அத்துரலிய ரத்ன தேரர் |
இது தொடர்பாக அவர் விளக்கமளித்த தகவல்கள் செவ்வியாக தொகுக்கப்பட்டுள்ளன.
கேள்வி- நச்சு இரசாயன பாவனையை மூன்று வருடங்களில் தடுக்கும் செயற்திட்டம் எந்தெந்த பகுதிகளில் நடைமுறைப் படுத்தவுள்ளீர்கள்?
பதில்- ஒரு ஹெக்டேயருக்கு 12 ஆயிரத்து 500 ரூபாவை வழங்கி அதில் நச்சு கலவை இல்லாத உற்பத்தியை பெற்றுக்கொள்ளும் ஊக்குவிப்பு திட்டமே இந்த விசமில்லாத விவசாயம். விஷமில்லாத உணவுகளை உற்பத்தி செய்யும் எமது திட்டத்தினை இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் செய்ய திட்டமிட்டுள்ளோம். விசேடமாக கிளிநொச்சி, அம்பாறை, வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மாவட்டங்களில்
சிறுபோக பயிர்ச்செய்கை செய்வதில்லை.
எனவே, அங்கு சிறுபோக உற்பத்தியை அத்துடன் உடவளவை போன்ற நீரேந்து பகுதிகளிலும் சிறுபோக உற்பத்தியை மேற்கொள்ளவுள்ளோம். இவ்வாறு நாடு பூராகவும் நாம் சிறுபோக உற்பத்தியினூடாக நெல் உற்பத்தியை ஊக்குவித்து அதில் விஷ இரசாயன பாவனையை குறைக்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
நெல் உற்பத்தியில் இயற்கை பசளைகளை பாவித்து உற்பத்தியை ஆரோக்கியமாக பெறவேண்டும். மேலும் நெல் அறுவடை செய்ய சுமார் எட்டு லட்சம் பெறுமதியான அறுவடை இயந்திரத்தை உபயோகப்படுத்தவுள்ளோம். இப்போதைக்கு நாம் சிறுபோகத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம் என்பதால் முடிந்தளவுக்கு தொழில்நுட்ப உதவியுடன் விளைச்சலை பெற திட்டமிட்டுள்ளோம். ஆனால் பெரும்போக உற்பத்தி என்று ஆரம்பிக்குபோது நாம் இன்னும் தொழில்நுட்பத்தையும் அறிவையும் பயன்படுத்த வேண்டும். ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தோம். இருப்பினும் இபோதைக்கு 20 ஆயிரம் ஏக்கரில் பயிர்ச்செய்கையை ஆரம்பித்துள்ளோம்.
கேள்வி- விஷமில்லாத உணவை உற்பத்தி செய்வதிலுள்ள சவால்கள் என்ன?
பதில்- முதலாவதாக எமக்கு தொழில்நுட்ப அறிவுடன் கூடிய பணியாளர்கள் இல்லை என்பது ஒரு சவாலாக இருக்கின்றது. அவர்களுக்கு இலவசமாக பயிற்சிகளை வழங்கவுள்ளோம்.பயிற்சி பெற்ற 500 பேரை இணைத்துக் கொள்ளவும் இருக்கிறோம். நாம் உணவை காலம்காலமாக உற்பத்தி செய்துகொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் அதனை எப்படி உற்பத்தி செய்கின்றோம் என்பது தான் முக்கியம். இரசாயன கலவை இல்லாத உணவை உற்பத்தி செய்வது தொடர்பான அறிவு விவசாயிகளுக்கு தேவை.
அந்த அறிவை நாம் முதலில் வழங்கவேண்டும். அதுவொரு பாரிய சவால். மக்களை பழைமை என்னும் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு நவீனத்துக்கு கொண்டுவருவது கடினம்.
