Thursday, December 1, 2016

முட்டை அடைகாக்கும் இயந்திரத்தால் வாழ்க்கை நடாத்தும் பெண்கள்...

சுனாமி என்றால் இன்றும் அச்சம் கொள்ள சுனாமி நல்லதை செய்யவில்லை பல உறவுகளை கடலுக்குள் இழுத்துக்கொண்டது. பலரை அனாதையாக்கியது இன்னும் பலரை உளநலத்தை பாதிக்க செய்தது ஓடித்திருந்த பிஞ்சு குழந்தைகளை முடமாக்கியது. கடலை வடிவில் வந்த கொடூரம் அது. அதிலிருந்து மீண்டு எழ சுமார் பதினான்கு வருடங்கள் எடுத்திருக்கிறது. உடமை உறவுகள் என பலதையும் இழந்து தனியாக இருக்கும் ஒரு சில பெண்களுக்கு ஆறுதலாக கோழி வளர்ப்பு அமைந்துள்ளது.

சுனாமியால் அதிகளவு பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் வாழும் அம்பாறை மாவட்டத்தில் வளர்ந்து வரும் கைத்தொழிலான  கோழிக்குஞ்சு வளர்ப்புக்கு அதிக கேள்வி இருப்பதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் EU-SDDP ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 12 லட்சத்து 84 ஆயிரம் ரூபா செலவில் திருக்கோவில் மற்றும் பொத்துவில் பகுதிகளில் சிறிய குஞ்சுகள் பொரிப்பகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலில்சிறிய குஞ்சுகள் பொரிப்பகம் ஒன்று 6 லட்சத்து 42 ஆயிரம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
முட்டை அடைகாக்கும் இயந்திரம் 
திருக்கோவில் பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிறிய குஞ்சுகள் பொரிப்பகத்தை, அன்னை சாரதா தேவி பெண்கள் அபிவிருத்திச்சங்கம்செயற்படுத்தி வருகிறது. இந்த அமைப்பில் 35 அங்கத்தவர்கள் காணப்படுகின்றனர். இதில், 16 விதவைகளும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் 2004 சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிய குஞ்சுகள் பொரிக்கும் நிலையத்துக்கு 750 முட்டைகளை அடைகாக்கும் வகையில் அடைகாப்பகம்,4 ஸ்ரோக் ஜெனரேற்றர்,தொழில்நுட்ப உள்ளம்சங்கள் மற்றும் வியாபார திட்டங்கள் தொடர்பான பயிற்சிகள் போன்றன மேற்படி சங்கத்துக்கு FAO இனால் வழங்கப்பட்டுள்ளது.திருக்கோவில் பகுதியில் அமைந்துள்ள ஒரே ஒரு குஞ்சுகள் பொரிப்பகமாக இது அமைந்துள்ளதுடன்,அன்னை சாரதா தேவி பெண்கள் அபிவிருத்தி சங்கத்தினால்இது இயக்கப்பட்டுப்பராமரிக்கப்படுகிறது. கால்நடை வளர்ப்பு, சுகாதார திணைக்களத்தினால் இந்த நிலையத்துக்கு விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டு குஞ்சு பொரிப்பகத்தின் செயற்பாடுகள் மேற்பார்வை செய்யப்படுவதுடன், தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன.

திருக்கோவிலில் அமைந்துள்ள சிறிய குஞ்சுகள் பொரிப்பகத்தினால்,உயர் தரம் வாய்ந்த குஞ்சுகள் நியாயமான விலையில் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுகின்றன. அம்பாறை மாவட்டத்தில் கொல்லைப்புற கோழிவளர்ப்புச்செயற்பாடுகளின் அபிவிருத்திக்கு இது பெருமளவு பங்களிப்பை வழங்குகிறது. மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவியின் கீழ், திருக்கோவில் பகுதியில் EU இனால் ஆதரவளிக்கப்படும் கொல்லைப்புற கோழி வளர்ப்பாளர்களுக்கு  இந்த குஞ்சுகள் பொரிப்பகம் முக்கியமான இணைப்பாக அமைந்துள்ளது.தற்போது 35 பெண்கள் (16 விதவைகள்,4 யுவதிகள்) அனுகூலம் பெறுகின்றனர். 

