Monday, April 18, 2016

பனாமாவில் குவிந்துள்ள பணத்தை மீட்டெடுக்க மத்திய வங்கி தயங்குவது ஏன்?

ரஜித் கீர்த்தி தென்னக்கோன்
ப னாமா நாட்டில் வரி ஏய்ப்பு ரீதியில் பல கோடி ரூபாய்களை பதுக்கி வைத்துள்ள பணக்காரர்களின் வரிசையில் உலக நாட்டுத் தலைவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை பலரது பெயர்ப் பட்டியல் கசிந்துள்ளது. இது உலகம் அறிந்த விடயம் தான் என்றாலும், இது இலங்கை போன்ற சிறிய தீவுக்கும் மிக பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு விடயமாக காணப்படுகிறது. அதற்கு காரணம் இன்னும் வெளிவராத இலங்கையர்களின் பெயர்ப்படியல்தான். 

அன்னை திரேசாவாக வாழ வேண்டும் என்று கூறிய உலக அழகி ஐஸ்வர்யாராயே இந்த பட்டியலில் இருக்கும் போது நம் நாட்டு பணக்காரர் பனாமாவில் முதலிடுவது பெரிய விடயமல்ல என்றாலும்கூட தற்போதைய நல்லாட்சி இன்னும் அமைதியாக  இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் மஹிந்த காலத்து பேர்வழிகளா?  

படித்தவர்களையே பக்கத்தில் வைத்துக்கொண்டு திறந்த பொருளாதாரத்தை பற்றி பேசும் ஐ.தே.க.வுக்குள்ளும் அந்த கறுப்பு ஆடுகள் இருக்குமா என்ற சந்தேகமும் எழுகின்றது. மேலும், பனாமாவில் முதலிட்டுள்ளவர்களில் இலங்கையர்கள் இருக்கின்றார்கள் என்று தெரிந்திருந்தும் மத்திய வங்கி இதுவரை விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் சந்தேகத்துக்கு மற்றொரு காரணம்.

இப்படியான பல விடயங்கள் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு தொடர்பாக அண்மைக் காலமாக பேசிவரும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன் ஞாயிறு தினக்குரலுக்காக நேர்கண்டபோது பகிரப்பட்ட தகவல்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

பனாமாவில் ஏன் வெளிநாட்டவர்கள் அதிகமாக முதலிடுகின்றனர்?  
பனாமா நாட்டில் வரிச்சலுகை இருக்கின்ற காரணத்தினால் உலக நாடுகளிலுள்ள செல்வந்தர்கள் தமது பணத்தை பனாமாவிலுள்ள நிறுவனங்களில் முதலிடுகின்றனர் அல்லது பனாமா நாட்டில் தமக்கென ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்குகின்றனர் அல்லது நிறுவனமொன்றை விலை கொடுத்து வாங்குகின்றனர். இதற்கு அந்நாட்டில் பல நிறுவனங்கள் முகவர்களாக செயற்படுகின்றன. அப்படியான ஒரு முகவர் அமைப்பின் ஆவணங்கள் தான் புலனாய்வு அடிப்படையில் கசிந்துள்ளன. பனாமா நாட்டின் வரி கட்டுப்பாட்டு சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அது மக்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ பாதிப்பை ஏற்படுத்துவதாக இல்லை. பல வெளிநாடுகள் இங்கு முதலிட இதுவே காரணம்.

கறுப்புப் பணத்தையும் பனாமாவில் முதலிடலாமா?

வரிச்சலுகை உள்ள பனாமா போன்ற நாடுகளில் முதலீட்டு வரி தொடர்பாக பிரச்சினை எழுந்தால் அதற்கு பணத்தை செலுத்தி வரிச்சலுகையை பெறமுடியும். அடுத்ததாக சட்டவிரோதமாக பெறப்பட்ட கறுப்பு பணத்தை வரிச்சலுகை உள்ள நாடுகளில் முதலிடுகின்றனர். இலஞ்சம் ஊழல் மூலமாகவோ அல்லது சொந்த நாட்டில் தான் உழைத்த வருமானத்துக்கு வரி செலுத்தாதவர்கள் இப்படியான பணத்தை வரி செலுத்தாத நாடுகளில் முதலிடுகின்றனர். ஒன்று அவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் அல்லது வேறு ஒரு நாட்டில் முதலிடவேண்டும் என்று மட்டுமே நினைக்கின்றனர். 

இதற்கு முன்னரும் இப்படி நடந்துள்ளதா?

