பத்துமாதமாய் பாடுபடும் மீரியபெத்த மக்கள் .
ஏ.ஜெயசூரியன்
இலங்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய மண்சரிவாக கடந்தவருடம் இறுதியில் பதுளை கொஸ்லாந்தையிலுள்ள மீரியபெத்தை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு பதியப்பட்டது. இயற்கையின் சீற்றத்துக்குள்ளான மீரியபெத்தை அவலம் அக்டோபர்மாதம் முதல் இன்றுவரை என்ன நடக்கிறது? உலகின் கவனத்தை ஈர்த்த இந்த மண்சரிவுக்கு பாகிஸ்தான், கனடா, இந்தியா எனப் பல நாடுகள் உதவிகளையும், நிவாரணங்களையும் அள்ளித் தந்ததை அன்று ஊடகங்கள் படம்போட்டுக் காட்டியது யாரும் மறக்கவாய்ப்பில்லை.
மண்சரிவில் உயிரிழந்த 37 குடும்பங்களின் உறவுகளும் உயிரை காப்பாற்றிக்கொண்டு வாழத்துடிக்கும் மக்களும் இனி இப்படி ஒரு மண்சரிவில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று ஓடி ஓடி பாதுகாப்புத்தேடிக் கொள்ளும் மக்களும் இன்று என்ன செய்கிறார்கள்?
பத்துமாதத்தை எட்டும் இந்த மண்சரிவின் அவலம் இன்றும் தொடர்கிறது என்றால் நம்பவும் முடியுமா?, ஆனால் அதுவே உண்மை மண்சரிந்த இடம் தடம் தெரியாமல் புற்கள் வளர்ந்துவிட்டன. தூரமாய் மண்சரிந்த மலையில் மட்டும் செம்மண் சிரிப்பதுபோல் மஞ்சள் மண் தெரிகிறது. மண்சரிய காரணம் என்று கூறப்பட்ட ஊற்று தடையில் அடிவாரத்தில் சத்தமிட்டு செல்கிறது.
மண்சரிந்த பகுதிக்கு அண்மையிலுள்ள வீடுகளில் வெடிப்புகள் இருக்கின்றன. ஆனாலும், அந்த வீடுகளில் சிலர் உயிர்போனாலும் பரவாயில்லை என்று வாழ்கின்றார்கள்.
Panneerselvam |
வாழ்வின் கொடுமையிலும், மரணத்தின் வாசலில் இப்படி சுமார் 23 குடும்பங்கள் அங்கு வாழ்கின்றன. ஆபத்தான பகுதி என கூறிய மீரியபெத்தைக்கு அருகில் வாழும் இவர்கள் தற்காலிகமாக ஓர் இடத்தையேனும் வழங்குமாறு கேட்கின்றனர்.
மீரியபெத்தை மண்சரிவுக்குப் பின்னர் அந்த இடத்தை ஆபத்தான இடமாக அறிவித்த அரசாங்கம் மண்சரிவால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே வீடுகளை கட்டிக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது. மண்சரிவதால் வீடுகள் பாதிக்கப்படும் ஆபத்தில் இருக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை.
பாதுகாப்பைத் தேடி சிலர் வீடுகளிலுள்ள பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு செல்வதையும் இங்கு அவதானிக்க முடிந்தது.
மண்சரிவு வரலாம் என்று எச்சரிக்கை விடப்பட்ட மக்களுக்கு இந்த நிலைமை என்றால், மண்சரிவால் நேரடியாக பாதிக்கப்பட்டு உயிர்களையும், உடைமைகளையும் இழந்த மக்களின் நிலை எப்படி இருக்கிறது?
மீரியபெத்தையிலிருந்து சுமார் 30 கிலோ மீற்றர் தூரத்தில் மலை உச்சியில் மாகந்த என்ற பிரதேசத்தில் உள்ள மிகப் பழைமையான ஓர் தேயிலைத் தொழிற்சாலையில் இந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். தற்காலிகமாக தங்கவைக்கப்பட்ட இவர்களை நிரந்தரமாக அங்கேயே தங்கவைத்துவிடுவார்களோ என்று இந்த மக்கள் பதறுகின்றனர்.
இந்த பதற்றத்துக்கு காரணம் பாதுகாப்பான வீடு கட்டித்தரப்படுவதிலுள்ள இழுத்தடிப்பும், குழப்பங்களுமே அதாவது மீரியபெத்தை மண்சரிவில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் என்று பதிவு செய்யப்பட்டவர்கள் 75பேர். ஆனால், ஒரே வீட்டில் வாழ்ந்து இரண்டு மூன்று குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை. ஆனால் அவர்கள் தனி வாக்காளர்-இடாப்பில் பதிவு செய்யப்பட்டதாக ஆதாரத்தை காட்டுகின்றனர்.
