பாரூக் பஸ்மில்கான்
19 ஆவது சீர்திருத்தம் 2015 மே மாதம் 15 ஆம் திகதி பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. 19 ஆவது சீர்திருத்தத்தில் நாட்டின் ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் பலஅம்சங்களை கொண்டுள்ள தன் காரணமாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற 225 உறுப்பினர்களில் 215 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க வைக்க நினைக்கும் ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களில் சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் உயர்தர பதவி நியமனங்களில் ஜனாதிபதி தன்னிச்சையான அதிகாரங்கள் மீது மட்டுப்பாடுகளை விதிக்கவும், யாப்பு சீர்திருத்தம் நீண்டகாலமாக பல்வேறு தரப்பினராலும் பிரஸ்தாபிக்கப்பட்டு வந்துள்ளது.
2010 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 18 ஆவது திருத்தம் புத்தி ஜீவிகள் மத்தியிலும் நாட்டு மக்களிடையேயும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. நிறைவேற்று அதிகாரம் என்ற சொல்லில் அதிகளவு அதிகாரம் இழுத்துப் போடவும் 2 தடைவைக்கு மேல் ஜனாதிபதி பதவியை கேட்கவும் 18 ஆவது சீர்திருத்தம வழிவகுத்தது. அந்த வகையில் 19 ஆவது சீர்திருத்தம் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு அது சட்டமாக்கப்பட்ட தன் ஊடாக 18 ஆவது திருத்தம் முழுமையாக வலுவிழக்க செய்யப்பட்டதாகி விட்டது.
30 (1) இலங்கை குடியரசில் ஜனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும். அவரே அரசின் தலைவராகவும், ஆட்சித்துறையினதும், அரசாங்கத்தினதும் தலைவராகவும், ஆயுதம் தாங்கிய படைகளின் படைத் தளபதியாகவும் இருத்தல் வேண்டும். (30 உறுப்புரை நீக்கப்பட்டு அதற்கு பதிலாக பிரதியிடப்பட்டு)
30 (2) குடியரசு ஜனாதிபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டுமென்பதுடன் 5 ஆண்டுகள் கொண்டதொரு காலப்பகுதிக்குத் பதவி வகித்தலும் வேண்டும்.
ஜனாதிபதி பதவிக்கு மக்களால் 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆள் எவரும் அதன் பின்னர் எத்தகைய பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்க தகைமையுடையவராகார்.(31 உறுப்புரை திருத்தப்பட்டுள்ளது)
33 (அ) உட்புகுத்தல். ஜனாதிபதி அரசியலமைப்பின் கீழும் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு பற்றிய அப்போதுள்ள சட்டம் உட்பட எழுத்திலான ஏதேனும் சட்டத்தின் கீழும் தமது தத்துவங்களையும்,கடமைகளையும் மற்றும் பணிகளையும் உரிய முறையில் பிரயோகிப்பதற்கும் பகிர்வதற்கும் பாராளுமன்றத்திற்கு பொறுப்பாதல் வேண்டும்.
46 (1) அமைச்சரவை அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை 30 விட விஞ்சுதலாகாது.அத்துடன் 46(2) அமைச்சரவை உறுப்பினர்கள்அல்லாத அமைச்சர்களினதும் பிரதி அமைச்சர்களினதும் கூட்டு மொத்த எண்ணிக்கை மொத்தத்தில் 40 விட விஞ்சுதலாகாது.
46 (4) உறுப்புரை 46 (1) எது எப்படியிருப்பினும் அரசியல் கட்சி அல்லது சுயேச்சை குழு தேசிய அரசாங்கமொன்றை உருவாக்குமிடத்து அமைச்சரவை அமைச்சர்களது எண்ணிக்கையும் அமைச்சரவை உறுப்பினர்கள் அல்லாத அமைச்சர்களது எண்ணிக்கையும் பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.
பாராளுமன்றமானது முன்னதாக கலைக்கப்பட்டால் ஒழிய ஒவ்வொரு பாராளுமன்றமும் அதன் முதலாவது கூட்டத்திற்கென நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து 5 ஆண்டுகள் கொண்ட காலத்துக்கு தொடர்ந்திருத்தல் வேண்டும். அதற்கு மேற்பட்ட காலத்தில்அல்ல. 62 (2) நீக்கப்பட்டு அதற்கு பதிலாக சேர்க்கப்பட்டது.