சுந்தரேஸ்வரி 
2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அன்னை சாரதா தேவி மத்திய நிலையத்தில் தன இந்த கோழி குஞ்சு அடைகாக்கும் இயந்திரம் இருக்கிறது. சுனாமியால் கணவனை இழந்த பெண்கள் மற்றும் யுத்தத்தால் கணவனை இழந்த பெண்கள்  காணாமல் போனவர்களின் மனைவி என பலர் இந்த நிலையத்தில் உள்ளனர். இவர்கள் பல பகுதிகளிலும் இருந்து நாட்டுக்கோழி முட்டைகளை சேகரித்து வந்து தருவார்கள்.அந்த முட்டைகளை முட்டைகளை அடைகாக்கும் இயந்திரத்துக்குள் வைத்து 21 நாளுக்கு பின்னர் கோழிக்குஞ்சுகளாக அவர்களுக்கு வழங்குவோம். அதனை அவர்கள் விற்றுக்கொள்ளுவார்கள். இப்படியாக 264 முட்டைகளை இந்த இயந்திரத்தில் வைக்கலாம். அதேநேரம் இங்கு தொடர்ச்சியாக வருகை தரும் உறுப்பினர்களுக்கு சிறிய தொகை பணம் வழங்கப்படும் என இந்த நிலையத்தின் தலைவி சுந்தரேஸ்வரி விஜயகுமார் தெரிவித்தார்.

சங்கத்தின் அங்கத்தவர்கள்,தமது சொந்த கொல்லைப்புற கோழி வளர்ப்பு பிரிவுகளை முன்னெடுத்து வருவதுடன்,குஞ்சுகள் பொரிப்பகத்துக்கு வாராந்தம் சுமார் 250 முட்டைகளை விநியோகிக்கின்றனர். (குஞ்சு பொரிப்பகத்துக்கு முட்டை ஒன்று 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது) குஞ்சுகள்பொரிப்பகத்தினால் சராசரியாக 200 குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு குஞ்சு ஒன்று 80 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படுகின்றது. வெளியாருக்கு ரூ. 100 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஆரம்பத்தில் நலன்புரிச்சங்கமாக மட்டும் இயங்கி வந்த அன்னை சாரதா தேவி பெண்கள் அபிவிருத்திச்சங்கம், தற்போது இந்த சிறிய குஞ்சுகள் பொரிப்பகத்தின் நிறுவுகையுடன், வியாபாரம் உட்பட தனது செயற்பாடுகளை விஸ்தரிக்க ஆரம்பித்துள்ளது.

சிறியளவிலான கோழி வளர்ப்பு என்பது இலங்கையின் பின்தங்கிய குடும்பங்களின் வாழ்வாதார செயற்பாடாக அமைந்துள்ளதுடன், வருமானத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி,இறைச்சி மற்றும் முட்டைகள் போன்றவற்றினூடாக போஷாக்கை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.இவ்வாறான கோழி வளர்ப்பு முறைகளில் ஒன்றாக,கொல்லைப்புற கோழி வளர்ப்பு முறை ஜீவனோபாயமாக முன்னெடுக்கப்படுகிறது.பறவைகள் சுதந்திரமாக உலாவி தமது உணவைத் தேடி உட்கொள்கின்றன அல்லது கூடுகளில் உணவு மற்றும் நீர் வழங்கலுடன் பேணப்படுகின்றன. 

விஜயா 
பாரம்பரிய கொல்லைப்புற கோழி வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள், கோழிகளை பயன்படுத்தி முட்டை பொரிப்பை மேற்கொள்கின்றனர். இதன் மூலமாக ஒரு கோழியிலிருந்து 5 – 10 குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட முடியும்.ஆனாலும்,கோழி வளர்ப்பிற்கு தேவைப்படும் குஞ்சுகளை வழங்குவதற்கு, இந்த பாரம்பரிய முறையில் உற்பத்தி செய்யப்படும் குஞ்சுகள் போதியதாக இல்லை. கோழி வளர்ப்பு பண்ணைகளில் குஞ்சுகள் கோழிகளாக அல்லது சேவல்களாக வளர்ப்பதற்குகுஞ்சுகள் பிரதான தேவையாக அமைந்துள்ளது. எனவே, குஞ்சுகள் பெருமளவில் உள்ளூர் குஞ்சுபொரிக்கும் நிலையங்கள், வியாபாரிகள் அல்லது பக்கத்து கிராமங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் தனித்து அல்லது குழுக்களாககோழி வளர்ப்பில் ஈடுபடுவோர்,கேள்வி மற்றும் விநியோக நிலைமைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட கோழிக்குஞ்சுகள் பொரிப்பகங்களின் மூலமாக,கோழி வளர்ப்போரின் தேவையை நிவர்த்தி செய்து கொள்ள முடிவதில்லை. இதன் காரணமாக கோழிக்குஞ்சுகளின் விலையில் பெருமளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், உள்@ரில் வளர்க்கப்பட்ட கோழிக்குஞ்சுகளுக்கு பற்றாக்குறையையும் தோற்றுவித்துள்ளது. நிந்தவூர், சாகாமம் போன்ற அண்மைய கிராமங்களிலிருந்து கோழிக்குஞ்சுகளை கொள்வனவு செய்ய வேண்டிய சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது. கோழிக்குஞ்சு வளர்ப்பாளர்களுக்கு இது நிலையற்ற உற்பத்தி நிலையை ஏற்படுத்தியுள்ளது. பண்ணையாளர்களிடமிருந்து கருக்கட்டக்கூடிய முட்டைகளை பெற்றுக்கொள்கின்றமை மற்றுமொரு பிரச்சினையாக அமைந்துள்ளது.

