இலங்கை நாட்டில் முக்கியமான அரசியல் மாற்றம் நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்புடன் நாட்டு மக்கள் காத்துக்கொண்டிருந்த போது திடீரென ஒரு நபரின் கைது நாட்டில் சலசலப்பை உண்டுபண்ணியது.ஜே.வி.பி.தான் இந்த கைதுக்கு காரணம் ஜே.வி.பி.யின் பிரகாரமே கைது செய்யப்பட்டார். என்றும் கருத்துக்கள் வெளிவந்தன. பாராளுமன்றில் இப்போதைக்கு மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து செயல்படும் சிறந்த எதிர்க்கட்சிக்கான பண்புகளைக்கொண்ட கட்சி ஜே.வி.பி. மட்டுமே. இதற்கு அவர்களது பாராளுமன்ற கேள்வி கணைகளே ஆதாரம்.
அப்பேற்பட்ட அரசியல் கட்சி தனது அரசியல் லாபம் கருதி அரசாங்கத்துடன் இணைந்து ஒரு நபரை கைது செய்ய கூறியிருக்குமா என்பது இன்றும் கேள்வியாகவே உள்ளது. கைது நடந்தது உண்மைதான். கைது செய்யப்பட்டவர் ஜே.வி.பி.யின் முன்னாள் உறுப்பினர் குமார் குணரட்னம் என்பதும் உண்மைதான். கைது செய்யப்பட்டு ஒருவருடத்தி கடந்துவிட்டது. ஜே.வி.பி.யில் இருந்து வெளியேறிய குமார் குணரட்னம் உட்பட சிலர் சோஷலிச முன்னிலைக் கட்சி என்ற ஒரு கட்சியை உருவாக்கினர்.
அந்த முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினர் குமார் குணரட்னம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். கேகாலை மாவட்ட அங்குருவெல்ல பகுதியிலுள்ள அவரது தாயாரின் வீட்டில் இருந்தபோதே கைது செய்யப்பட்டார். அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னம், சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வருகைதந்து சட்டவிரோதமாக தங்கியிருந்தமையால், அவரைக் கைது செய்யுமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பொலிஸாருக்கு அறிவித்திருந்ததாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லக்சான் டி சில்வா கடந்த வருடம் தெரிவித்திருந்தார். மேலும் கைது செய்யப்பட்டுள்ள குமார் குணரட்னத்தை குடிவரவு குடியகல்வு திணைக்களம் பொறுப்பேற்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலடைக்கப்பட்ட நாள் முதல் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் அரசுக்கு எதிராக எதிர்ப்பு கோஷங்களும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தொடர்ந்து கொழும்பு புகையிரத நிலையத்துக்கு முன்னால் கொட்டில் அமைத்து சாத்தியகிரகமொன்றை முன்னெடுத்தனர். 385 நாட்கள் இந்த போராட்டம் தொடர்ந்தது.
குமார் குணரட்னம் ஒருதடவை நீதிமன்றில் வழங்கிய வாக்குமூலத்தில் கேகாலை பிரதேசத்தில் பிறந்த நான் இந்த நாட்டிலேயே பாடசாலைக் கல்வியைக் கற்றேன், 1985 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழக அனுமதி பெற்றேன். அந்த சந்தர்ப்பத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டு உறுப்பினராகவும் அக்கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பி முதலாளி வர்க்கத்துடன் இணைந்து செயற்படத் தொடங்கிய காரணத்தினால் 2011ஆம் ஆண்டு கட்சியை விட்டு விலகியதாகவும் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி முன்னிலை சோஷலிசக் கட்சி எனும் பெயரில் புதிய கட்சியொன்றை நிறுவியதாகவும், அன்று முதல் தனக்கு விடுக்கப்பட்டுவந்த உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தாம் இந்த நாட்டின் பிரஜாவுரிமையை மீள வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அதன் பொருட்டு நீதிமன்றின் தயவை நாடியதாகவும் குமார் குணரட்னம் கேகாலை நீதிமன்றத்தில் கூறியிருந்தார். மேலும் தமது அரசியல் பயணத்தை முடக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தது நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் யார்
அந்த முயற்சிகளை மேற்கொள்வது என அவர் குறிப்பிடவில்லை. குமார் குணரட்னத்தின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், வழக்கின் தீர்ப்பை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்தார். அன்றளவில் அவர் விடுதலை செய்யப்படுவார் என கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். எதிர்ப்பார்ப்பு தவிடு பொடியானது. குமார் குணரட்னத்துக்கு தளர்த்தப்பட்ட வேலையுடன் கூடிய ஒருவருட சிறைத்தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அனுராதபுர சிறைச்சாலையில் அந்த ஒருவருடத்தை கழிக்கவேண்டி ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கொழும்பு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்குள் பிரவேசித்தனர். இந்த தள்ளு முள்ளு தாக்குதலில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அன்று ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் குமார் குணரட்னம் விசாவுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று கூறியது. ஆனால் தாம் விசாவுக்கு மூன்று தடவைகள் விண்ணப்பித்ததாக கட்சியின் பிரசார செயலாளர் கூறுகிறார்.