சனாதிபதி பிரகடனத்தின் மூலம் பாராளுமன்றத்தை கூடுமாறு அழைக்கலாம், அமர்வு நிறுத்தலாம் அத்துடன் கலைக்கலாம். ஆயினும் ஜனாதிபதி பாராளுமன்றம் அதன் முதல் கூட்டத்துக்காக நியமித்த திகதியிலிருந்து நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்களுக்கு எண்ணிக்கையின் (சமுகமளிக்காதோர் உட்பட) மூன்றிலிரண்டுக்கு குறையாத உறுப்பினர்களால் அதன் சார்பில் வாக்களித்து நிறைவேற்றப்படும் தீர்மானமொன்றில் அங்ஙனம் செய்யுமாறு பாராளுமன்றம் ஜனாதிபதியை வேண்டினாலொழிய கலைத்தலாகாது.
( 70 (1) நீக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளது).
92 ஆம் உறுப்புரையின் (அ) திருத்தப்பட்டுள்ளது. சனாதிபதி பதவிக்கு தகுதியுடையவர் முப்பது வயதுடையவராக என்னும் சொல் முப்பத்தைந்து வயதுடையவராக மாற்றப்பட்டுள்ளது.
14 ஆம் உறுப்புரையை உட்புகுத்தல். (1) ஒவ்வெரு பிரஜையும், பிரஜையொருவரின் உரிமைகளைப் பிரயோகிப்பதற்கு அல்லது பாதுகாப்பதற்கு தேவைப்படுத்தப்படுவதும் பின்வருபவர்களினால் வைத்திருக்கப்படுவதுமான தகவலாய் உள்ளதுமான ஏதேனும் தகவலை சட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளவராக பெற அணுகுவதற்கான உரிமையை கொண்டிருத்தல் வேண்டும்.
அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தத்தின் மூலம் 18ஆவது திருத்தத்திலிருந்து பாராளுமன்ற பேரவை நீக்கப்பட்டு 17ஆவது திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு பேரவை மீண்டும் தாபிக்கப்பட்டுள்ளது. இதன்படி சில உயர்தர அரச நியமனங்களை சனாதிபதி மேற்கொள்ளும் போது அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரம் மற்றும் சிபாரிசு அவசியமாகும்.
அரசியலமைப்பு பேரவை பின்வரும் உறுப்பினர்களை கொண்டது.
பிரதமர்
சபாநாயகர்
எதிர்க்கட்சி தலைவர்
ஜனாதிபதியால் நியமிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்
பிரதமரினாலும் எதிர்க்கட்சி தலைவரினாலும் பெயர் குறித்து ஜனாதிபதியால் நியமிக்கப்படும் 5 பேர். இவர்களுள் 2 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
பிரதமரதும் எதிர்க்கட்சி தலைவரதும் கட்சியை சேராத பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையோரின் விருப்பில் பெயர் குறித்து நியமிக்கப்படும் ஒருவர்
சபாநாயகர் பேரவையின் தலைவராவார். அரசியலமைப்பு பேரவைக்கு 5 உறுப்பினர்களை சிபாரிசு செய்கின்ற போது உயர் தொழில் மற்றும் வேறுபட்ட சமூகங்கள் உள்ளிட்ட இலங்கையின் பல்லின சமுதாயங்களை பிரதிபலிக்கின்றது என்பதை உறுதிப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கின்ற அரசியல் கட்சிகளதும், சுயேச்சை குழுக்களதும் தலைவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத நபர்கள் பகிரங்க வாழ்வில் அல்லது உயர்தொழில் தமக்கென்று சிறந்த நிலையை ஏற்படுத்திக் கொண்ட கீர்த்தியும், நேர்மை வாய்ந்தவர்களாகவும் அரசியல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரல்லாதவராகவும் இருத்தல் வேண்டும்.
சனாதிபதி பின்வரும் ஆணைக்குழுக்களுக்கான தவிசாளரையும் உறுப்பினர்களையும் நியமிக்கும் போது அரசியலமைப்பு பேரவையின் சிபாரிசு அவசியமானதாகும்.
