Monday, August 29, 2016

மறுவாழ்வு தரும் உணவு

மிழர் அதிகமாக வாழும் அந்தப்பகுதி மிகவும் பிஸியானது என்று சொல்வதற்கு இல்லை. ஆனாலும் அந்தப் பகுதியிலுள்ள ஒரு இடத்தில் பச்சை நிறத்தில் வாயையும் மூக்கையும் மறைத்தபடி வேலைசெய்கிறார்கள்.தலை மற்றும் கை என்பனவும் மறைக்கப்பட்டிருந்தன.இவர்கள் கொள்ளைக்காரர்கள் இல்லை. இந்தப் பெண்களை சுற்றித்தான் மொத்தக் கூட்டமும் நிற்கிறது. ஆண்கள், பெண்கள் சிறுவர் எனப் பலர் அந்த இடத்தில் கூடி இருக்கின்றார்கள். இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் நிறைந்து இருக்கிறார்கள். இது தான் அங்கு பிஸி.



கூட்டம் கூடியுள்ள அந்தக் கட்டிடம் வவுனியா நகரின் யாழ் ஏ9 வீதியில் அருகாமையில் அமைந்துள்ளது. வீதிக்கு அருகில் அமைந்துள்ளதால் அந்த கட்டிடத்துக்கு முன்னால் கூட்டம் எப்போதும் அலைமோதுகிறது. காலை ஆறு முப்பது முதல் இரவு ஏழுமணிவரை அந்த இடத்தில் கட்டிடத்தில் அக்கூட்டம் அலைமோதிக்கொண்டே இருக்குமாம்.

என்னடா இப்படி கூட்டமா இருக்கேன்னு எட்டிப் பார்த்தால் வாய் மூக்குக்கு மாஸ்க் போட்டுகொண்டு தலை மயிர் கீழே விழாமல் இருக்க தலையை தொப்பி ஒன்றினால் கட்டிக்கொண்டு கைக்கு உறை போட்டுகொண்டு வேலை செய்கின்றார்கள்.அதுவும் வீதிக்கு ஓரத்தில் சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை ஆண்கள் மட்டுமே இலங்கையில் ஹோட்டல் துறையில் கில்லாடிகளாக பார்த்த கண்களுக்கு பெண்கள் ஒரேடியாக சமையல் செய்து விற்பதை பார்க்கும் போது வியப்பாக இருந்தது.

தனியே பெண்கள் மட்டும்தான் இங்கு வேலை செய்கின்றார்கள். சுத்தமான உணவுகள் போஷாக்குள்ள உணவுகள் இலங்கை உற்பத்திப் பொருட்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் ரசாயனம் கலக்காத இயற்கை உணவுகள் தான் இந்த பெண்களின் சமையல். இவை எல்லாவற்றையும் விட வடக்கின் பாரம்பரிய உணவுகள் சுடச்சுட மிகக்குறைந்த விலையில் அந்தக், கணமே கிடைக்கிறது. இது தான் குறித்த இடத்தில் கூட்டம் அலை மோதக் காரணம்.

பீட்சா, பர்கர், கொத்துரொட்டி, பிரியாணி என அவசர சாப்பாடுகளை தின்று திரிந்த நமக்கு பாரம்பரிய உணவுகள் குறைந்த விலையில் நாவுக்கு சுவையாக கிடைப்பது அரிதான விடயமே. எனவே தான் இந்த பெண்களின் கைகள் எமது நாவை கட்டிப் போட்டுள்ளது என்று கூட சொல்லாம். அந்த அளவுக்கு இங்கு சுவையான உணவுகள் கிடைக்கின்றன. இப்படி பாரம்பரிய உணவுகளை ஆவிபறக்க சமைத்து தரும் இந்த பெண்களின் வருமானம் ஒரு நாளைக்கு
95 ஆயிரம் ரூபா என்று கூறுகிறார் இந்த உணவு நிலையத்தின் முகாமையாளர் துவாரகா.

வடக்கின் பாரம்பரிய உணவுகளை தயாரித்து தரும் இந்த உணவகத்துக்கு அம்மாச்சி என பெயரிடப்பட்டுள்ளது.இங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் பெண்கள். இவர்கள் பெண்களை குடும்பத் தலைமைத்துவமாக கொண்டவர்கள்.  இவர்கள்தான் தங்களது குடும்பங்களை நடத்துகின்றனர். இவர்களின் குடும்பத்தில் பல விதமான பிரச்சினைகள் இருந்தாலும், சொந்த உழைப்பில் வாழ முயற்சி செய்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரத்தில் தான் இவர்களது குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கு வேலை செய்யும் 30 பெண்களில் 15 பேர் காலை ஆறரை மணிமுதல் மதியம் ஒரு மணி வரையும் இன்னும் 15 பேர் வேலை செய்கின்றனர். இங்கு தோசை, இட்லி, அப்பம், வடை, பிட்டு, வடை,சுசியம், இலைக்கஞ்சி, அருகம்புல், பானம் என அனைத்துவகையான பழங்களின் பானங்களும் தயாரித்து வழங்கப்படும். இதனால் நேரடியாக
30 பேரும் மறைமுகமாக 300 பேரும் பயனடைகின்றார்கள்.

