இதனை தேர்தல் காலத்தில் விஞ்ஞாபனத்தில் முன்வைத்தோம் அதனை மக்கள் ஏற்று வாக்களித்துள்ளார்கள். சமஷ்டி என்று கூறும்போது ஒரு பெயர்ப்பலகையாக சமஷ்டி இருக்கவேண்டுமென நாங்கள் கேட்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த செவ்வியின் தொகுப்பு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
கேள்வி- வடக்கில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன என யாழ் மாவட்ட ஆயர் மற்றும் வடமாகாண சபை கூறிவருகிறது. இது தொடர்பாக வடக்கு மக்களின் பாராளுமன்ற பிரதிநிதியான உங்களது நிலைப்பாடு என்ன?
பதில்- கடந்த வெள்ளிக்கிழமை சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவிடமும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடமும் இது தொடர்பாக பாராளுமன்றில் வைத்து கலந்துரையாடினேன். யாழ்ப்பாணத்தில் தமிழ் பேசும் பொலிஸார் இல்லாதது ஒரு பெரிய குறையாக இருக்கிறது. பொலிஸாருக்கு தமது முறைப்பாட்டை தெரிவிக்கவும் மொழி தெரியாமல் விசாரணை செய்ய முடியாது. என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியாதுள்ளது. 400 இற்கும் மேற்பட்ட பொலிஸார் நேர்முகப் பரீச்சைக்காக அழைத்தும் அவர்களது பாதுகாப்பு தடை நீக்கத்துக்காக இன்னும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நியமனத்தை துரிதப்படுத்தும்படி கோரினேன்.
நீதிமன்றில் வழக்குகளை முறையாக மேற்கொள்வது தொடர்பாகவும் கூறினேன். பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை தெரிவிக்க முடியாதுள்ளது. இவற்றை அமைச்சர்களிடம் சுட்டிக்காட்டினேன். இதற்கு அவர்கள் முறையான நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.
ஆனால் இது அங்கிருக்கும் பொலிஸ் அதிகாரிகளுடன் பேசி குற்றங்கள் தொடர்பான தரவுகளை பெற்று குற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டேன். இவற்றுக்கு நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கேள்வி- ஜெனீவா கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் போது தமிழர் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க நீங்கள் நடவடிக்கை எடுத்துள்ளீர்களா?
பதில்- இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை அடுத்த மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழு அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போது எந்ததெந்த பரிந்துரைகள் நடைமுறைபடுத்தப்படாமல் இருக்கின்றது போன்ற விடயங்களை ஆராய்ந்து பேசவுள்ளோம். ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகருடன் இததகைய விடயங்களை நாம் பகிர்ந்து கொள்வோம்.
கேள்வி- தொடர்ச்சியாக இலங்கைக்கு ஐ .நா கண்காணிப்பாளர்கள்
வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டும் வருகின்ற நிலையிலும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நியாயத்தை வழங்குவதில் மட்டும் கால இழுத்தடிப்பு நிலவுவதாக .விமர்சிக்கப்படுகிறது. இது தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன?
பதில்- எல்லாவற்றிலும் காலம் இழுத்தடிக்கப்பட்டு தான் வருகின்றது. இதனை நேரடியாகவே கூறிவருகின்றோம். எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள அமர்வுக்கு முதல் துரிதமாக சில விடயங்களை செய்ய முனைவதாகவும் அறிகின்றோம். அது என்ன என்று முதலில் நாம் அறிய வேண்டும். காணாமல் போனோரை கண்டறியும் செயலகம் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு என பலவற்றின் அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அறிகின்றோம்.
இவை நடைபெறுவது தொடர்பாக நாம் பார்க்கவேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாகுவதை எவரும் தவறு என்று கூற முடியாது. ஜி.எல் பீரிஸ் கூட தவறானது என்று கூறிக்கொண்டிருந்தாலும் இறுதியில் குறித்த பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது ஏகமனதாக எதிர்ப்புக்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.அந்த வகையில் இந்த வருட இறுதிக்குள் முழுமையான தீர்வொன்றை அடையவேண்டும் என அரசாங்கம் கருதி செயற்படுகிறது.அதில் நாங்களும் அழுத்தத்தை கொடுத்து வருகின்றோம்.
கேள்வி- சமஷ்டி தீர்வு குறித்து உங்களது நிலைப்பாடு என்ன?
