Sunday, June 14, 2015

வளலாய் மக்களுக்கு விடுதலை?

ஏ.ஜெயசூரியன்

பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள்ளிருந்து கடந்த பெப்ரவரி மாதம் விடுவிக்கப்பட்ட கோப்பாய் டிவிசனிலுள்ள வளலாய் கிராமத்துக்குள் செல்ல ஓர் சந்தர்ப்பம் கிடைத்தது. கொழும்பு இராணுவ ஊடக பிரிவால் விமானம் மூலம் அழைத்துச்செல்லப்பட்ட ஒருநாளில் நேரடியாக கண்டு கேட்ட விடயங்களின்  ஓர் தொகுப்பாக இந்த விவரணம் அமைந்துள்ளது.


30 தசாப்தகால யுத்தம்  2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாள் முதல் வடக்கு மக்கள் சொந்த நிலம் கிடைக்குமா? எமது நிலத்திலிருந்து படையினரின் முகாம்கள் எப்போது அகற்றப்படும் என்றெல்லாம் புலம்பிக்கொண்டிருந்தனர். இன்னும் இந்த புலம்பல் ஓயவில்லை.

இந்த நிலையில் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து சிறு சிறு கிராமங்கள் விடுவிக்கப்பட்டு மக்கள் அங்கு குடியமர அனுமதிக்கப்பட்டனர். இப்படியாக இதுவரை சுமார் 19 ஆயிரம் ஏக்கர்க்கு மேற்பட்ட நிலங்களை இராணுவம் மக்களிடம் ஒப்படைத்துவிட்டதாக கூறுகிறது. குறிப்பாக பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த 11 ஆயிரத்து 629.72 ஏக்கர் காணியில் 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 6 ஆயிரத்து 258.38 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இது உயர்பாதுகாப்பு வலய மொத்த நிலப்பரப்பில் 50 வீத விடுவிப்பு தற்பொழுது ஐயாயிரத்து 371.34 ஏக்கர் காணி மட்டுமே பலாலி இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என யாழ்ப்பாணம் பலாலியிலுள்ள பாதுகாப்பு படைகளின் தலைமையலுவலகத்தில் கொழும்பு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட அட்டவணையானது. பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஆறு கட்டமாக ஆறாயிரத்து 258.38 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தரப்பு சுட்டிக்காட்டுகிறது. மிகுதியுள்ள ஐயாயிரத்து 371 ஏக்கர் காணியில் பலாலி இராணுவ முகாம், பலாலி விமான நிலையம், வைத்தியசாலை துறைமுகம் என்பன உள்ளடங்குவதோடு இராணுவ பயிற்சி நிலையங்களும் உள்ளடங்குகின்றன. இவற்றை பாதுகாப்பு தேவை கருதியே இராணுவம் வைத்திருப்பதாக யாழ் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்தார்.

வளலாய் விடுவிக்கும் வரை பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த ஏழாயிரத்து 499 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் இருந்த 5145 வீடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினரின்  உத்தியோகபூர்வ  இணையத்தளத்தினூடாக அறியமுடிகிறது.

மேலும், அண்மைக்காலமாக வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவம் விடுவிக்கப்பட்டுள்ள நிலங்களுக்கு செல்லவிடாமல் தடுப்பதாக கூறப்பட்டு வந்தது. இதுபற்றி யாழ்கட்டளைத் தளபதியிடம் கேட்டபோது அவ்வாறு எவ்வித தடையையும் இராணுவம் ஏற்படுத்தவில்லை. எவ்வித அனுமதியும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ள இடங்ளுக்கு மக்கள் சென்று வரலாம் என்றார்.

தொடர்ந்து கொழும்பிலிருந்து சென்ற ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு யாழ் கட்டளைத் தளபதி பதிலளித்ததில் சில விடயங்கள் நுணுக்கமாக ஆராயவேண்டியிருக்கிறது. அதாவது படைக்குறைப்பு செய்யவேண்டியது அரசின் பொறுப்பு என்று கூறிய அவரது கூற்றினூடாக அரசுதான் படைக்குறைப்புக்கு தடையாக இருப்பதாகவே தோன்றுகிறது.

மேலும், வடக்கில் பெண்கள், சிறுவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றார். அப்படி பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக கொலை என்பன எவ்வாறு ஏற்படுகிறது?

2009 ஆம் ஆண்டு மனிதாபிமான செயற்பாடுகளுக்கு பின்னர் வடக்கில் தீவிரவாதம் தலைதூக்கவில்லை. பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்றார். அவ்வாறு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாமல் இருக்கும் நிலையில் ஆவா, டில்லு போன்ற ஆயுதக் குழுக்கள் இருப்பதாக ஏன் கூறப்படுகின்றது?

இராணுவ ஆட்சி நடக்கவில்லை. சிவில் ஆட்சிதான் வடக்கில் நடக்கிறது என்றார். அப்படியென்றால் வடக்கிலிருந்து இராணுவத்தை குறைக்கலாமே? வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கில் இராணுவத்தினராலேயே போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டுவருகிறது என்று ஏன் நேரடியாக கூறவேண்டும்.

