாங்கத்துடன் கூட்டிணைக்கப்பட்ட ஒரு மனிதவள நிறுவனமே ஸ்ரீலங்கா டெலிகொம். இங்கு நிறைந்த ஊழியர்களாக அரசாங்க சம்பளம் பெறுபவர்களை விடவும் தற்காலிக பணியாளர்களாக வேலைசெய்பவர்களே அதிகம். 

டெலிகொம் நிறுவனத்துடன் சுமார் ஒன்பது இணை நிறுவங்கள் இருக்கின்றன. அதற்கான பணியாளர்கள் நேரடியான அரசாங்க ஊழியர்களாக எடுத்து நிரந்தரமாக்குவதில்லை. பதிலாக மனிதவள நிறுவனங்களிடமிருந்து தங்களது நிறுவனத்துக்கு பொருத்தமானவர்களை தற்காலிகமாக பெற்றுக்கொள்கின்றன. மனிதவள நிறுவனத்திலிருந்து செல்லும் ஊழியர் ஒருவர் அரசாங்க நிறுவனங்களில் கிட்டத்தட்ட அரசாங்க ஊழியராகவே வேலை செய்வார். ஆனால் அவர் அரசாங்க ஊழியர் அல்ல. அவர்களுக்கான சம்பளத்தை அரசாங்கம் மனிதவள நிறுவனத்துக்கு வழங்கும். அவர்களினூடாக குறித்த ஊழியர் சம்பளத்தை பெற்றுக்கொள்வார். மாறிவரும் தகவல் தொழில்நுட்பங்களுக்கு இந்த தற்காலிக ஊழியர்கள் மட்டுமே மாற்றம் காணுவார்கள். அரசாங்க ஊழியர்களை பற்றித்தான் தெரியுமே. அரசாங்கம் சம்பளம். வேறு எந்தவிதமான முன்னேற்றமும் தேவை இல்லை. பதவி உயர்வுகள், கல்வி தராதரம் பார்க்காமல் பக்கச்சார்பாக வழங்கப்படும். 

அரசாங்க ஊழியர்களுக்கு இணையாக வேலை செய்யக்கூடிய மனிதவள நிறுவன ஊழியர்களை அரசாங்க ஊழியர்களாக பதவியில் நிரந்தரமாக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு. காரணம் மனித வள நிறுவனத்தை தாண்டி ஊழியர்கள்  பதவிகளுக்கு சேர்க்கப்படுவதில்லை. அரசாங்கம் முறையாக வர்த்தமானி அறிவித்தலின்படி வெளியிடும் பதவி வெற்றிடங்களை உயரதிகாரிகள் தங்களுக்கு தேவையானவர்களை சிபாரிசு அடிப்படையில் சேர்ப்பார்கள். என பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இருப்பினும் வருடத்துக்கு ஒருமுறை எப்போதாவது ஒரு தடவை அபூர்வமாக மனித வள நிறுவனத்திலிருந்தவர்கள் தற்காலிக  நிரந்தரமாக்கப்படுவார்கள்.  அதுவரை மனிதவள கம்பனிகள்தான் இலங்கையிலுள்ள தொழில் துறையினர்களின் தலைவிதியை தீர்மானிப்பதாக இருக்கிறது.ஆனால் ஒருவிடயம் இங்கு உறுதியாக தெரியும் அதாவது தகுதி அடிப்படையில் மாத்திரமே மனிதவள கம்பனிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

அரசாங்கத்திற்கும் அரச நிறுவங்களுக்கும் சொந்தமான  53  வீத பங்குகளை இணைத்துக்கொண்டு நாட்டில் இணையத்தளம் மற்றும் வலையமைப்பை மேற்கொண்டுவரும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திலும் இதே நிலைமைதான். மனிதவள கம்பனிகளால் ஊழியர்கள் சேர்க்கப்பட்டு வேலைகள் நடக்கின்றன. இங்கு  மட்டுமல்ல இலங்கை தொழிற்துறையே மனிதவள கம்பனிகளில்  சிக்கியிருக்கின்றன.

