இலங்கையின் பால் உற்பத்தியாளர்கள் பசுவின் சாணத்திலும் புல்வெளியிலும் உருண்டு பிரண்டு தான் சுத்தமான வெள்ளை பாலை பெறுகிறார்கள். அத்தகைய பாலின் குணம் பற்றி நாம் அறிகிறோம். ஆனால் அவர்கள் பாலை பெறுவதற்காக உயிரை கொடுக்கின்றார்கள் என்று நம்மில் எத்தனை பேர் அறிகிறோம்.
கடைகளில் விலை கொடுத்து பெரும் பால் இன்று கலப்படமாக்கப்பட்டு வருவதும் குறிப்பிடப்படவேண்டும். வணிகமயமான பொருட்களில் பாலும் உள்ளடக்கப்பட்டு எட்டாக்கனியாக மாறிவிடுமோ என்ற பயம் இருத்தான் செய்கிறது. மனிதனின் ஆரோக்கியத்துக்கு பெரிதும் பங்காற்றும் இந்த பால் உற்பத்தி தொடர்பாக வவுனியா மாவட்டத்தின் பால் உற்பத்தியாளர் வேலாயுதம் ஸ்ரீ கிருஷ்ணமேனன் தெரிவிக்கையில் பாலுற்பத்தி தான் எனது முழுநேர தொழில் இரண்டு பெண் பிள்ளைகளையும் எனது மனைவியையும் இந்த தொழில் தான் காப்பாற்றுகிறது.
பால் உற்பத்தியை கொண்டு தான் காணி வாங்கி வீடு கட்டி யிருக்கிறேன் எல்லாரும்போல நான் பாலை உற்பத்தி செய்யவில்லை. ஆரோக்கியமான சுத்தமான பாளி நான் உற்பத்தி செய்கிறேன். இதனால் தான் கால்நடை வளர்ப்பில் வவுனியா மாவட்டத்தில் 3ஆம் இடத்தை பெற்றுள்ளேன் என்று பெருமையாக கூறுகின்றார். இவரது முறையான பால் உற்பத்திக்கு ஐக்கிய நாடுகள் உணவு விவசாய ஸ்தாபனம் (FAO) கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களம் என்பன பலவழிகளில் உதவிகளை செய்கின்றன.
வவுனியா மாவட்டத்தின் பொருளாதாரத்தில் பயிர்ச்செய்கைத் துறைக்கு அடுத்தபடியாக அதிகளவு பங்களிப்பை வழங்கும் துறையாக கால்நடைத்துறை அமைந்துள்ளது. தொழில் உருவாக்கத்தை பொறுத்தமட்டில், 50சதவீதத்துக்கு மேற்பட்ட விவசாயிகள், கால்நடை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக பாற்பண்ணைத்துறையில் ஈடுபாடு அதிகளவில் காணப்படுகிறது. கால்நடைத்துறை என்பது மக்களின் போஷணைச்சத்து உள்ளெடுப்பை அதிகரிப்பதில் பால் மற்றும் இறைச்சி ஆகியவற்றை வழங்குவதுடன், இழுவை வலுவை, பயிர்ச்செய்கைக்கான உரம் என்பவற்றையும் வழங்குகிறது. இதன் மூலமாக கிராமிய பண்ணைகளின் வருமானம் அதிகரிக்கிறது. எதிர்கால வளர்ச்சி, முதலீடு மற்றும் வருமானமீட்டல் ஆகியவற்றில் அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக இது கருதப்படுகிறது. பாற்பண்ணை என்பது பயிர்ச்செய்கையுடன்
இணைந்ததாகும். இதன் மூலம் பரந்தளவு வருமானமீட்டுவதும் மூலங்கள் ஏற்படுத்தப்படுவதுடன், வருடம் முழுவதும் நிலையான வருமானமீட்டுவதையும் உறுதி செய்யப்படுகிறது.
தற்போது தேசிய பால் தேவையின் 40 சதவீதம் மட்டுமே உள்நாட்டு உற்பத்தியினூடாக நிவர்த்தி செய்யப்படுகிறது. எனவே, தேசத்தின் தேவையை நிவர்த்தி செய்வதற்கு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் நடந்தேறிய யுத்தம் காரணமாக, வவுனியா மாவட்டத்தில் பெருமளவு அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.