இந்துமதி 
இந்த குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து குஞ்சுகளை பொரித்தெடுக்கவென ஒருநாளைக்கு 50 முதல் 60 வாரியான முட்டைகளை சேகரிக்கிறேன். நாட்டு கோழி மூட்டைகளாக இருக்கவேண்டும் என்பதோடு மூன்று நாளில் கோழி போட்ட முட்டையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த மெஷினில் வைத்து எடுக்கும் பொது முட்டைகள் பழுதடைந்துவிடும். கணவர் யுத்தத்தால் காணாமல் போனதுக்கு பிறகு மூன்று பிள்ளைகளையும் வளர்க்க நான் மிகவும் கஷ்ட்டப்பட்டு போதுதான் இந்த சங்கத்தில் இணைந்தேன். இன்று உறவுக்கு என்னால் சமாளிக்க முடிகிறது. நானும் தனியாக ஒரு கூடு வேண்டி கோழிகளை வளர்க்க வேண்டும் என்பதுதுடன் என்னுடைய எதிர்பார்ப்பு என்கிறார் இந்துமதி.

கணவரை இழந்து தனியாக வாழும் விஜயா என்பவர் இந்த சங்கத்தில் இணைந்து தந்து சுதொழிலாக முட்டைகளை சேகரித்து குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து 21 நாளில் குஞ்சுகள் பொறித்து வெளிவந்தவுடன் அதனை வெளியில் கொண்டுபோய் விற்பதாக தெரிவிக்கிறார். ஒரு முட்டையை 22 ரூபாவுக்கு வாங்கி குஞ்சு பொரிக்கும் அதாவது அடைகாக்கும் இயந்திரத்துக்குள் வைக்கிறோம் அதற்கான மின் பட்டியலில் ஆளுக்கு 80 ரூபாபடி சேர்த்து வழங்குகிறோம் எனவும் இது தனக்கு ஒரு வருமானம் தரும் தொழில் எனவும் அவர் தெரிவித்தார்.
 டாக்டர் எம்.ஏ.நதீர்

இந்த இயந்திரத்தினூடாக வெளிவரும் கோழிக்குஞ்சுகள் மிகவும் ஆரோக்கியமானது என கால்நடை உற்பத்தி, சுகாதாரத்திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் டாக்டர் எம்.ஏ.நதீர் தெரிவித்தார். கோழி அடை காப்பதற்கு பதில் இங்கு இந்த இயந்திரம் முட்டைகளை அடைகாக்கின்றன. கோழியின் அடைகாக்கும் தற்ப வெப்பநிலையில்தான் இந்த இயந்திரமும் அடைகாத்து குஞ்சுகளை பொரிக்கின்றன. இப்படியாக உற்பத்தி செய்யப்படும் கோழிகள் சாதாரண நாட்டுக்கோழியை போனறது எனவும் அவர் தெரிவித்தார். இந்த இயந்திரத்தால் இன்று திருக்கோயில் பகுதி மக்கள் பெருமளவான பெண்கள்  நன்மை அடைந்து வருகின்றனர். தங்களுக்கு ஒரு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொண்டதாகவும் கூறுகின்றனர்.


இன்னும் இந்த தொழிலை விரிவுபடுத்தி எதிர்காலத்தில் பாரிய அளவில் கோலோகவர்லர்ப்பில் ஈடுபடவேண்டுமென்பதே இங்குகுள்ள அனைத்து பெண்களின் எதிர்பார்ப்பதாகவும் இருக்கிறது.

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...