பதில்- இணைந்த வடக்கு கிழக்கிற்குள் தீர்வு என்பதுதான் எங்களது தொடர்ச்சியான நிலைப்பாடாக இருந்துவருகிறது. இதனை தேர்தல் கால விஞ்ஞாபனத்தில் முன்வைத்தோம் அதனை மக்கள் ஏற்று வாக்களித்துள்ளார்கள். சமஷ்டி என்று கூறும்போது ஒரு பெயர்ப்பலகையாக சமஷ்டி இருக்கவேண்டுமென நாங்கள் கேட்கவில்லை.அதன் உள்ளடக்கத்தில் சமஷ்டிக்கான பண்புகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.
அதாவது அதிகாரங்கள் வழங்கப்படும்போது முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.பிராந்திய அலகுகள் மத்திய அரசின் தலையீடு இல்லாத செயற்பாடுகள் போன்ற பல விடயங்கள் உள்ளடக்கப்படவேண்டும். இதைத்தான் நாங்கள் பார்க்கின்றோம். வடக்கு கிழக்கு இணைக்கப் படவேண்டும் அந்த இணைப்பானது கிழக்கு முஸ்லிம்களின் இணக்கப்பாட்டுடன்இருக்க வேண்டும்.
எப்படியாக இணைக்கப் படவேண்டுமென்பதை அவர்களுடைய ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும். சமஷ்டி என்பது ஒரு ஆட்சி முறை. அது எப்படியாக பிரித்து வழங்கப்படவேண்டும் என்பது வேறு விடயம். அதாவது வடக்கு கிழக்கை இணைத்து எட்டு அலகுகளாக வைத்திருப்பதா அல்லது ஒன்பது அலகுகளாக பிரித்துவைப்பதா ஐந்து அலகா மூன்று அலகா என்பதும் ஆராயப்படவெண்டும்.
கேள்வி- பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் தமிழ்தங தேசியக் கூட்டமைப்பு மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பாக நீங்கள் கூற விரும்புவது என்ன ?
பதில்- எதிர்க்கட் சியாக இருந்தாலும் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும் அரசை விமர்சிக்கவேண்டுமென கூறமுடியாது. ஜனநாயக மரபில் எதிர்க்கட்சி எல்லாவற்றையும் எதிர்க்கவேண்டும் என்று இல்லை.அரசு செய்யும் நல்ல
நடவடிக்கைகளை ஆதரிப்பதும் அரசாங்கத்தின் தவறை சுட்டிக் காட்டுவதும்தான் எதிர்க்கட்சி ஒன்றின் பங்காக இருக்கும். இன்றைக்கு தேசிய அரசாங்கம் ஒரு முயற்சியை கையிலெடுத்துள்ளது. அந்த முயற்சிக்கு நாட்டு மக்களுடன் இணைந்து நாம் ஆதரவளிக்கத்தான் வேண்டும்.
ஆனால் நாட்டில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. இருப்பினும், அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.இதனை தீர்த்தால் ஏனைய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம். இந்த பிரச்சினையில் அரசாங்கம் துரிதமாக செயற்படுகிறது. இதில் காலதாமதம் ஏற்படுகிறது என்று கூறமுடியாது. தீர்வு காண்பதற்கென குழுக்கள் பிரிக்கப்பட்டும் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் போன்ற விடயங்களில் நாம் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றோம்.
இந்த செயற்பாடுகள் எதிர்க்கட்சியொன்றின் செயற்பாட்டைபோல இருக்காது தான். இருப்பினும், நாட்டின் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.எதிர்க்காமலும் இல்லை. அந்த வகையில் அரசியலமைப்பு உருவாகுவதை எவரும் தவறு என்று கூற முடியாது.
ஜி.எல் பீரிஸ் கூட தவறானது என்று கூறிக்கொண்டிருந்தாலும் இறுதியில் குறித்த பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது ஏகமனதாக எதிர்ப்புக்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.அந்த வகையில் இந்த வருட இறுதிக்குள் முழுமையான தீர்வொன்றை அடையவேண்டும் என அரசாங்கம் கருதி செயற்படுகிறது.அதில் நாங்களும் அழுத்தத்தை கொடுத்து வருகின்றோம்.
கேள்வி- முன்னாள் போராளிகளின் கைதுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை தொடர்பாக உங்களது கருத்து என்ன?