விவசாயப் பெண்கள் அமைப்பில் அங்கத்துவமுடைய பெண்கள் மட்டுமே சமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டனர். அவர்களில் தரமான சுவையான இயற்கையான மூலப்பொருட்களை வைத்து விரைவாக சமையல் செய்யக்கூடிய பெண்கள் தெரிவு செய்யப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டனர்.

வீட்டிலிருந்து  எந்தவிதமான உணவும் தயாரித்துக் கொண்டுவர முடியாது. சமையலுக்கு தேவையான பொருட்கள் மட்டுமே கொண்டுவர வேண்டும். இங்கு அடுப்பு மற்றும் பாத்திரங்கள் இருக்கின்றன. அதில் தான் சமைக்க வேண்டும். சமையலின் தரம் ஒவ்வொரு நாளும் பரிசோதிக்கப்படும். தமக்கு தேவையான சமையல் மூலப்பொருட்களை சிலர் அவர்களது வீட்டுத் தோட்டங்களிலேயே உற்பத்தியும் செய்துகொள்கின்றனர். இப்படியாக இவர்கள் ஒருநாளைக்கு 95 ஆயிரம் ரூபாவை வருமானமாக பெறுகின்றனர். விவசாயத் திணைக்களம் மற்றும் UNDP  என்பன இணைந்து தான் இந்த செயற்திட்டத்தினை ஆரம்பித்தன. ஐரோப்பிய யூனியன்  & SDDP தனது நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த கட்டிடத்தை அமைத்து தந்துள்ளது. இந்த கட்டிடத்தை பராமரிக்கவும் இங்கு வேலை செய்யும் இரண்டு சுத்திகரிப்பாளர்களுக்குமென ஒரு பெண்ணிடம் 250 ரூபா வீதம் ஒருநாளைக்கு அறவிடப்படுகிறது என தெரிவித்தார்.

பெண்கள் ஏன் ஹோட்டல் துறைக்குள் வரக்கூடாது. வீட்டில் தரமான சுவையான உணவுகளை அம்மா, சகோதரி, மனைவி போன்றவர்கள் தானே
செய்துதருகின்றார்கள். அந்த வகையில் இங்கும் பெண்கள் தமது பிள்ளைகளுக்கும் வீட்டுக்கும் வீதியில் செல்வோருக்கும் தேவையான உணவுகளைதயாரித்து வழங்குவதால் வாடிக்கையாளர்கள் அதிகரித்துவிட்டனர்.

பத்து வருடங்களாக  காணாமல் போன கணவன் மீண்டும் வருவார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தால் பிள்ளைகளை யார் பார்ப்பது என சொந்த முயற்சியில் கைத்தொழிலை செய்து வந்த கனகரத்தினம் சுதர்ஜினிக்கும் அம்மாச்சி உணவகம்தான் வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் இடமாக உள்ளது. வவுனியா சாந்த சோலை கிராமத்தில் இருந்து வரும் இவர், வவுனியா நகரிலுள்ள அம்மாச்சி உணவகத்தில் தோசை, வடை, கட்லட் போன்ற உனவுகளை தயாரித்து விற்பனை செய்கின்றார். கணவர் காணாமல் போனதை தொடர்ந்து பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தேன். நான்கு பிள்ளைகளை வளர்க்க வருமானம் இல்லை.

2007 ஆம் முதல் சில காலம் பருத்தித்துறை வடை, நல்லெண்ணெய், சில மா வகைகளையும் செய்து பக்கட்டுக்களில் அடைத்து விற்பனை செய்து வந்தேன். இதனால் கிடைக்கும் வருமானம் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு போதுமாக இல்லை.விவசாய அடிப்படையிலான மகளிர் அமைப்பில் இணைந்தேன். பின்னர் விவசாயத் திணைக்களத்தின் ஆலோசனையுடன் உணவு செய்முறை பயிற்சிகளில் ஈடுபட்டு இன்று அம்மாச்சி உணவகத்தில் பாரம்பரிய உனவுகளில் ஒன்றான தோசை, அப்பம் என்பவற்றை செய்து விற்பனை செய்கிறேன். இதில் வரும் வருமானம் அனைத்தும் என்னுடையது. ஒரு நாளைக்கு செலவு போக 1500 ரூபா முதல் 2000 ரூபா வரை லாபம் பெறமுடிகிறது.