பனாமா லீக்ஸுக்கு முதல் ஓப்ஷோர் லீக்ஸ் (offshore) என ஒரு ஆவண கசிவு இருந்தது. இதனூடாக பல தகவல்கள் வெளிவந்தன. அந்த தகவலையும் இந்த தகவலையும் பார்க்கும் போது இரண்டுமே ஒன்றுக்கொன்று சமமானவை என்றே கருதவேண்டி உள்ளது. ஆனால் இவை எதுவும் பொய்யான தகவல்கள் இல்லை. உண்மையான தகவல்கள். 

இலங்கையர்களுக்கும் பனாமாவில் நிறுவனங்கள் இருக்கின்றதா?
எத்தனை பேர் அங்கு முதலிட்டுள்ளனர்?

இந்த தகவலின் அடிப்படையில் பார்க்கும்போது பனாமா நாட்டில் இலங்கையை சேர்ந்த மூவருக்கு நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த மூன்று நிறுவனங்களிலும் மொத்தமாக 22 பேர் பங்குதாரர்களாக இருக்கின்றனர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. எனினும் பங்குதாரர்களின் பெயர் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

கடந்த ஓப்ஷோர் லீக்ஸ் மூலம் வெளியான தகவலின் படி
இலங்கை பணம் எவ்வளவு முதலிடப்பட்டது?

இதற்கு முதல் வெளியான ஆவணக் கசிவில் இலங்கையர்கள் பலரின் பெயர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டன. அவர்களின் பணம் சட்ட விரோதமானதா இல்லையா என்பதை முதலில் ஆராய வேண்டியுள்ளது. அதனை விடவும் ஏற்கனவே அவர்கள் முதலிட்டது தெரிய வந்ததும் இந்த அரசு என்ன செய்தது என்பதே நாம் எழுப்பும் கேள்வியாக உள்ளது. கடந்த 10 வருடங்களில் மட்டும் இலங்கையிலிருந்து 2.8 ட்ரில்லியன் ரூபா பணம் அங்கு முதலிடப்பட்டுள்ளது. 

இதனை தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பன எதுவித நடவடிக்கையும் எடுக்கமுடியாமல் போய்விட்டது. இலங்கையிலிருந்து பணத்தை அனுப்பியவர்களின் பெயர்ப் பட்டியல் எமக்கு தேவை இல்லை. இலங்கையிலிருந்து கொண்டுசென்ற பணத்தை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவது பற்றியே சிந்திக்கவேண்டும். சட்டவிரோதமானது இனி அரசுக்கும் சட்டபூர்வமானது எனின் குறித்த நபரிடமே அந்த பணம் இருக்கவேண்டும். 

மத்திய வங்கிக்கு தெரியாமல் வெளிநாட்டில் முதலீடுகளை செய்யமுடியுமா?

இலங்கை அரசுக்கு கீழ் சட்டம் மட்டும் ஒழுங்கை நிறைவேற்றும் அரச நிறுவனங்கள் இந்த பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதா? இதுவரை காலமும் இந்த அரசு தட்டிக்கேட்க எந்த ஒர முயற்சியும் எடுக்கவில்லை என்றே நான் கூறுவேன். உதாரணமாக லஞ்சம் மற்றும் ஒழிப்பு நிறுவனம் சார்பாக நாம் 512 முறைப்பாடுகளை அரசுக்கு வழங்கியுள்ளோம். ஆனால் இதில் பல முறைப்பாடுகளுக்கு என்னநடந்தது? விசாரணை நடக்கின்றதா? என்று தெரியாத நிலையில் நாமும் இன்றும் இருக்கின்றோம்.

அரச நிறுவனங்கள் பலவற்றுக்கு முறைப்பாடுகளை வழங்கியும், இன்னும் விசாரணைகள் இடம்பெறவில்லை. அதில் முக்கியமாக இலங்கை மத்தியவங்கி ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் புலனாய்வுத் திணைக்களம் பாரிய இலஞ்ச ஊழல் ஒழிப்பு திணைக்களம்  சட்டமாதிபர் திணைக்களம் போன்றவை முக்கியமானவை. 

மத்திய வங்கியிடம் இது தொடர்பாக உதவிகள் அல்லது முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளனவா?

இலங்கை மத்திய வங்கியிடம் இலங்கையில் நடந்த பாரிய இலஞ்ச ஊழல் தொடர்பாக நாம் அறிவித்துள்ளோம். அதன்படி விசாரணை முடிந்த முறைப்பாடுகளுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களமே வழக்குத் தொடரவேண்டும். வழக்கு தொடரப்படாத சந்தர்ப்பத்தில் வெளிநாட்டிலுள்ள இலங்கை பணங்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவர முடியாது. அதனை பாதுகாக்க வழி ஒன்றும் உருவாகாது. 

பனாமாவிலுள்ள இலங்கைப் பணத்தை இலங்கைக்கு கொண்டுவரவேண்டிய பொறுப்புடைய அரச நிறுவனம் எது?

இலங்கை பணத்தை இலங்கைக்கு கொண்டுவருவதில் தொடர்புபடவேண்டிய அரச நிறுவனம் எது என்ற பிரச்சினை எமக்கும் இருக்கிறது. மத்திய வங்கியா? பொலிஸ் திணைக்களமா? இலஞ்ச ஊழல் திணைக்களமா? இறைவரித் திணைக்களமா? என்ற ஒரு குழப்பம் இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் இந்த திணைக்களங்கள் எல்லாமே குறித்த விடயம் பற்றி பங்கேற்று நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பனாமா அரசுடன் இலங்கை அரசு நேரடியாக பேச்சுவார்த்தையை நடத்த முடியுமா?

பனாமாவில் வரி ஏய்ப்பு ரீதியில் பதுக்கிய இந்தியர்களின் பெயர்ப் பட்டியல் வெளியானதும் இந்திய அரசு பனாமா அரசுடன் பேசி இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக பெற்றிருந்தால் அவை இந்தியாவுக்கு மீண்டும் தரும் படியும் சட்டப்படியானது என்றால் அவர்களுக்கே அதை திருப்பியளிப் போமென கூறியுள்ளது. குறைந்தது இலங்கை மத்திய வங்கி இவ்வாறான எந்தவொரு நடவடிக்கையேனும் எடுக்க முயற்சிக்கவில்லை. சட்டவிரோத பண முதலீட்டுக்கு எதிராக மத்திய வங்கி என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதையாவது வெளிப்படுத்த வேண்டும். எமது கேள்விகளுக்கேனும் பதிலளிக்கும் இடத்தில் மத்திய வங்கி இல்லை. அப்படியானால் இந்த அரசு கடந்த மஹிந்த அரசினைப்போலவே ஒள்ளல்வாதிகளை கொண்ட அரசா? மஹிந்த ராஜபக்ஷ உடைத்த மத்திய வங்கியின் கால்கள் இன்னும் இயங்கவில்லை அதனால் தான் இன்னும் நடக்கமுடியாமல் இருக்கின்றது. விமர்சனங்கள் எழவும் இதுவே காரணம்.

பாரிய இலஞ்ச ஊழல் ஒழிப்பு தொடர்பான அரச ஆணைக்குழு (FCID) மூலம் உதவிகளை பெற முடியுமா?

இலஞ்ச ஊழல் தொடர்பான அரச ஆணைக்குழு மீது  நம்பிக்கை  இருந்தது. ஆனால், இன்றுவரை பல முறைப்பாடுகளுக்கு விசாரணை இல்லாமலேயே இருக்கிறது. கிரீஸ் கொடுக்கல் வாங்கல்கள் சீ எஸ் என் மோசடி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்பனவும் இன்றும் விசாரிக்கப்படவில்லை. இப்படி பல உதாரணங்கள் இருக்கின்றன. பனாமாவில் முதலிட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பாக பாரிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தான் விசாரிக்கவேண்டும். அரசியலமைப்பில் இருக்கும் சட்டங்களையே நடைமுறைப்படுத்தாத நிலையில் புதிய சட்டங்களை உருவாக்குவதும் கடினமான ஒன்று தான். இன்று அரசியலமைப்பு திருத்தம் மட்டும் உருவாக்கம் என்பவற்றுக்கான பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில் மிக நீண்ட காலமும் எடுக்கும்.

15% வரி அதிகரிப்பு என அரசாங்கம் அறிவித்திருப்பது ஏன்?

இலங்கையில் இன்று பொருளாதார வீழ்ச்சி இருக்கிறது. இந்த நிலையில் பொருளாதாரத்தை நிலையாக வைத்துக்கொள்ள அரசு தடுமாறுகிறது. இதனால் இலங்கை அந்நிய செலாவணியை ஈட்ட வரியை அதிகரிக்கிறது. உல்லாசப் பயணிகளை இலங்கைக்குள் உள்வாங்க நாணயப் பெறுமதியை குறைத்துள்ளது. இதனை செய்தால் தான் நாட்டின் பொருளாதாரத்தை நிலையாக பேண முடியும். இலங்கை பாராளுமன்றமே அரச நிதி தொடர்பாக முடிவெடுக்கும் உயரிய இடம். அங்கு தான் இது தொடர்பாக முதலில் விவாதிக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் ஒருவர் 2005 ஆம் ஆண்டு 95 ஆயிரம் ரூபா கடனாளியாக இருக்கின்றார். 2015 ஆம் ஆண்டு வரை 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபா கடனாளியாக இருக்கிறார். இதற்கு இலங்கை வருமானம் மற்றும் வெளிநாட்டிலிருந்து வாங்கும் கடன் என்பனவும் காரணமாகவுள்ளன.

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...