பதில்- இது தொடர்பாக ஏற்கனவே அறிக்கை ஒன்றை நான் வெளியிட்டிருந்தேன். கைது செயப்படும் முறை தவறானது என்று கூறியிருந்தேன். வேனில் வந்து கடத்தி செல்லப்பட்ட பின்னரே கைது செய்யப்பட்டது தெரியவந்தது. இது தவறான வழிமுறை. ஆனால் ஒருவரும் கைது செய்யப்படக்கூடாது என்று கூறவில்லை. பொலிஸாருக்கு நியாயமான சந்தேகங்கள் இருக்குமாக இருந்தால் கைது செய்யலாம்.
அதற்கான தேவை இருக்கவேண்டும். கைது செய்யப்பட்டாலும் கூட அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சாட்சியங்கள் இல்லை என்றால் அவர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு செயலாகும். நாங்கள் ஏற்கனவே கூறி இருக்கிறோம். ஆனால் கைது செய்யப்படும் பலர் ராணுவப் புலனாய்வு பிரிவினரோடு நெருங்கி வேலை செய்தவர்கள் என்பது அந்தந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் உட்பட அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.
இராணுவ புலனாய்வு பிரிவினரோடு நெருங்கி செயற்பட்டவர்கள் இன்று என்ன காரணத்துக்காக கைது செய்யப்படுகின்றார்கள் என்பதே எமது கேள்வியாக உள்ளது. விசாரணைகளை நிறுத்தக் கூடாது. ஆனால், முறையாக எல்லாம் செய்யப்படுகிறதாக இருந்தால் நாம் தலையிட மாட்டோம். முறைகேடாக எதுவும் நடந்தால் நாம் தலையிடுவோம். கைது செய்யப்படும் முறை தடுத்துவைக்கப்பட்டுள்ள முறைகள், கைது செய்தபின்னர் இழுத்தடிப்பு இவற்றை நாம் கவனமாக அவதானித்து நடவடிக்கை எடுப்போம்.
கேள்வி- எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இராணுவமுகாமுக்கு சென்ற சம்பவத்தை ஊடகங்கள் எவ்வாறு வெளியிட்டனர் இதுபற்றி உங்கள் கருத்து....
பதில்- இந்த விடயத்தில் ஊடகங்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ளன. விசேடமாக சில சிங்கள ஆங்கில ஊடகங்கள் பாதுகாப்பை மீறி முகாமுக்குள் சென்றார் என சில பொய்யான தகவல்களை வெளியிட்டிருந்தன. அது துரதிஷ்டவசமான ஒரு செயற்பாடு.கடந்த மாதம் 16 ஆம் திகதி நடந்த ஒரு நிகழ்வு 22 ஆம் திகதிதான் பூதாகரமாக வெடித்தது. சிலர் எதிர்க்கட்சித் தலைவரையும் தீவிரவாதி என காட்ட முற்படுகின்ற ஒரு செயற்பாடாக த்தான் இதை நாம் பார்க்கிறோம். இந்த சம்பவத்தை உயிர்ப்பித்து நாட்டின் ஐக்கியத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கூற முற்பட்டாலும் கூட, அது இம்முறை கைகூடவில்லை.
கேள்வி- கட்சிகள் பல இணைந்து ஒரு கட்சிய உருவாக்குவது தொடர்பாக அறிவித்துள்ளது. இது உங்களுக்கு எந்த வகையில் சவாலாக அமையும்?
பதில்- கட்சியை உருவாக்குவதற்கு ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு. அவர்கள் மிக அண்மையிலே நடந்த தேர்தலில் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்பதை மக்கள் தெரிந்து வைத்துள்ளார்கள். அப்படியாக மாற்றுக்கருத்தை உருவாக்கவும் மாற்றுக்கட்சியை உருவாக்கவும் அவர்களுக்கு முடியும். அதே போல மக்கள் வாக்களிக்கவும் முடியும்.
கேள்வி- எல்லை நிர்ணயம் தொடர்பான விடயத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் தேர்தல் எப்போது நடக்குமென எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்- இந்த வருடம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறமுடியாது.அதற்கு காரணம் அரசியலமைப்பு சட்டமொன்று உருவாகின்ற சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்துவது பொருத்தமானதல்ல. எல்லை நிர்ணயம் தொடர்பாக பல குளறுபடிகள் இருக்கின்றன. எல்லை நிர்ணய சபையினூடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
ஏ.ஜெயசூரியன்
No comments:
Post a Comment