அதிகளவு பால் கறவையை வழங்கக்கூடிய கலப்பினப்பசுக்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதுடன், சிறந்த கால்நடை பரிபாலனத்துக்கான உதவிகளுக்குரிய தேவையும் காணப்படுகிறது. வவுனியாவைச் சேர்ந்த இலகுவில் பாதிப்புறக்கூடிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வருமானமீட்டக்கூடிய துறையாக பாற்பண்ணைத்துறை காணப்பட்ட போதிலும், உயர்ந்த ஆரம்ப முதலீட்டு செலவீனங்கள் பகுதியான உள்ளக முறையில் கறவைப்பசு பரிபாலனத்தில் இவர்கள் ஈடுபடுவதற்கு தடங்கலாக அமைந்துள்ளன. எனவே, இலகுவில் பாதிப்புறக்கூடிய குடும்பங்களுக்கு தமது பாற்பண்ணை செயற்பாடுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு வெளியாரின் உதவிகளை நாட வேண்டிய நிலை காணப்படுகிறது.
இந்த காரணத்தினால், ஐக்கிய நாடுகள் உணவு விவசாய ஸ்தாபனம், மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி (EU-SDDP) மூலம் வவுனியா, மன்னார், புத்தளம், அநுராதபுரம், மட்டக்களப்பு, மொனராகலை மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இலகுவில் பாதிப்படையக்கூடிய 480 குடும்பங்களுக்கு தமது பாற்பண்ணைத்துறையை மேம்படுத்திக் கொள்வதற்கான உடனடி உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. பசு ஒன்றிலிருந்து நாளொன்றுக்கு ஆகக்குறைந்தது 5 லீற்றர் வரை பால் உற்பத்தியை அதிகரிப்பது என்பது உணவு விவசாய ஸ்தாபனத்தின் இடையீட்டின் இலக்காக அமைந்துள்ளது. வவுனியாவில், நிலைபேறான கால்நடை பண்ணைச் செயற்பாடுகளின் அறிமுகத்தினூடாகவும் மாடுகள் தொழுவம் மற்றும் தீவனப்புல் ஆகியவற்றை நிறுவுவதன் மூலமும் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அனுகூலம் பெறுநர்களுக்கு கறவைப்பசு பரிபாலன நுட்பங்களை பின்பற்றுவது தொடர்பில் அடிப்படைப் பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்களை கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்துடன்; (வவுனியா) இணைந்து உணவு, விவசாய ஸ்தாபனம் முன்னெடுத்து வருகிறது. அனுகூலம் பெறுநர்களுக்கு தமது வாழ்வாதாரங்களை இலாபமீட்டும் வகையிலும், நிலைபேறான வகையிலும் முன்னெடுத்துச் செல்வதற்கான திறன்விருத்தி செயற்பாடுகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
வேலாயுதம் ஸ்ரீ கிருஷ்ணமேனன் |
மாடுகள் தொழுவம், பாற்பண்ணை பரிபாலனம் தொடர்பான பயிற்சிகள், 0.25 ஏக்கருக்கான தீவனப்புல் (CO3) வெட்டுத்துண்டங்கள், கறவைப்பாலுக்கானகலன்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு சேவைகளுடன் தொடர்பை ஏற்படுத்தல், தொடர்சேவைகள் போன்ற தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுகின்றன.
கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்துடன் இணைந்து உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் வெங்கலசெட்டிகுளம், வவுனியா தெற்கு, வவுனியா வடக்கு மற்றும் வவுனியா பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த 149 குடும்பங்களை இனங்கண்டது. இனங்காணப்பட்ட 149 குடும்பங்களிலிருந்து 120 குடும்பங்கள் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பகுதியான உள்ளக முறையில் கறவைப்பசு பரிபாலனம் தொடர்பான பயிற்சிகள் (புல்வெளிகளில் மேய்தல்; மற்றும் தொழுங்களில் உணவளித்தல்), மாட்டுத் தொழுவங்கள் நிர்மாணித்தல் மற்றும் தீவனப்புல் வளர்ப்பு) ஆகியன ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கில் உள்ள 480 குடும்பங்கள் கால்நடைவளர்ப்புக்கு தேவையான உதவிகளை கேட்டு பெற்றுக்கொள்கின்றன. மன்னாரில் 130 குடும்பங்கள் வவுனியாவில் 120 குடும்பவான்கள் புத்தளத்தில் 40 குடும்பங்கள் அனுராதபுரத்தில் 40 குடும்பங்கள் மட்டக்களப்பில் 40 குடும்பங்கள் அம்பாறையில் 50 குடும்பங்கள் மொனராகலையில் 60 குடும்பங்கள் என நாடுபூராகவும் பாலுற்பத்திக்கான திட்டத்தில் இணைந்து செயற்படுபவதாக திட்டத்துக்கான பொறுப்பாளர் எம்.எ. சுதர்ஷன் தெரிவித்தார்.
மாடு எல்லோரும் வளர்க்கலாம் ஆனால் அதிலிருந்து அஆரோக்கியமான சுத்தமான பாலை சிலர் தான் பெறுகின்றனர். முறையான பாலுற்பத்திக்கு இங்கு குறிப்பிடப்பட்ட தரவுகள் போதுமானதாக இருக்கும்.
No comments:
Post a Comment