சுமார் 17 வருடங்களாக டெலிகொமில் வேலை செய்யும் ஜயரத்ன என்னும்  ஊழியர் குறிப்பிடுகையில், தற்போதுள்ள மனிதவள நிறுவனத்தைவிட இதற்குமுதல் மூன்று மனிதவள நிறுவனங்கள்  (manpower agency)  டெலிகொம்மிற்கான ஊழியர்களை வழங்கிவந்தது. தற்போது  ஹியூமன் கெப்பிட்டல் சொலுஷன்  (human capital solution) என்ற மனிதவள நிறுவனமே இருக்கிறது. அதற்கு கீழ் டெலிகொம்மில் 2100 பேர் நிரந்தரமாக்குவதற்கு தகுதியான வகையில் வேலை செய்கின்றனர். இந்த நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் டெலிகொம்மின் ஊழியர்களாக வேலைசெய்கின்றனர். அவர்கள் அங்கு நிறைவேற்று அதிகாரமுடையவர்களாக இருக்கின்றனர். நான் ஒரு வாகன சாரதி நான் தற்போது 17 வருட அனுபவத்தை பெற்றுள்ளேன். நிரந்தரமாக்குவதற்கு எனக்கு தகுதி இல்லை என்கிறார்கள். அரசாங்க  வாகன சாரதிக்கான வெற்றிடங்களுக்காக வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியாகும் போது அதில் உள்ள தகுதிகளுக்கு நான் பொருத்தமானவனாக இருக்கிறேன். ஆனால் இவர்கள் தகுதி இல்லை என்கிறார்கள் என அவர் கவலையாக தெரிவித்தார். 

டெலிகொம்மில் தற்காலிக ஊழியர்களாக பணிபுரியும் மனிதவள நிறுவன ஊழியர்களை நிரந்தமாக்கும் வரை சத்தியாகிரக போராட்டம் டெலிகாம் கட்டிடத்துக்கு அருகிலேயே நடந்து வருகிறது. நாடுபூராகவும் உள்ள ஊழியர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். இன, மத, மொழி கடந்து ஒரே குடிலுக்கு கீழே 42 நாட்களை கடத்திவிட்டனர். இவர்களுக்கென ஒரு தொழிற் சங்கம் இல்லை. மனிதவள நிறுவனத்தில் தொழிற் சங்கம் அமைக்க முடியாது. நலன்புரி சங்கம் ஒன்று இருக்கிறது. அதன் உப தலைவரைத்தான் கடந்த மூன்று நாட்களாக இனம்தெரியாத நபர்கள் கடத்தி வைத்து குறித்த பதவியை விட்டு விலக வேண்டுமென கூறி அச்சுறுத்தியுள்ளனர். 

இந்த நிலையிலும் போராட்டம் தொடர்கிறது. கடந்த வாரம் ஜனாதிபதியை 
சந்தித்து விட்டார்கள்.  தொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் நேரில் வருவதாக கூறினார் ஆனால் வரவில்லை. பதிலுக்கு மனிதவள நிறுவன அதிகாரிகளுடனும் சில தற்காலிக ஊழியர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் ஊழியர்களை நிரந்தரமாக்குவதாக ஒப்புக்கொண்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடுங்கள் என்று கூறி கிளம்பிவிட்டார், ஆனால் மனிதவள நிறுவனம் மற்றும் டெலிகொம் அதிகாரிகள் அமைச்சர் கூறிய படி உடன்படிக்கையை தயாரிக்காமல் தங்களுக்கு ஏற்றவகையில் உடன்படிக்கையை தயார்செய்து கொண்டு வந்து கைச்சாத்திட கூறியதால் கோபத்தில் வெளியேறி உடன்படிக்கையை நிராகரித்துள்ளனர்.