பாதுகாப்புக்காக மட்டுமே தற்போது இராணுவம் வடக்கில் இருக்கிறது. அது பாதுகாப்புக்கு  தேவையான அளவுதான் என்றார்.

அப்படி இருக்கையில் இதுவரையில் வடக்கிலுள்ள இராணுவத்தினரின் தொகையை ஏன் வெளிப்படுத்தவில்லை. வடமாகாண முதலமைச்சர் கூறுவதுபோல ஒருவருக்கு ஐந்து இராணுவம் என்ற வீதத்தில்தான் இராணுவம் வடக்கிலிருக்கின்றதா? என்று பல கேள்விகள் எழுந்தன. இதனை எல்லாம் கேட்காமல் இல்லை. கேட்டதற்கு யாழ் கட்டளைத்தளபதி அரசியல் ரீதியாக பதில் கூறமுடியாது என்றார். அங்கு வந்திருந்த மேஜர் ஒருவர் தேசிய பாதுகாப்புகருதி இராணுவத்தினரின் தொகை தொடர்பான புள்ளி விபரங்களை வழங்க முடியாது.சொல்லக்கூடிய காரணங்கள் பல இருக்கின்றன. சொல்லமுடியாத பல காரணங்களும் இருக்கின்றன. அதனை பேசுவதற்கு இது பொருத்தமான இடமல்ல என்று கூறினார்.

அதேநேரம் வடக்கில் மனிதாபிமான செயற்பாடுகளுக்காக அமைக்கப்பட்ட 152 இராணுவ முகாம்களில் தற்பொழுது 93 முகாம்கள் மட்டுமே யாழ்ப்பாணத்தில் இருக்கின்றன. அதில் 2009 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை 59 முகாம்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற விளக்கம் இராணுவத்தரப்பிலிருந்து தரப்பட்டது.

பின்னர்  பாதுகாப்பு உயர் வலயத்திலிருந்து கடந்த பெப்ரவரி மாதம் விடுவிக்கப்பட்ட வளலாய் கிராமத்தை பார்வையிட பஸ்களில் சுமார் பத்து கிலோமீற்றர் பலாலி படைத்தலைமையலுவலகத்திலிருந்து புறப்பட்டோம்.

செம்மண் புழுதி நிறைந்த தொண்டமானாறு- கீரிமலை வீதியில் சென்றபோது தரைமட்டமாக்கப்பட்ட வீடுகளும் வீடு கட்ட ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் வீடுகளையும், குடிசைகளையும் காணக்கூடியதாக இருந்தது.

இடையிடையே பஸ்ஸிலிருந்து இறங்கிய ஊடகவியலாளர்கள் கூட்டம் கண்ணுக்கு தென்பட்ட மக்களிடம் நிலைமையை ஆராய்ந்தனர். சொந்த நிலம் கிடைத்த பூரிப்புடன் பலர் எம்மிடம் கதைத்தனர். நிறுவனங்கள் சிலவற்றினால் கட்டிக்கொடுக்கப்படும் வீடுகள் எதுவும் இன்றும் முற்றுப்பெறாத நிலையில் தொழிலின்றி,  சிறுபனைஓலை குடிசையில் தங்கி வீடுகளை கட்டிக்கொண்டு வருகின்றனர். சிலர் வீடு கட்ட தேவையான சீமெந்து கற்களை அந்த இடத்திலேயே தயாரிக்கின்றனர். காரணம் வீடுகட்ட தேவையான மூலப்பொருட்கள் எல்லாமே பல கிலோ மீற்றர் சென்றுதான் பெறவேண்டும்.

பல தசாப்தகாலம் சொந்த நிலத்தையும், அதிலிருந்த வீட்டின் சிறு அடையாளத்தையும் வைத்துத்தான் சுமார் 60 குடும்பங்கள் குடியேறியுள்ளன. இன்றும் பல காணிகள் இனங்காண முடியாமலும் சில காணிகளின் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

சொந்தமாக நிலம், வீடுகள், இருந்தும் வீடின்றி அலைந்து திரியும் இந்த நிலைமையை மக்கள் என்றுமே மறக்கப்போவதில்லை. ஆறாத வடுவாகத்தான் இருக்கும்.

மக்கள் தேவையை பூர்த்தி செய்யவேண்டிய கடமை அரசையே சாரும் என்ற வகையில் யுத்தம் என்ற கோரப்பிடியில் சிக்கி இன்றுவரை நிம்மதியின்றி இருக்கும் மக்களுடைய தேவையைப் பூர்த்தி செய்யவேண்டும் என்பதே அந்த மக்களின் வேண்டுகோள்.

சுமார் ஒரு மணிநேரத்தில் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இவ்விவரணத்தில் மக்களின் மனநிலை இதுதான் என்பதை உணரமுடிந்தது. இது வளலாய் கிராமத்தின் நிலைவரமே தவிர, மொத்த யாழ்ப்பாண மக்களினது அல்ல.

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...