இதைவிட தங்கை என்னுடன் இருந்தாள், என்று ஒருவரும் அண்ணன் வீட்டில் இருந்தேன். என ஒருவரும் கூறி தங்களுக்கு தனிவீடு வேண்டும் என கேட்கின்றனர் இதுபோன்ற பிரச்சினைகளும் எழுகின்றன. இப்படி பிரச்சினைகளுக்குள்ளானவர்களில் பலர் தங்களுக்கும் வீடு வேண்டுமென கேட்டுள்ளனர். இன்று 93 வீடுகள் மொத்தமாக தேவைப்படுவதாக மாகந்த தற்காலிக முகாமைச் சேர்ந்த வயதான ஐயா தெரிவித்தார்.
மண்சரிவு ஏற்பட்டபோது வாழ்ந்த மக்களுக்கு வீடுகளை வழங்குவதில் அரசாங்கத்துக்கு என்ன பிரச்சினை இருக்கிறது. வெளிநாடுகள் கொடுத்த நிவாரணம், பணம், உள்நாட்டில் மக்கள் கொடுத்த பணம், நிவாரணம் மூலம் இதனை செய்யலாம். அதேநேரம் மக்கள் கூட்டுக் குடும்பங்களாக வாழ அரசு வழங்கும் தற்போதைய வீடு போதுமானதா? வீடில்லாத மக்களுக்கு என்னதான் வழி? என்று வீட்டையும், உறவுகளையும் இழந்த மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது நியாயமான கேள்விதான்.
ஒரு குடும்பத்தில் அம்மா, அப்பா, ஒரு மகன் அவனது மனைவி அவர்களது பிள்ளைகள், அம்மாவின் சகோதரர்கள் என்று வாழ்ந்து கொண்டிருந்த குடும்பம், இன்று எப்படி வாழும்? ஏற்கனவே லயன் அறைகளாக இருந்தாலும் தனியறை வழங்கப்பட்டிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. அதைத்தான் அப்போதும் செய்யவில்லையே. இது கூட்டுக் குடும்ப கட்டமைப்புக்குள்ளும் உள்ளடங்காது. எனவே, தனிக்குடும்பங்களாகவே இவர்கள் வாழவைக்கப்படவேண்டும்.
மேலும், இந்த முகாமில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளும் இருக்கின்றன. மலசலகூடக்குழி நிரம்பியதால் அதை மிக சிரமப்பட்டு அதனை துப்புரவு செய்ததாக முகாமில் வசிக்கும் கலைமகள் என்பவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம் சமைத்து உண்பதற்குரிய பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் வழங்கப்படவில்லை. அறைக்குள் சமைத்துண்ண முடியாது. வெளியிலேயே சமைக்கவேண்டும் காரணம், எட்டு அடி அறையை விட மிக குறைவான பலகையிலான அறையே அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. இப்படி வாழமுடியாது என சிலர் இந்த முகாமிலிருந்து வெளியேறி வாடகைக்கு அறை எடுத்துக் கொண்டும் வாழ்கின்றனர்.
நேரடியாக மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை கொண்டுவந்து இங்கு தங்கவைத்துள்ள அதேநேரம், மீரியபெத்தையில் கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்த குடும்பங்களையும் தனியான அறையில் தனிக் குடும்பங்களாக தங்கவைத்துள்ளனர். ஆனால், இவர்களுக்கு அரசினால் கட்டித்தரும் வீடுகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிப்பை எதிர்நோக்கவுள்ளவர்களுக்கும் பாதுகாப்பான வீடுகளை வழங்கவேண்டியது அரசின் கடமை. மாகந்த தற்காலிக முகாமில் 55 அறைகள் இருக்கின்றன. 93 குடும்பங்களைச் சேர்ந்த 280 பேர் வசிக்கின்றனர். 87 குடும்பங்களுக்கு ஒரு கிழமைக்குத் தேவையான உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளவென கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளன.
Chellamma |
சமூகக் கட்டுப்பாடு மற்றும் கலாசாரம் என்பவற்றை கடந்து முகாமுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள் சுதந்திரமாக தனி வீடுகளில் வாழவேண்டும் என்பதையே வலியுறுத்தினார்கள்.
இவர்களுக்காக மக்கள்தெனிய என்ற இடத்தில் 75 வீடுகள் கட்ட கடந்த மார்ச் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதன் கட்டுமானப் பணிகள் இன்னும் முடிவடையாது கட்டுமானப் பணிகள் தொடர்கின்றன. முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் 90% என ஒரு வீடுகளும் இல்லை. ஓரளவு வேலைகள் முடிக்கப்பட்ட வீடுகள் என்று நான்கு வீடுகளை கட்டுமானப் பணியில் ஈடுபடும் இராணுவத்தினர் காட்டினர். ஏனைய வீடுகளில் சுவர்கள் எழும்பியிருக்கின்றன சிலவற்றுக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது.