அரசாங்கம் கூறியதை செய்தால், நாங்கள் ஏன் மனைவி பிள்ளைகளையும் கூட பார்க்காமல் ஒன்றரை மாதம் சம்பளமும் இல்லாமல் வீதியில் கிடக்கிறம் என யாழ்ப்பாணத்திலிருந்து சத்தியாகிரக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ள சிவேந்திரா கேட்கிறார். மேலும் எஸ்.எல்.டி.  ஊழியர்களாவே நாங்களும் வேலை செய்கிறம் ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் அரைவாசியை மட்டுமே மேன்பவர் ஏஜென்சி ஊடாக நாங்கள் பெறுகிறம். இந்த பாகுபாடு நிறுத்தப்பட்டு எங்களது தொழிலும் நிரந்தரமாக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

திருகோணமலையில் இருந்து கொழும்பு வந்து மழையிலும் வெயிலிலும் 
காய்வது சாதாரண விடயமல்ல. வீட்டில் மனைவி. பிள்ளைகள் தனியே இருக்கின்றார்கள். நான் இங்கே வீதியில் இருக்கிறேன். இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது. குழந்தைக்கு பால்மா வாங்குவதற்கும் பணமில்லை. கடன் எடுத்துள்ளேன், இந்த மாதம் சம்பளம் இல்லை. நான்கு மாத குழந்தை ஒன்றும் இரண்டு வயது பிள்ளை ஒன்றும் திருகோணமலையில் இருக்கின்றனர். இலங்கை தேசத்தை நேசித்து ஜனாதிபதி மைத்திரிபால நல்லது செய்வார் என  நம்பித்தான் வாக்களித்தோம். நிலைமையை பார்க்கும்போது இந்த நாட்டில் நான் இல்லாமல் வேறு நாட்டில் இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தை தோற்றுவித்துள்ளது. இன்று வரை நம்புகிறம் என தினேஷ் தெரிவிக்கின்றார்.

நாங்கள் பல தொழில்நுட்ப கல்விகளை கற்று தகுதியுடன் இருந்தும் எமக்கு தகுதி இல்லை என்று கூறுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதவள நிறுவனத்தை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த முறையை மாற்றவேண்டும் என்று தான் நாங்கள் கேட்கிறNhம். இப்பொது நாம் எடுக்கும் சம்பளத்துடன் எங்களை நிரந்தர ஊழியர்களாக உள்வாங்க வேண்டும்.தேசிய தொழிற்கல்வி சான்றிதழ்களுடன் தான் நாம் அனைவரும் இருக்கிறம். இன்று இந்த சத்தியாகிரக போராட்டத்துக்கு திருகோணமலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாணத்திலிருந்து 33 பேர் என பலர் கலந்து கொண்டுள்ளனர் என திருகோணமலையைச் சேர்ந்த ராஜேந்திரன் தெரிவித்தார்.

மூன்று வருடமாக யாழ்ப்பாண கிளையில் வேலை செய்யும் அர்ஜுன் இன்று ஒரு பட்டதாரி. இவர் ஆரம்பத்தில் எலக்ட்ரீஷியன் பதவிக்காக எடுத்திருந்தாலும் இன்று அவர் கடன் மூலம் தன்னை ஒரு பட்டதாரியாக்கி கொண்டுள்ளார். லண்டன் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் மின் தொடர்பாடல் பொறியியலாளராக (BA engineering electronic communication) இருக்கிறார். ஆனால் அவரையும் சேர்த்துதான் தகுதியில்லாதவர்கள் என கூறுகின்றார்கள்.

