Thursday, August 25, 2016

மலையக மக்கள் இடம்பெயர காரணம் என்ன?


ஆதித்யா 
இ லங்கையின் தேசிய உற்பத்தி பொருளாதாரத்தின் முதுகெலும்பு மலையக மக்கள்தான். இப்படி கூறியே  உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் மார்தட்டிக்கொள்ளும் அரசும் உழைப்பை மட்டுமே சுரண்டிக்கொண்டு அவர்களை செல்லா காசாக்கும் தோட்ட உரிமையாளர்களும் மலையகத்தின் முதுகெலும்பை உடைத்துள்ளனர் என்பதே உண்மை. இந்த நிலையில் அவர்களால் என்ன செய்ய முடியும்? 
முறிந்த எலும்புக்கு மருத்துவம் தேடப்போகாமல் இருக்கும் உயிரை பாதுகாத்துக்கொள்ளவும் தனது பிள்ளைகளின் இருப்பை தக்க வைத்துக்கொள்ளவும் இடம்பெயர்கின்றனர். இப்படி இடம்பெயர்வது நிரந்தமானதும் அல்ல. கொஞ்சகாலம் கொழும்பிலோ அல்லது வெளிநாட்டிலோ வேலை செய்வதும் இன்னும் கொஞ்ச காலம் தோட்டத்தில் வேலை செய்து தனது இருப்பை தக்க வைத்துக்கொள்கின்றனர். 
இவ்வாறு ஒரு இனம் தனது இருப்பை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள இடம்பெயர்ந்து வாழ்கிறது. நிரந்தரமாக இடம்பெயர்ந்தால் எங்கே பல வருடகாலமாக வாழ்ந்து வந்த வீடு இல்லாமல் போய்விடுமோ அல்லது லயத்திலிருந்து மீண்டு தனியான வீடு வழங்கினால் அது தனக்கு கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்திலும் வாழ்கின்றனர். இப்படி வாழ்கின்ற மக்களால் எந்த சந்தர்ப்பத்திலும் சாதிக்கவோ சாதனையின் உச்சத்தை அடையவோ முடிவதில்லை. 
1991 ஆம் ஆண்டில் தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்ட போது 3 லட்சத்து 62 ஆயிரம் பேர் பெருந்தோட்ட துறை  தொழிலாளர்களாக இருந்துள்ளனர். எனினும் சனத்தொகை அதிகரித்துள்ள நிலையில் தற்போது ஏறக்குறைய ஒரு லட்சத்து 60 ஆயிரம்  தொழிலாளர்களே இன்று தொழில் புரிகின்றனர் என கம்பனிகள் தெரிவிக்கின்றன. எனவே இரண்டு லட்சம்  பேர்  தொழிலை  இழந்துள்ளனர். இவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் மலையகத்தில்  கிடைக்கப்பெற்றதா என்றால் நிச்சயமாக இல்லை என்கின்றார் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ச.விஜயசந்திரன்.

சுய தொழில் வாய்ப்புகளோ  அல்லது கைத்தொழில் பேட்டைகளோ அமைத்துகொடுக்கப்படவில்லை.மாறாக  பிரேமதாஸ காலத்தில் அமைக்கப்பட்ட ஆடை தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இந்நிலையிலேயே அதிக  வேலை வாய்ப்புகளை கொண்ட  கொழும்பு  கம்பஹா போன்ற நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் மலையக  மக்கள் செல்ல தொடங்கினர்.தொழில் வாய்ப்புகளை இழந்தவர்கள் மட்டுமன்றி  ஆசிரியர் மற்றும் சில அரச  தொழில் வாய்ப்புகள் கிடைக்காத படித்த இளம் சமூகத்தினரும் வெளி பிரதேசங்களுக்கே செல்ல நிர்பந்திக்க பட்டிருந்தனர்.