இது எனது சொந்தத் தொழில். சிலர் ரோட்டில் தோசை சுட்டு விற்பதாக வெட்கப்படுகின்றனர். எனக்கு அது கவலை இல்லை. திருப்தியாக வேலை
செய்கிறேன். கௌரவ குறைச்சலாக நான் கருதவில்லை. நான் யாருக்கும் அடிமை இல்லை. இது எனது தொழில். சத்தான உணவை நான் தயாரிக்கிறேன். பாடசாலைப் பிள்ளைகள் முதல் அனைவரும் இதனை உண்கின்றனர்.கிராமத்தில் உற்பத்தி செய்யும் அரிசி மா மட்டுமே எனது உணவுக்காக நான் பயன்படுத்துகிறேன். வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களில் நாங்கள் உணவு தயாரிப்பதில்லை. தோசை  20 ரூபா நெய்த் தோசை 30 ரூபா என மலிவான விலையில் விற்பனை செய்கிறோம். இன்று எனது குடும்பத்தை நான் பார்த்துகொள்ளுமளவுக்கு வளர்ந்துள்ளேன் என பெருமிதமாக கூறுகிறார் சுதர்ஜினி.

சொந்த உழைப்பில்  வரும் பெருமிதம், நிம்மதி வேறு எதிலும் கிடைப்பதில்லை. சமூகத்தின் சொல்லடிகளுக்கு பயப்படாமல் துணிந்து வாழ்பவர்கள் இவர்கள்.அதுவும் கணவரைத் தேடி ஆணைக் குழுக்கள் பின்னால் அலைந்து திரிந்து கொண்டு பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டு தோசை வியாபாரத்திலும் ஈடுபடும் சுதர்ஜினி போன்றவர்கள் சாதாரண பெண்கள் அல்ல. சாதனைப் பெண்கள்.

ஒரு மணிவரை சுசியும் போடத்தான் நினைப்பேன் அதற்கிடையில் சுசியம் விற்று தீர்ந்து விடுகிறது என சிரித்துக்கொண்டே சொல்லுகிறார் முருகையா சின்னம்மா. விவசாயக் குடும்பத்தில் பிறந்து வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே போசாக்கான உணவுகளை செய்து வந்த இவர், இன்று அம்மாச்சியில் இணைந்து மரவள்ளி, பயறு, சுசியும் செய்கிறார். வீட்டுத்தோட்டத்தில் உற்பத்தி
செய்யப்படும் மரவள்ளி இவருக்கு பெரிதும் உதவுவதாக கூறுகிறார். மாஸ்க் தொப்பி, ரி சேர்ட், கையுறை என இந்த அடுப்புக்கு பக்கத்தில் இருப்பது கஷ்டமில்லையா என்றுகேட்க, இது கஷ்டமே இல்லை. இதனால் நாங்கள் சுத்தமான உணவை தயாரிக்கிறோம். இதற்கு முதல் இது போன்று நாம் பயிற்சி எடுத்துள்ளோம். இது எங்களுக்கு பழகிவிட்டது என்று சிரிக்கிறார். அந்த வெயிலில் இது கஷ்டமான பெண்களுக்கு இது உண்மையில் கஷ்டமான நிலைமை. என்றாலும், தொழிலில் முழுமையாக ஈடுபட்டுள்ளதால் இது அவர்களுக்கு பழகிவிட்டது.

கணவர் இரண்டு பிள்ளைகள் என மொத்தக் குடுப்பத்தினரும் முழுநேர விவசாயிகள்தான். இதனால் தனக்கும் விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு.
தான். இந்த மகளிர் அமைப்புடன் சேர்ந்து விவசாயஉற்பத்திகளால் ஆன உணவுகளை தயாரித்து வழங்குகிறேன். இதற்கு எனது குடும்பம் முழு ஆதரவையும் தருகிறது. வியாபாரத்தை இன்னும் விரிவாக்க வேண்டுமென ஊக்குவிக்கின்றனர்.ஆனால் நாம் இன்னுமொரு பகுதி பெண்களை பயிற்சியளித்து சுயதொழில் செய்ய வலியுறுத்திவருகிறோம். இது ஏ9 வீதிக்கு அருகில் இருப்பதால் தினம் தினம் வாடிக்கையாளர்களும் அதிகரித்து விட்டனர். அத்தோடு அருகிலுள்ள அலுவலகங்களில் பாடசாலைகளில் இருந்தும் ஓடர்கள் கிடைக்கின்றன. குடும்பத்தினரின் முழு ஆதரவால் இன்று நான் சுய தொழில் ஒன்றை செய்கின்றேன் என சின்னம்மா கூறுகிறார்.