தற்போது 11 வருடங்களாக ஒரே பதவியில் வேலை செய்கிறேன் திருமணத்துக்கு கூட விடுமுறை தரவில்லை.குருநாகலில் இருந்து வந்து போகிறேன்.  தற்போது நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியதும் எங்களுக்கு வேலைக்கு வருமாறு கடிதம் வருகிறது. வராவிட்டால் வேலையில் இருந்து நீக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் பயப்படுகின்றனர். இதுவரை இரண்டு கடிதங்கள் வந்துள்ளன. அதற்கு பயந்து மூன்று பேர் வேலைக்குச் சென்றுள்ளனர். நான் ஆரம்பத்திலிருந்து மனிதவள நிறுவனத்தில் மூன்று நேர்முக பரீட்சை முடித்து தான் இந்த வேலைக்கு சேர்ந்தேன் என இரண்டு பிள்ளைகளின் தந்தையான எம்.கே.சி.பி.முதுகொட்டுவ தெரிவித்தார். இவர் இரண்டு வருடத்துக்கு மேலான தொழில்துறை டிப்ளோமாவை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

டபிள்யு.எஸ்.சுஜேரத்ன இலங்கைக்கான டேட்டாக்களை பராமரிக்கும் பிரிவில் வேலை செய்யும் இவர் உயர்தரத்தில் லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் உயர்தர டிப்ளோமா  ணதிணு4 மட்ட சான்றிதழுடன் இன்னும் பல தகுதிகளைக்கொண்டு வேலை செய்கிறார். இவருக்கும் தகுதி இல்லை என்கின்றனர்.

இவ்வாறு பலர் முக்கிய பதவிகளிலும் டெலிகொம்மில் வேலை செய்கின்றனர். ஆனால் இவர்களுடைய தொழிலை நிரந்தரமாக்குவதில் அரசாங்கத்துக்கு 
நஷ்டம் ஏற்படுவதாக கூறுவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விடயம். காரணம் இவர்களுக்கான சம்பளம் முதற்கொண்டு அனைத்தும் டெலிகொம் நிறுவனமே வழங்குகிறது. நேரடியாக வழங்காமல் மனிதவள நிறுவனத்தினூடாக வழங்குகிறது. இதில் அரசாங்கத்துக்கும் பங்குண்டு. இவர்களை நிரந்தரமாக்கிவிட்டால்  மனிதவள நிறுவனங்களின் செயற்பாடு முற்றாக இல்லாமல் ஆக்கப்பட்டு விடும் என்பதால் தான்  இந்த இழுபறி நிலை 
நீடிக்கிறது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மனிதவள நிறுவன பிடியிலும் அதன் வியாபாரத்திலிருந்தும் டெலிகொம் விடுபட்டால் மட்டுமே பிரச்சினை தீரும். 

நல்லாட்சியும் இதற்கு துணை போகிறது என்பதே மக்களின் கவலை. அதுமட்டுமல்லாது 42 நாள் வீதியோரத்தில் படுத்துறங்கும் இவர்களுக்கான உணவும் மற்றும் மலசலகூட வசதிக்கும் எதுவுமே திட்டமிடப்படாததால் பலர் சிரமப்படுகின்றனர். அதற்கும்  சில டெலிகொம் ஊழியர்கள் சதி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் கொடுக்க வேண்டாம் என்றும் கூட கூறியுள்ளனர். உணவுக்காக பணம் சேர்க்கப்பட்டு அன்றைய உணவு தயார்செய்யப்படுகிறது. மேலும் ஆர்ப்பாட்டக்காரர்  ஒருவரின் வீட்டில் உணவு செய்து கொடுக்கப்படுகிறது.  ஆனால் இவர்கள் அந்த பகுதியிலுள்ள கடைத்தொகுதியினரின் உதவியால் உயிர்வாழ்கின்றனர் என்றே கூமுடியும். 

தம்மை பற்றிய தகவல்களை வெளியிட்டால் தங்களுக்கு கிடைக்கும் விளம்பரங்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் செய்தியை கூட  வெளியிடவில்லை. அப்படியாயின் இந்த ஊடகங்கள் நாங்கள் இறந்துகிடந்தால் வருவார்களா என்று கேட்பது, ஊடகம் இன்று விளம்பரத்துக்காக நடக்கிறது என்ற கருத்தை தருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

ஏ.ஜெயசூரியன்

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...