பொருளாதாரத்தில் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் அடைந்திருப்பினும் இதனை ஒரு ஆரோக்கியமான  வளர்ச்சியாக கருத முடியாது. காரணம் கைத்தொழில் பிரதேசங்களுக்கு வெளியேறும் பெரும்பாலான இளைஞர்  யுவதிகளுக்கு ஆடையகங்களிலும் கடைகளில் விற்பனையாளர்களாகவும் மற்றும் விடுதிகளிலும் மிக சாதாரண  தொழில்களே கிடைக்கப்பெறுகின்றன. இவ்வாறான தொழில்களுக்கு செல்வோர்  ஒரு நாளைக்கு 12  மணித்தியாலங்களுக்கும்  மேல் வேலை  வாங்கப்படுகின்றனர். ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர்  நம்பிக்கை நிதியம் வழங்கப்படாமல் தற்காலிக தொழிலாளர்களாக முதலாளி வர்க்கத்தால் சுரண்டப்படுகின்றனர்.ஓரளவு படித்துள்ள போதும் உயர் கல்வியை அல்லது தொழில் நுட்ப கல்வியை வளர்த்து கொள்ள அவகாசம்  இல்லாமல் வெறும் உடல் உழைப்பை  வழங்கும் தொழிலாளர்களாகவே வாழ்க்கையை கடத்துகின்றனர். 
வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை இதை விட பரிதாபமாக உள்ளது.அவர்கள் எந்தவித ஓய்வுமின்றி தொடர்ச்சியாக தமது கடமைகளில் ஈடுபட்டாக  வேண்டும். வேலைக்காக இலட்ச கணக்கான மக்கள் கணவன்  மனைவியாக இணைந்தே வெளியேறுவதால் பெற்றோரின் நேரடி கண்காணிப்பு பிள்ளைகள் மீது இல்லாமல்  போகின்றது. இதனால் போதை பழக்கம் தொடக்கம், மாணவிகள் கர்ப்பம் தரித்தல், கல்வியில் கவனமின்றி  தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் மூழ்கியிருத்தல், வெளிநாட்டுக்கு சென்ற தாய்மாரின்  பிள்ளைகள் உறவினர்களால் ஏன் தந்தையால் கூட துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுதல் போன்ற பல்வேறு சமூக சீரழிவுகள்மலையகத்தை ஆட்டிப்படைத்து வருகின்றது. இதனால் பாடசாலை மாணவர்கள் இடைவிலகல்  அதிகரித்துள்ளது.
இரத்தினபுரி களுத்துறை மாத்தளை போன்ற பிரதேசத்திலுள்ள வெளி பிரதேசங்களுக்கு செல்ல முடியாத தொழிலாளர்கள் சிற்றுடைமை தேயிலை தோட்டங்களில் குறைந்த ஊழியத்திற்கு கொத்தடிமைகளாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அதிக கடன்களை பெற்று  வட்டியை செலுத்த முடியாது கடன் நச்சு வட்டத்துக்குள் சிக்குண்டு  உள்ளனர்.
பெருந்தோட்டங்களிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு மக்கள் இடம்பெயர்வதால் அரசியலில் தமிழ் பிரதிநிநிதித்துவம் குறைந்து செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு அபாயத்தை உண்டுபண்ணும் ஒன்றாகவும் இதனை பார்க்கலாம்.
கணிசமான அளவு மலையக மக்கள் வெளியேறி ஏனைய பிரதேசங்களிலேயே நிரந்தரமாக வசித்து வருவதால் பிரதேச சபை, மாகாண சபைகள்,பாராளுமன்றத்திற்கான தமிழ் பிரதிநிதிகள் குறைவடைந்து வருகின்றனர். பன்வில, கலஹா மற்றும் மாத்தளை பிரதேசங்கள் தற்பொழுது தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏனைய பிரதேசங்களில் சிங்கள பிரதிநிதிகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளனர்.மக்கள் வெளியேற்றம் தமிழ் பிரதிநிதித்துவத்தை முற்றிலும் இழக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இது எதிர்காலத்தை  தமிழ் மக்களின்  எதிர்காலத்தை பல்வேறு பாதிப்பிற்கு உள்ளாக்கலாம்.எனவே மலையக மக்களுக்கு பொருளாதார ரீதியில் சாதக தன்மையையும் மலையகத்தில் தொழில் வாய்ப்புகளையும் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள்  ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அவசியம்எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
இங்கு பேராசிரியர் கூறுயதின் அடிப்படையில் மக்களுக்கு வழங்கப்படவேண்டிய சலுகைகளை முறையாக வழங்கினால் அந்த மக்கள்  பொருளாதாரம் மற்றும் கல்வி ரீதியாக தங்களை உயர்த்திக்கொள்ளவர்கள் என்று  இன்றைய கொள்கை வகுப்பாளர்களும் உணருவதில்லை. இன்றும் மலையக மக்களுக்கு உள்ள அடிப்படை  பிரச்சினைகள் குறித்த கொள்கை வகுப்பாளர்களுக்கும் அரசியல் தலைமைகளுக்கு உணர்த்தப்படுவதும் இல்லை. சிலர் தாம் வளர்ந்து வந்த சூழலை மறந்தே அரசியல் நடத்துகின்றனர். கடந்த சில தசாப்த காலங்களில்  மலையக மக்களுக்கான  சம்பள உயர்வு கிடைக்கப்பெறாமையாலும் கைத்தொழில் ரீதியான முன்னேற்றம்  இல்லாமல்  இருக்கின்றனர். கலாசாரத்திலும் மிக மோசமான நிலையில் இருக்கின்றனர். 
இப்படி பல பிரச்சினைகள் இருந்தாலும் குறிப்பிட்ட சில துறைகளில் சிலர் சாதிக்காமலும் இல்லை. ஆனால் அது  சிலர்தான். தேயிலையும்றப்பருமே வாழ்க்கை என்று வாழும் மக்களிடம் கேட்டால் 'உழைக்கும் சம்பளம்  உணவுக்கே போதாமல் இருக்கிறது. இதுல வேறு என்னத்த யோசிக்க முடியும்' என்றுதான் பதில் வருகிறது. 
இப்படியாக மலையகத்தில் வாழும் சிலரிடம் கேட்டபோது சிறுக சிறுக சீட்டு  போட்டு சேமித்த பணத்தில் வாங்கிய நகைகள் அனைத்தும் அடகு வைத்து விட்டோம்.வட்டிக்கு  வாங்கிய கடனை  அடைக்கும் பொருட்டு  ஓரிரு  மாதங்கள் மட்டுமே வேலை செய்து அந்த பணத்தை சம்பாதித்து கொண்டு மீண்டும் இங்கே வந்து விடுகின்றோம். ஆனால் அங்கும் நாம் மிக கடினமான வேலைகளையே செய்ய வேண்டியுள்ளது. இரவு பகலாக உழைத்தால் மட்டுமே ஓரளவு பணத்தை ஈட்ட முடிகிறது. எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. 
எந்த சொத்து சுகமும் இல்லாத நிலையில் முழுமையாக தோட்டத்துறையில் இருந்து வெளியேறும் பட்சத்தில் தோட்ட வீடுகளை அல்லது புதிதாக அமைத்து கொடுக்கப்படும் வீடுகளை இழக்க நேரிடும் என்ற பயத்தால் நாங்கள் நிரந்தரமாக செல்வதில்லை மற்றும் படி தோட்டத்தில் கிடைக்கும் சம்பளத்தில் ஒரு காலமும் எங்களால் நிம்மதியாக வாழ முடிந்ததில்லை. 

ஆறு மாத கைக்குழந்தைகளை கூட விட்டு விட்டு பெண்கள் வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர், மழைக்காலத்தில் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கிறது ஆனால் அதனை சரி செய்ய பணம் எங்களுக்கு இல்லை என  தெரிவிக்கின்றனர். கிடைக்குமா கிடைக்காதா என்ற தோரணையில் பார்க்கப்பட்ட சம்பள விவகாரம் மலையகத்தில் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது தற்போது உணரப்பட்டுள்ளது. எனவே மலையகத்தின் எதிர்காலம் கருதி சம்பள விடயத்தில் வெகு விரைவில் உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டிய தேவை உரிய தரப்பிற்கு உண்டு.  
இவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் மக்கள் சொந்த பொருளாதாரத்தில் பின்னடைந்துதான் இருக்கின்றனர். இந்த பின்னடைவிலிருந்து மீள புதிதாக ஒன்றையும் உருவாக்க தேவையில்லை அரசியல் செய்யாமல் தரவேண்டியதை தாருங்கள் என்பது தான்  அவர்களது கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...