முன்னிலை சோஷலிசக் கட்சியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாகவும் மலையகத்தின் பல பகுதிகளிலும் பொதுமக்களின் கையெழுத்துக்கள் பதிவுசெய்யப்பட்டன. குமார் குணரட்னத்தினை விடுதலை செய்யுமாறும் அவரின் குடியுரிமையை வழங்குவது மட்டுமின்றி சகல அரசியல் கைதிகளையும் விடுதலை
செய்யுமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதுவரை நீதிமன்றில் அவுஸ்திரேலிய குடியுரிமையைப் பெற்றுள்ள குமார் குணரட்னம் சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வருகை தந்து விசா காலம் முடிவடைந்த பின்னர் சட்டவிரோதமாக தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டு மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்ததாக முன்னிலை சோஷலிச கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். அதே நேரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குமார் குணரட்னத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் திட்டமிட்டே அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தாம் வெளிப்படையாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் கடந்த வருடம் சட்டத்தை எதிர்த்து முன்னிலை சோஷலிச கட்சியினரால் போராட முடியவில்லை. தண்டனைக்காலம் முடிவடையும்வரை காத்திருக்க வேண்டி இருந்தது. கடந்த ஒருவருட காலத்துக்குள் குடிவரவு குடியகல்வு திணைக்களம் குமார் குணரட்னம் அவுஸ்திரேலியா செல்ல தேவையான விசாவை வழங்கவில்லை. இன்று சிறை தண்டனைக்காலமும் முடிவடைந்துவிட்டது. அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து இம்மாதம் இரண்டாம் திகதி விடுதலையாகி வெளியேறினார்.
விடுதலையைத் தொடர்ந்து அன்றைய தினமே கொழும்பில் நடந்த சத்தியாகிரக போராட்டம் கைவிடப்பட்டு போராட்டக்காரர்களினாலேயே குறித்த கொட்டில் அகற்றப்பட்டது. கொழும்பு புகையிரத நிலையத்துக்கு முன்னாள் 385 நாட்கள் நடந்த சத்தியாகிரக போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி தனி மனித விடுதலைக்கு கிடைத்த வெற்றி அல்ல.இது வெளி
நாட்டிலுள்ளவர்களை இலங்கைக்கு வருமாறு கூறும் நல்லாட்சி அரசாங்கத்தின் எச்சரிக்கையே என்று கூறுகிறது சோஷலிச முன்னிலை கட்சி.
குமார் குணரட்னம் விடுதலை செய்த பின்னர் உடனடியாக
நாடுகடத்தப்பட மாட்டார். இலங்கை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படுமென அரச தரப்பு தெரிவித்துள்ளது. எவ்வாறான போதிலும், நல்லாட்சி என்று கூறும் இந்த அரசாங்கமானது குமார் குணரட்னத்தின் குடியுரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக ஜே.வி.பி.யின் முக்கிய உறுப்பினர்களுடன் குமார் குணரட்னவுக்கு கருத்து மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர் குமார் குணரட்ன்ம் தங்கியிருந்த இடங்கள் பாதுகாப்பது அச்சுறுத்தலுக்குள்ளாகியது. அக்காலத்தில் இருந்த வெள்ளை வான் கலாசாரமும் இவருக்கு பீதியை ஏற்படுத்தியது. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதி முன்னிலை சோஷலிச கட்சியின் முதலாவது
மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு மூன்று நாட்களுக்கு முதல் குமார் குணரட்னவுடன் கட்சியின் செயற்பாட்டாளரான திமுத்து அட்டிகல ஆகிய இருவரும் கிரிபத்கொடவில் வைத்து கடத்தப்பட்டனர். கடத்தப்படும் போது குமார் குணரட்னம் அவுஸ்திரேலிய நாட்டு பிரஜை என்பதால் இலங்கை அரசுக்கு பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் அவர் நாடுகடத்தப்பட்டார்.
1988- 1989 காலப்பகுதியில் தேசப்பிரேமி ஜனதா வியாபாரய அமைப்பின் திருகோணமலை மாவட்டதலைவராகவும் ஜேவிபியின் ஆரம்பகால அடிமட்ட உறுப்பினராகவும் இருந்து கட்சி பணிக்காக தன்னை அர்ப்பணித்தவர் என்ற விடயத்தை ஜேவிபியினரும் மறப்பதற்கு இல்லை. இத்தகைய காரணிகளினால் தான் மீண்டும் ஒரு கட்சி வளர்ச்சியடைவதை எவராலும் தாங்கிக்கொள்ளமுடியவில்லை போலும். தமிழர் ஒருவரின் கைது பலரது அரசியல் வாழ்க்கைக்கு வழிவிட்டுள்ளது என்பதுடன் இவரது அரசியல் பலம் இனித்தான் பலம் பெறும் என்கின்றனர் கட்சியினர்.
அதேபோல இவருக்கு பிரஜாவுரிமை வழங்கப்படுமா? தற்போதுள்ள விசிட் விசா எத்தனை நாளைக்கு செல்லுபடியாகும் அதற்குள் அவர்
நாட்டை விட்டு வெளியேறுவாரா? என்பதுடன் இவருக்கு வழங்கவுள்ள பிரஜாவுரிமை தான் நல்லாட்சியின் வெளிநாட்டு வாழ் இலங்கையருக்கு வழங்கவுள்ள பிரஜாவுரிமை கொள்கை பற்றிய அச்சத்தை போக்கும்.
No comments:
Post a Comment