ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டிலுள்ள கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அமையும். ஒவ்வொரு தனி மனிதரின் முன்னேற்றமும் அவர் பெறும் வாழ்க்கையும் மேம்பட, கல்வி உதவுகிறது. கல்வி கற்றால் தான் தனக்கும், தன் வீட்டிற்கும், நாட்டிற்கும் நன்மைகள் செய்ய முடியும். எனவே தான், கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என நன்னூல் அறிவுறுத்துகிறது.
பிச்சை புகினும் கற்கை நன்றே என்று நன்னூலில் ஔவையார் கூறிய வார்த்தைகள் அத்தனையும் நிஜம். பிச்சை எடுத்துதத்தான் படிக்கவேண்டுமென்பதில்லை. தனக்கு ஆகவேண்டிய ஓர் காரியத்தை கெஞ்சி கூத்தாடியாவது சாதிக்கவேண்டும் என்பதுதான் இதன் உண்மையான அர்த்தம். ஔவையார் வாழ்ந்த அந்தக்காலத்தில் கல்வி கற்க முடியாத ஒருவன் ஏழை மாணவனைப்பார்த்து கூட இவ்வாறு கூறியிருக்கலாம். ஆனால் இன்றும் இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கூறக்கூடிய வகையில் உதாரணங்கள் பல எம் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன.
பஞ்சம் பட்டினி என்று வரலாறு இருந்தாலும் சொல்லிக்கொள்ளுமளவுக்கு கல்வித்தரம் வளரர்ச்சி கண்டுவரும் மலையகத்தில் தான் இவ்வாறு சில உதாரணங்களை கவனிக்க முடிகிறது.
பாடசாலைக்கு செல்வது பற்றி எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் 2 மணிக்கு பிறகு ஒரு நிமிஷமும் பாடசாலையில் நிற்கமாட்டேன் என்று அந்த மாணவன் அடம்பிடிக்கிறான். அழுகின்றான். இப்போதைக்கு சுரேஷ் அவனை என்று அழைப்பபோம்.
சுரேஷ் பாடசாலைக்கு தவறாமல் வந்து போனாலேயே போதுமே என அதிபர்
ஆசிரியர்களும் மனம் மகிழ்ந்து பாடத்தை கற்பித்துக் கொடுப்பதோடு இல்லாமல் காலை உணவை ஒரு ஆசிரியர் கொண்டு வந்து அந்த சுரேஷுடன் பகிர்ந்து சாப்பிடுகிறார்.இன்னுமொரு ஆசிரியை இடைவேளைக்கு அந்த சுரேஷுக்கு தனது சாப்பாட்டில் கொஞ்சம் கொடுத்து கவனித்துக் கொள்கின்றார். இப்படி மொத்த பாடசாலையுமே அந்த மாணவனை தன் பிள்ளையாக கருதி ஊட்டி வளர்க்கின்றனர். அவ்வளவிற்கு சுரேஷை அனைவருக்கும் பிடிக்கும். பாடசாலையின் செல்லக்குழந்தை. பாடசாலைக்கே வராமல் ஒளிந்து திரியும் பிள்ளைகள் மத்தியில் நேரத்துக்கு பாடசாலைக்கு வந்து போகும் சுரேஷ் போன்ற பிள்ளைகளை யாருக்குத்தான் பிடிக்காது. சுரேஷின் குடும்பப் பின்னணி தெரிந்த அனைவரும் அவனை செல்லம் கொஞ்சுவர்.
பாடசாலை மாணவனை ஊட்டி வளர்க்கின்றது என்றால் அம்மாணவனது பெற்றோர் என்ன செய்கின்றார்கள்? குறித்த மாணவனுக்கு ஏழு வயது. தாயும் தந்தையும் இருக்கின்றார்கள் ஆனால் பிள்ளையை தாத்தா தான் வளர்க்கின்றார். காரணம் தாய் வேறு ஒருவரை திருமணம் முடித்து சென்றுவிட்டார். பின்னர் சிறிது காலம் தந்தையின் அரவணைப்பில் இருக்க அந்த தந்தையும் ஒருநாள் வேறு ஒரு திருமணம் முடித்துக்கொண்டு சென்றுவிட்டார். தாய், தந்தை என இரண்டுபேரும் உயிருடன் இருந்தும் பிள்ளை அநாதையாக்கப்பட்டுவிட்டான். சுயநல சுகத்துக்காக பெற்ற பிள்ளையைவிட்டுவிட்டு சென்ற அந்த பெற்றோர் பிள்ளையைப்பற்றி கவலைப் படுவதாகவும் இல்லை. மகளுடைய மகன் எனது பேரப்பிள்ளை அநாதையாக இருக்கின்றானே என தாத்தா அவனை அரவணைத்து ஏதோ அவரால் முடிந்தவரை பாடசாலைக்கு அனுப்பிவிடுகின்றார். வயது முதிர்ந்த அவரால் அதுமட்டுமே செய்யமுடியும்.
தாத்தாவுக்கு காலையில் பேரன் சாப்பிடவேண்டுமே என்ற கவலையில்லை. பாடசாலையில் தான் இலவச சாப்பாட்டோடு சுகபோக கவனிப்பு அவனுக்கு நடக்கிறதே. தாய்ப் பாசத்தில் தந்தையின் அரவணைப்பில் வாழவேண்டிய அந்தப் பிஞ்சு உள்ளம் காலப்போக்கில் தாத்தாவின் உலகத்துக்குள்ளே சிக்கிக்கொள்கிறது.பொல்லூன்றி நடக்கும் தாத்தாவுக்கு நிரந்தர வேலையில்லை. கஷ்டப்பட்டு வேலையசெய்யவும் அவரால் முடியாது. மகளுடன் இருக்கும் வரை மகள் குடும்பத்தை கவனித்துக் கொண்டாள். அவள் போன பின் மருமகன் குடும்ப வருமானத்தை கவனித்துக்கொண்டான். இருவருமே அவர்களது குடும்பத்தை கவனிக்கப் போய்விட்டார்கள்.
பேரப்பிள்ளையை வளர்க்க முடிவு செய்கிறார். காலையில் பேரனை பாடசாலைக்கு அனுப்பிவைக்கிறார். அதற்கு பிறகு மாலைவரை நகரத்தில் பிச்சைஎடுக்கிறார். ஐயா சாமி என கைநீட்டி பெறும் சில்லறைகள் இரவுநேர சாப்பாட்டுக்கு உதவுகிறது.லயத்தில் இருக்கும் வீட்டிலிருந்து தூரத்தில் இருக்கும் பாடசாலைக்கு சென்று பின்னர் சுரேஷ் தாத்தாவுடன் சேர்ந்து சந்தோஷமாக பிச்சையெடுக்கின்றான். வயது முதிர்ந்த தாத்தா வளராத பிஞ்சு டவுனில் கைநீட்ட கிடைக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு சாப்பாட்டையும் வாங்கிக்கொண்டு இரவு அல்லது மாலையில் வீடுதிரும்புவார்களாம். இதுவரைக்கும் சுரேஷ் பாடசாலை சீருடையில் தான் பெரும்பாலும் இருப்பானாம்.பிச்சை எடுக்கும்போது டவுனில் ஆசிரியரோ அதிபரோ கண்டுவிட்டால் ஓடி ஒளிந்துவிடுவான் சுரேஷ்.
ஆசிரியர்களும் எவ்வளவோ அரிவுரை கூறியும் பலனில்லை ஒருநாள் தாத்தாவிடமும் அதிபர் கண்டிப்பாக பேசினாராம் அதற்கு அந்த தாத்தா இனிமேல் அவன் பிச்சை எடுக்க போகமாட்டான் என்று கூறினாராம். ஆனால் நிலைமை மாறிவிட்டது. சுரேஷ் கை நீட்டி பணம் கேட்க பழகிவிட்டான் அவனை இப்போது கட்டுப்படுத்த முடியவில்லை என்ற காரணத்தினால்
பணத்துக்காக கையேந்தும் படலம் தொடர்கிறது.