1 தேர்தல் ஆணைக்குழு
2 பகிரங்க சேவை ஆணைக்குழு
3 தேசிய பொலிஸ் ஆணைக்குழு
4 கணக்காய்வு சேவை ஆணைக்குழு
5 இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
6 இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்துறைகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
7 நிதி ஆணைக்குழு
8 எல்லை நிர்ணய ஆணைக்குழு
9 தேசிய பெறுகை ஆணைக்குழு
மேலும் பின்வரும் உயர்பதவிகளுக்கு சனாதிபதி ஆட்களை நியமிக்கும் போது அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரம் அவசியமாகும்,
1 பிரதம நீதியரசரும் உயர் நீதிமன்ற நீதிபதிகளும்
2 மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரும் நீதிபதிகளும்
3 தவிசாளர் தவிர்ந்த நீதிச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள்
4 சட்டமா அதிபர்
5 கணக்காய்வாளர் நாயகம்
6 பொலிஸ்மா அதிபர்
7 நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்)
8 பாராளுமன்ற செயலாளர் நாயகம்
5 வருட பதவிக் காலத்தை கொண்டதொருவர் பேரவைக்கான செயலாளர் நாயகமாக இருத்தல் வேண்டும். (41<1) பேரவையானது குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும் 2 தடவைகள் பேரவையின் தவிசாளரது பணிப்பின் மீது பேரவையின் செயலாளர் நாயகத்தினால் கூட்டப்படுதல் வேண்டும். தவிசாளர் கூட்டங்களுக்கு தலைமை தாங்குதல் வேண்டுமென்பதுடன் அவர் வருகை தராத போது பிரதமரும்,அவர் வருகை தராத போது, எதிர்க்கட்சி தலைவரும் பேரவையின் கூட்டங்களுக்கு தலைமை தாங்க வேண்டும். பேரவையின் கூட்ட நடப்பெண் 5 ஆகும்.
பேரவையின் அங்கீகாரம்,முடிவு என்பன ஏகமனதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன் ஏகமனதாக முடிவொன்று இல்லாதவிடத்து கூட்டத்தில் சமுகமாயிருக்கும் உறுப்பினர்களில் 5 உறுப்பினர்களுக்கு குறையாதோரினால் ஆதரவு தெரிவிக்க வேண்டும். முடிவுகள் சமமாக இருக்கும் இடத்து தவிசாளரினால் அல்லது தலைமை தாங்குபவரால் உறுதிவாக்கு பிரயோகிக்கப்படும். பேரவையின் கூட்டங்களுக்கு தேவையான நிதி திரட்டு நிதியத்தின் மீது பொறுப்பாக்கப்பட்டிருக்கும்.
பகிரங்க சேவைகள் ஆணைக்குழு 9 உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும். அத்தகைய உறுப்பினர்களுள் 3 உறுப்பினர்கள் பகிரங்க அலுவலராக பதினைந்து ஆண்டுகள் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். இவர்களது பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.
தேர்தல் ஆணைக்குழு 3 உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும். இவர்கள் உயர் தொழிலில் அல்லது நிருவாகம் அல்லது கல்விசார் துறைகளில் தமக்கென சிறந்த நிலையில் இருந்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் உறுப்பினர்களில் 1; பிரதி தேர்தல் ஆணையாளராக அல்லது அதற்கு மேற்பட்ட பதவியை வகித்தவராக இருத்தல் வேண்டும்.
கணக்காய்வு சேவை ஆணைக்குழு 5 உறுப்பினர்களைக் கொண்டது. கணக்காய்வாளர் நாயகம் இதன் தவிசாளராகக் காணப்படுவார். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். ஆணைக்குழுவின் கூட்ட நடப்பெண் 3 ஆகும்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு 7 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இவர்களுள் குறைந்தது ஒரு உறுப்பினர் பிரதி பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதியாக அல்லது அதற்கு மேற்பட்ட பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.
தேசிய பெறுகை ஆணைக்குழு 5 உறுப்பினர்ளைக்கொண்டிருக்கும். பெறுகை கணக்கியல், சட்டம், பொதுநிருவாகம் போன்ற துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மூன்று பேர் அவ்வைந்து பேருக்குள் இருத்தல் வேண்டும். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். கூட்ட நடப்பெண் 3 ஆகும்.
மேற்கூறப்பட்ட ஆணைக்குழுக்களின் முடிவுகள் சமுகமளித்துள்ளோரின் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் தேர்தல் ஆணைக்குழு தவிர்ந்த ஏனைய ஆணைக்குழுக்கள் பாராளுமன்றத்திற்கு பொறுப்பாதலும் வகைசொல்லுதலும் வேண்டும்.
17 ஆவது சீர்திருத்தம் போன்று சிறுபான்மை உறுப்பினர் நியமனம் தொடர்பான சர்ச்சையில் அரசியலமைப்பு பேரவை இயங்காமல் போனது போன்று 19 ஆவது சீர்திருத்தத்தின் பேரவையும் ஆகிவிடக் கூடாது என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.இதன் மூலம் நிலையான ஜனநாயகத்தையும் நாட்டின் அபிவிருத்தியையும் மேற்கொள்ள முடியும்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் அவர் தன்னிச்சையாக மேற்கொண்ட சில அதிகாரங்களில் மட்டுப்பாடுகளை விதிக்கவும்,அவற்றில் சில அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு பொறுப்பாக்கவும் 19 ஆவது சீர்திருத்தம் உறுதுணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment