ஏ .ஜெயசூரியன்
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்பியுமான மஹிந்த ராஜபக்ச தான் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் தமக்கு கிடைக்கப்படவேண்டிய வீடு மற்றும் வாகனம் என்பவற்றை பெற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறு நாடுமுளுவதும் உள்ள மக்கள் தம்மிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே மக்கள் தொடர்பாடல் அலுவலகம் உருவாக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவிக்கின்றார்.
ஆனால் இன்றைய ஆட்சி மாற்றத்துக்கும் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக கொண்டுவருவதிலும் களத்திலிறங்கிய அரசியல் செய்த சந்திரிகா தேர்தல் மேடைகளிலும் நேர்காணல்களிலும் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் தமக்கு வழங்கவேண்டிய வீட்டைக்கூட வழங்காமல் மஹிந்த ராஜபக்ச ஓட ஓட துரத்தினார் என்று கூறியிருந்தமை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது.
இன்று தமக்கு கிடைக்கவேண்டியதற்காக போராடுவதாக கூறும் மஹிந்த தரப்பு பொதுமக்களுக்கு கிடைக்கவேண்டியதை அன்று வழங்கியதா? என்று பல வினாக்கலும் எழத்தான் செய்கிறது.
ஞாயிறு தினக்குரலுக்காக வழங்கிய செவ்வியில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன கூர்யா கருத்துக்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
கேள்வி: முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்பியுமான மஹிந்த ராஜபக்ச தற்பொழுது தமக்கென அரசியல் காரியாலயமொன்றை திறக்க வேண்டியதன் அவசியம் என்ன?
பதில்: முன்னாள் ஜனாதிபதி என்றவகையில் மஹிந்த ராஜபக்சவுக்கு அரசினால் வழங்கவேண்டிய வீடு மற்றும் வாகனம் வழங்கப்படவில்லை. முழு நாடு முழுவதுமுள்ள மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கவேண்டிய இந்த விடயங்களை அரசிடம் கேட்கவே இந்த மக்கள் தொடர்பாடல் அலுவலகம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
கேள்வி: முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கவேண்டிய வாகனம் மற்றும் வீடு என்பனவற்றை மஹிந்த ராஜபக்ச காலத்தில் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவுக்கு வழங்கினாரா?
பதில்: ஆம்இ மஹிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவுக்கு அவர் விரும்பி கேட்ட இடத்தில் அலுவலகத்துடன் கூடிய மிகப்பெரிய வீடு சுதந்திர மாவத்தையில் வழங்கினார். அவர் இன்றும் அந்த வீட்டில் தான் இருக்கிறார். ஆனால் நாம் இன்றுவரை கேட்டும்கூட அரசாங்கம் வீட்டை வழங்க எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
கேள்வி: இந்த அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாட்டில் ஈடுபடவே இந்த மக்கள் தொடர்பால் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதாக கூறப்படுவது எந்தளவுக்கு உண்மை?
பதில்: தற்பொழுது மஹிந்த ராஜபக்ச என்பவர் அரச அமைச்சர் இல்லை. அவர் எதிர்க்கட்சியாக இருக்கிறார். மஹிந்த எங்கே போகிறார் அவர் என்ன செய்கிறார்? இதைத்தான் அரசாங்கம் தேடுகிறது. அரசாங்கத்துக்கு வேறு வேலை இல்லை. அத்தோடு தற்போதைய ஜனாதிபதிகூட ஆளும் கட்சியில் இல்லாதபோது அரசாங்கத்துக்கு ஒருவித பயம் ஏற்பட்டுள்ளது.அரசாங்கம் என்ன செய்கிறது என்பது எமக்கு தேவையில்லை.
கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பத்தை உண்டுபண்ண மஹிந்த தரப்பு கூட்டாக செயற்படுகின்றது என்றும் கூறப்படுகிறதே?
பதில்: ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இன்னும் இருக்கின்றன. ஒரு தரப்பு அரசாங்கம் மறுதரப்பு எதிர்க்கட்சிகள் என பிரச்சினைகள் இருக்கின்றன. சிறு பிள்ளையை கேட்டால்கூட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினை பற்றி கூறும். இதில் நாம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டியதில்லை.
கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் உங்களது கட்சியும் பங்குவகித்துள்ளது. அந்தவகையில் தற்பொழுது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட அரசாங்கம் அல்லாத ஐக்கியதேசிய கட்சி காரணமாக இருக்கும் என கருதுகின்றீர்களா ?
பதில்:அரசாங்கத்தில் பிரதமரும் ஜனாதிபதியும் இருக்கின்றனர். இவ்வரசாங்கத்தின் பிரதமருக்கு கீழேதான் ஏனைய அனைவரும் இருக்கின்றனர். ஏனவே இது அறிலங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கம் இல்லை. ஐக்கியதேசிய கட்சியிடம்தான் இனி கேட்கவேண்டும். இதற்கு நான் பதில் கூறமுடியாது.
கேள்வி: யோசித்த ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் என சில விமரசனங்களும் இருக்கின்றதே? இதுபற்றி உங்களது கருத்து என்ன?
பதில்: நீதிமன்ற வழக்கிலுள்ள ஒரு விடயம் தொடர்பாக நான் கருத்து கூறவிரும்பவில்லை. நாட்டில் அரசியல் பழிவாங்கல் நடக்கிறது தொடர்பாக நான் மிகவும் மனவேதனையடைகிறேன்.
கேள்வி: தேராவாத பௌத்தம் தொடர்பான சட்டமூலத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது பற்றி?
பதில்: சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாள்முதல் தேராவாத சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்புக்களை தெரிவித்து வந்தேன்.இன்று அது தவறான சட்டமூலம் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நீதிமன்றுக்கு தேரர்களை அழைப்பது தவறானது. அதற்கு நான் முதல் எமது தரப்பினர்களும் எதிர்ப்புக்களை தெரிவிப்போம். இந்த சட்டமூலத்தை சட்டமாக அங்கீகரிக்க இடமளிக்கமாட்டோம்.
கேள்வி: இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்படுமென மஹிந்த தரப்பு கூறிவருகிறதே?
பதில்: நாங்கள் சர்வதேச விசாரணையை நிராகரித்துள்ளோம். பொய்யான கருத்துக்கள் என்று உறுதி செய்யப்பட்ட விடயங்களை மீண்டும் இந்த அரசாங்கம் விசாரிக்கவுள்ளது. இலங்கைக்கு எதிராக பொய்யான கருத்துக்களை கூறி நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு கேடுவிளைவிக்கும் செயல் என்றும் நாம் இதனை நிராகரித்துள்ளோம்.
கேள்வி: பெண்களின் பிரதிநித்தித்துவம் பாராளுமன்றில் அதிகரிக்கப்படவேண்டுமென அண்மையில் சட்டம் அங்கீகாரம் பெற்றது தொடர்பாக உங்களது கருத்து என்ன?
பதில்: நாங்கள் சட்டத்தின் பிரகாரம் அந்த சட்டமூலத்துக்கு அனுமதி வழங்கினோம் அத்தோடு இந்த விடயத்தில் பிரதமரின் குழுவுக்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலும் நாம் ஆதரவு வழங்கினோம். பாராளுமன்றில் பெண்களின் பிரதிநித்தித்துவம் அதிகரிக்கப்படவேண்டும் என்பதில் நாம் ஆரம்ப காலம் முதலேயே பேசிவருகிறோம். எனவே இந்த அரசாங்கம் முன்வைத்த சட்டமூலத்துக்கு தடையின்றி ஆதரவு வழங்கினோம்.
கேள்வி: கட்சிக்கு எதிராக செயற்ப்பட்ட ஏழுபேரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உடனடியாக நீக்கியுள்ளதே?
பதில்: இது தொடர்பாக என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த 38 பேர் ஒன்றிணைந்த எதிர்கட்சில் இருக்கின்றார்கள் என்பதை கூறமுடியும்.
கேள்வி: பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதை உங்களது ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எவ்வாறு பார்க்கிறது?
பதில்: இந்த விவாகரம் தொடர்பாக என்னால் எதுவும் கூற முடியாது ஆனால் ஒரு விடயத்தை நான் இங்கு கூறவேண்டும் அதாவது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியலில் இல்லாத ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க முடியாது என்று கூறியிருந்தார். அவர் அன்று கூறிய வார்த்தைகள் இன்று பொய்யாகிவிட்டன.
No comments:
Post a Comment