எத்தனை மணிவரை பிச்சை எடுத்து வீட்டுக்குப் போனாலும் அடுத்த நாள் காலை அழுக்கான சீருடையுடன் கிழிந்த சப்பாத்துடன் பாடசாலைக்கு சுரேஷ் வந்துவிடுவான். சுமாராக படிப்பவனும் இல்லை. இப்படி பாடசாலைக்கு வந்து போனால் ஏதாவது மண்டைக்குள் நுழையலாம் என்பது ஆசிரியர் அதிபர்களின் எதிர்பார்ப்பு.
சுரேஷ் போன்று எத்தனையோ பிஞ்சு உள்ளங்கள் தவறான வழிக்கு சென்று விட்டன. தாய் தந்தை கவனிப்பில்லாமல் கொழும்புக்கு வேலைசெய்யும் சிறுவர் தொழிலாளர்கள், போதை வஸ்து கடத்தலில் தொடர்புபட்டு கைதாகியுள்ள சிறுவர்கள், இளவயதில் திருமணம் என பல உதாரணங்கள் இருக்கின்றன.
அநேகமான பெற்றோர்கள் தங்களது வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்துக்கொள்ளாமையும் குடும்ப உறவைப்பேணுவதில் சிக்கலை ஏற்படுத்திக்கொள்வது போன்ற விடயங்கள் சுரேஷ்போன்ற சிறுவர்கள் உருவாக காரணமாக இருக்கின்றன என மலையக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மதரீதியான கட்டமைப்பு இல்லை, திட்டமிட்ட வேலைவாய்ப்பு இல்லை, குழந்தை பராமரிப்பு தொடர்பான அறிவு இல்லை, கட்டாயக் கல்வி தொடர்பாக பெற்றோர்களிடத்தில் அக்கறையின்மை, பிள்ளையை சுமையாக கருதி வேறு ஒருவரிடத்தில் வளர்த்தல் என பல காரணங்களும் சுட்டிக்காட்டப்பட்டன. அதேநேரம் மலையகத்தில் இரண்டாம் முறை திருமணங்கள் அதிகரித்து வருகின்றமையையும் இதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது.
மலையக மக்கள் கல்வியறிவில் பின்தள்ளப்பட்டமைக்கு கட்டாயக்கல்வி தொடர்பான விழிப்புணர்வு இல்லை. கடந்து வந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் பெருந்தோட்டதுறையிலிருந்து வருமானத்ததை ஈட்டிக்கொள்ளவேண்டுமென்று கருதுகிறதே தவிர, அவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்கான கொள்கை வகுப்புக்களை வகுக்கவில்லை.
பாடசாலையிலிருந்து இடைவிலகி மலையகத்திலிருந்து கொழும்புக்கு வேலைக்கு வரும் சிறுவர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியாமை இதற்கு தக்க சான்றாகும்.
சுரேஷ் போன்றுபிச்சை எடுக்கும் சிறுவர்கள் இந்த நிலைமைக்குத்தள்ளப்பட அவன் சார்ந்த சூழலும் காரணமாக இருக்கின்றது என அதிபர் ஒருவர் சுட்டிக்காட்டினார். தாத்தா பிச்சை எடுத்தால் இரண்டுமணிக்கு பின்னர் அவனை அயல் வீட்டார் கூட அரவணைத்துக் கொள்வதில்லை. அப்படி செய்திருந்தால் சுரேஷ் பிச்சை எடுத்திருக்க மாட்டான். இல்லை தனது பிள்ளைகளோடு விளையாட விட்டிருந்தால்கூட அந்த உலகத்தில் பிச்சைஎடுக்கவேண்டுமென்ற சிந்தனையை மறந்திருப்பான். இதில் எவற்றையுமே செய்யாத இந்த சமூகத்திடமிருந்து நல்லதை எப்படி பெறமுடியும்?
No comments:
Post a Comment