ஏன் இன்னும் வீடுகள் முழுமைப்படுத்தப்படாமல் இருக்கின்றன என இராணுவத்தினரிடம் விசாரித்தபோது, வீடுகளைக் கட்டுவதற்கு பொருட்கள் வழங்கப்பட்டால் நாங்கள் எப்போதோ வீடுகளைக் கட்டி முடித்திருப்போம் என்றனர். யார் எங்களுக்கு வீடுகளைக் கட்டுவதற்குரிய பொருட்களை தருகின்றார்கள்? என்று கேட்டபொழுது பிரதேச செயலகம்தான் வழங்கும் என்றார்கள்.
நீங்கள் பொருட்களை கேட்கவில்லையா? என்றபோது இராணுவத்தினர் வீடுகளைக் கட்டுவதற்குரிய ஆளணியை மட்டுமே வழங்குகின்றனர். பொருட்களை நாம் கேட்க முடியாது என்று தெரிவித்தனர். பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டும் பயனளிக்கவில்லை.
இவற்றையெல்லாம் கடவுளிடம் நொந்துகொள்ளவேண்டும் என்றாலும் ஊருக்கே காவல்காத்து வந்த மகாமுனியின் தெய்வசிலை சரிந்து கிடக்கிறது. மண்சரிவினால் சரிந்து மண்ணுக்குள் புதைந்த மகாமுனி சிலையை ஒரு மாதிரியாக கண்டுபிடித்து வைத்துள்ளனர்.
Subramani |
அம்மன், பிள்ளையார், முருகன், நவக்கிரகம் என்று பல தெய்வங்கள் மகாமுனி கோயிலில் இருந்துள்ளது. இதில் மகாமுனி ஒரு கையுடன் முழுச்சிலையும், அம்மன் சிலையின் தலைப்பகுதி மட்டுமே கண்டெடுக்கப்பட்டு கோயிலிலிருந்த பகுதியில் வைத்துள்ளனர். பிள்ளைப்பேறு இல்லாதவர்களின் குறையைத் தீர்த்த மகாமுனியை மொழி, இன வேறுபாடின்றி இன்றும் வழிபட்டுவருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதைவிட மக்கள்தெனியவில் அரசினால் ஏழுபேர்ச் காணியில் கட்டிக் கொடுக்கப்படுவதாக கூறப்பட்ட வீடு ஐந்து பேர்ச் அளவில்தான் இருக்கிறது என்று முகாம் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். 270 பேர் வரை கல்விகற்ற மீரியபெத்தை தமிழ் வித்தியாலய மாணவர்கள் கொஸ்லாந்தை கணேஷா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றனர். மீரியபெத்தை மாணவர்கள் சிலர் இப்படி கூறுகிறார்கள்.
எங்களுக்கு கணேஷா வித்தியாலயத்துக்குச் செல்ல பிடிக்கவில்லை. மீரியபெத்தை மண்சரிந்த இடத்திற்கு அருகிலிருக்கும் நாங்கள் கணேஷா வித்தியாலயத்திற்கு செல்வது தூரம்’ என்றனர். மாணவர்களின் இந்தக் கருத்து அவர்களின் எதிர்காலக் கல்வியை கேள்விக்குறியாக்குகின்றது. அதேநேரம்
தாய், தந்தையை இழந்த இரண்டு சிறுவர்களும் மாகந்த தற்காலிக முகாமில் வசிக்கின்றனர். பாட்டியின் அரவணைப்பில் வாழும் இந்த சிறுவர்களுக்கு எந்தவித உதவியும் இல்லை.
Parameshwari |
மாகாந்த தொழிற்சாலையில் உள்ள அறையில் இருந்தவர்களின் மரண சான்றிதழ்கள் பிரதி ஒட்டப்பட்டுள்ளது.
பத்துமாதமாக பல இன்னல்களுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு இன்றும் விடுதலை இல்லை என்றால் இதற்கு பொறுப்புக் கூறவேண்டியது யார்?
100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பெய்தால் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு கூறும் அதிகாரிகளே! இவர்களது பாதுகாப்புக்கு எப்போது உறுதி மொழி வழங்குவீர்கள்?
மண்சரிவினால் பாதிக்கப்பட்டு உயிரை இழந்தவர்களின் உயிருக்காவன்றி உயிரை காத்துக்கொண்டு வாழும் உயிர்களையாவது பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார்களா?
No comments:
Post a Comment