அடுத்ததாக இயந்திரங்களை கொள்வனவு செய்வது, உரங்களை பெற்றுக்கொள்வது என பல பிரச்சினைகளுக்கு மத்தியில் அவர்கள் உரத்தை பெற்றுக்கொள்ள கொழும்புக்கு சென்றுவருவதும் ஒரு பிரச்சினையாக உள்ளது. மக்கள் மற்றும் அதிகாரிகள் இதில் அதிகஅக்கறையுடன் இருக்கின்றார்கள். எனவே எத்தகைய சவால்கள் வந்தாலும் அதற்கு முகம் கொடுக்க தயாராக இருக்கிறோம். எமக்கு ஜனாதிபதி செயலகம் மற்றும் விவசாய அமைச்சு என்பன இணைந்து ஆதரவு தருகின்றது. இதுவரை விஷ இரசாயனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் எவ்வித எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை.
கேள்வி- உரமானியம் வழங்கும் திட்டம் இதிலுள்ளதா?
பதில்- விஷமில்லாத உற்பத்தியை பெறுவதற்காக நாம் உர மானியம் வழங்கப்போவதில்லை. உரத்துக்கு பதிலாக நாம் பணத்தை வழங்க திட்டமிட்டுள்ளோம். ஆனால் நாம் களை கொல்லிகளை வாங்குவதற்கு பணம் வழங்கவில்லை. இது நாம் பெற்ற முதலாவது வெற்றியாகக் கருதுகின்றோம். மண் என்பது தான் விவசாயத்துக்கு மிகவும் முக்கியமானது. இதனால் தான் மண்ணை எமது உயிர் நாடி என்கின்றனர்.
இந்த மண்ணிலுள்ள உயிர்ப் பல்வகைமையை குழப்பும் இரசாயனங்களை நாம் பயன்படுத்தப் போவதில்லை. களை கொல்லிகளை பாவிக்கபோவது இல்லை. அதற்கு பதில் இயற்கை உரங்களையும் மரபு ரீதியான உர மற்றும் களை கொல்லிகளையும் நவீனத்துவப்படுத்தி பயன் படுத்தவுள்ளோம். ஒரு ஹெக்டேயருக்கு வருடத்துக்கு இரண்டு தவணைகளில் உரத்துக்கான பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். அதாவது 50 ஆயிரத்தை வருடத்துக்கு பெற்றுக்கொள்ள முடியும். இது முற்று முழுதாக உரத்துக்காக வழங்கப்படும் மானியமாகும். இதனை விவசாயிகள் சேமிக்கவும் செய்யலாம்.
கேள்வி- இந்தத் திட்டத்தினூடாக நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
பதில்- இப்படியாக நாம் ஆரோக்கியமான வகையில் பெரும் உணவை உண்பதன் மூலம் ரசாயன கலவைகளினால் வரும் சிறுநீரக நோய் வராது. இன்று வட மத்திய மாகாணத்தில் சிறுநீரக நோய் அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரு சரியான தீர்வாக விசமில்லாத விவசாயம் அமையும். இன்னும் மூன்று வருடங்களில் நச்சு இரசாயன பாவனையை குறைக்க முடியும்.
கேள்வி- நெல்லை கொள்வனவு செய்ய என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
பதில்- தேசிய நெல் வர்க்கங்களை மக்களுக்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். அந்த நெல்லை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மிகப்பாரிய அளவில் நெல்லை இதுவரை கொள்வனவு செய்துள்ளோம். தொழில்நுட்ப முறையில் நெல்லை விதைத்தல், அறுவடை செய்தல் என்பவற்றில் நட்டம் இல்லை.
கேள்வி-மேலதிக தகவல்கள் மற்றும் உதவிகளை பெற்றுக்கொள்ள பிரதேச அடிப்படையில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா?
பதில்- இதுவரை காரியாலயங்கள் அமைக்கப்படவில்லை. ஜனாதிபதி செயலகத்தில் தான் இப்போதைக்கு ஒரு காரியாலயம் இருக்கிறது. அது திட்டத்தை மேம்படுத்த அமைக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் அனைத்தையும் விவசாய அமைச்சிடம் பெற்றுக்கொள்ளமுடியும். மகாவலி அபிவிருத்தி மற்றும் பிரதேச அரச திணைக்களங்களின் மூலமாகவும் தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.
ஏ.ஜெயசூரியன்
No comments:
Post a Comment