பிறந்த குழந்தைக்கும் நீரிழிவு நோய் இருப்பதாக கூறும் கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், முற்காலத்தில் அப்படி எதுவும் இருக்கவில்லையே என எவரும் சிந்திப்பதில்லை. அன்று பலவகை இலைகளை கொண்ட கஞ்சி நீரிழிவை உண்டுபண்ணமால் தடுத்தது வந்தன. ஆரோக்கியமாக வாழ்ந்தோம். அப்படியான ஆரோக்கியத்தை இன்றும் பெற அம்மாச்சியில் யோகேஸ்வரி மிக மலிவான விலையில் இலைக்கஞ்சி தயாரித்து விற்பனை செய்கிறார்.  20 ரூபாவுக்கு வயிறு நிரம்ப கஞ்சியை குடிக்கலாம்.

இந்த கஞ்சிக்கு தேவையான கறிவேப்பிலை, வல்லாரை பொன்னாங்கண்ணி என பலவகையான இலைகளை எனது வீட்டு தோட்டத்திலே உற்பத்தி செய்து கொள்கிறேன். மேலும் பயறு மற்றும் அரிசி என்பவற்றை கடையில் வாங்குகிறேன். இதனால் எனக்கு செலவு குறைவு. அத்தோடு இங்கு வந்து இலைக் கஞ்சி குடித்துவிட்டு செல்பவர்கள் நீரிழிவு நோய்க்கு இது நல்ல மருந்து. நான் நீரிழிவு மாத்திரைகள் போடுவதை குறைத்துவிட்டேன் என்று கூறும் போது மகிழ்ச்சியாக இருக்கும் என்கிறார் யோகேஸ்வரி.

யோகேஸ்வரியின் கணவர் விபத்தொன்றில் சிக்கி பக்கவாதம் வந்த நாள் முதல் அவரது வருமானம் நின்று போனது.அதன் பின்னர் தந்தையின் வருமானத்தை கொண்டு வாழ்ந்தவருக்கு தனது இரன்டு பிள்ளைகளையும் பராமரிக்க மேலதிக வருமானம் தேவைப்பட்டது. இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைக்க தேவையான செலவுகளையாவது பூர்த்தி செய்ய வேண்டுமென எடுத்த முடிவு தான் இலைக்கஞ்சி தயாரிப்பது. இலைக்கஞ்சி தயாரிப்பதால் எனக்கு ஒருநாளைக்கு 1500 ரூபாவுக்கு அதிகமாக லாபம் கிடைக்கிறது. இதனை வைத்துக்கொண்டு கணவர் இரண்டு பிள்ளைகளுடன் சேர்த்து அம்மா அப்பாவையும் கவனித்துக் கொள்வதாக கூறுகின்றார். முழுக் குடும்பத்தையும்
நான் பார்த்துக்கொள்கிறேன்.சொந்தக் காலில் நிற்கிறேன் என கூறிக்கொண்டு கஞ்சியை விற்கிறார்.

இங்கு வேலை செய்யும் ஒவ்வொரு பெண்களும் தங்களது குறைகளை கூறவில்லை. கூறியவர்களை போலவே பலருக்கும் பலவித சோகங்கள் இருக்கின்றன. புதைந்துள்ளன. இருந்தும், பசியோடு வருவோருக்கு உணவை இன்முகத்தோடு வழங்குகின்றனர். அதேநேரம் தனிப்பட்ட வாழ்க்கையில் பலவிதமான துன்பங்களை அனுபவித்தாலும் அவர்களது வருமானத்தை ஈட்ட வேண்டுமென தெரிவு செய்த முறையில் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். பெண்கள் ஒன்றிணைந்து உருவான இந்த அம்மாச்சியைப்போல இன்னும் பல தொழில் துறைகள் இருக்கின்றன. அத்துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்கள் வளர வேண்டும். குடும்பத் தலைவியாக தமது குடும்பத்துக்காக பாரம்பரிய உணவுகளை வழங்கி மக்களை ஆரோக்கியப்படுத்தும் இவர்கள் பாரம்பரிய தாய்மார்கள் .உணவுதான் இவர்களுக்கு மறுவாழ்வையும் வாழ்க்கைக்கு புத்துயிரையும் அளிக்கிறது.

ஏ.ஜெயசூரியன் 

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...