Monday, December 19, 2016

தகவலறியும் சட்டத்தினூடாக என்ன செய்யலாம்?

ரசாங்கம் என்பது மக்களுக்காவே உருவாக்கப்பட்டது என்ற அடிப்படையில் கூறிக்கொண்டு மக்கள் கேட்கும் கேள்விகளுக்கோ விளக்கங்களுக்கோ அரசாங்கம் பதிலளிக்க மறுக்க முடியாது. இவ்வாறான சிக்கல் நிலைமைகளை தடுக்கவே அரசாங்கத்திடமிருந்து தகவலை சட்டபூர்வமாக பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையிலும் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி அமைச்சரவையில் தகவலை பெறுவதற்கான உரிமைச்சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு  டிசம்பர் 18 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி பாராளுமன்றில் இச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது. அதே வருடம் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி சபாநாயகர் கரு  ஜயசூரிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு இறுதி கையெழுத்திட்டு அடுத்த ஆறு மாதத்துக்கு பின்னர் நடைமுறைக்கு வருமெனவும் கூறினார். அதாவது 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி முதல் மக்கள் தகவலை அறிந்துகொள்ளும் நோக்கில் முறைப்பாடுகளை வழங்கமுடியும்.

இச்சட்டத்தினூடாக தகவலை சட்டப்படி பெற்றுக்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இலங்கை 108 ஆவது இடத்தில் இருக்கின்றது. அதேநேரம் இலங்கையில் உருவாகியுள்ள தகவலறியும் உரிமைச்சட்டமானது உலகில் மிகச்சிறந்த தகவல் உரிமைச்சட்டப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது என பிரீடம் ஹவுஸ் தகவல் வெளியிட்டுள்ளது. மிகச்சிறந்த தகவல் உரிமைச் சட்டத்தை உருவாக்கிய நாடுகள் பட்டியலில் முதலாவதாக மெக்சிக்கோவும் இந்தியா நான்காவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் இலங்கை பிரஜைகளின்  அடிப்படை உரிமைகளில் ஒன்று என்ற காரணத்தினாலேயே உலக நாடுகள் இலங்கைக்கு  இந்தளவுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது. அதாவது அரசியலமைப்பின் 14 உறுப்புரையில் கருத்து சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், நாட்டில் எந்த இடத்துக்கும் சென்று வரும் சுதந்திரம், சொந்தமாக வேலை செய்யும் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமைகளுக்கு சமமான வகையில் தகவலை பெற அணுகுவதற்கான உரிமை 14 அ  உறுப்புரையில் உள்வாங்கப்பட்டுள்ளது.

தகவலைப்பெற அணுகுதலுக்கான உரிமைக்குப் பயன்படுத்துவதன் மூலம் பகிரங்க அதிகாரசபைகளின் (அமைச்சுக்கள், உள்ள_ராட்சி, சபைகள், அரச திணைக்களங்கள்) வெளிப் படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் பண்பாட்டைப் பேணிவளர்த்து அதன் மூலம் இலங்கை மக்கள் ஊழலை எதிர்த்துநிற்றல் மற்றும் பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றின்  ஊடாக  நாட்டின் பொது வாழ்வில் தீவிரமாகப் பங்கேற்கக் கூடியதுமாகவிருக்கும் ஒரு தேவைப்பாடு உருவாக வேண்டும் என இச்சட்டத்தின் முன்னுரை விளக்குகின்றது. எனவே மேற்குறிப்பிட்டபடி தகவல் பொது மக்கள் தேவை கருதிய பொது தகவல்களாக இருப்பதோடு லஞ்ச ஊழல் தொடர்பான விடயங்களிலும் தகவலைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

தகவல் என்றால் என்ன என்பது தொடர்பாக சட்டத்தின்  43 ஆவது அத்தியாயம் இவ்வாறு விளக்குகிறது. பௌதீக தன்மை அல்லது அவற்றின் தன்மையினை கருத்திற்கொள்ளாது. குறிப்பு, ஆவணம், செய்தி சேவை, மின்னஞ்சல், கருத்துக்கள், ஆலோசனை, ஊடக அறிக்கை, சுற்றறிக்கை, சம்பவத்திரட்டுகள், விரைவுச்சட்டவாக்கம், உடன்படிக்கைகள், அறிக்கை, செய்தி பத்திரம், மாதிரிகள், பரிமாற்றம் செய்யப்படும் கடிதங்கள் , ஒளிநாடா, புத்தகங்கள், வரைப்படங்கள், சித்திரம், படக்குறிப்புகள், உடன்படிக்கைகள், அறிக்கை செய்தி பத்திரம், ஒலிப்பதிவுகள், இயந்திரங்கள் மூலம் வாசிக்க கூடிய ஆவணங்கள் அனைத்தும் தகவல்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் இதற்கென ஐவர் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்படும். அதற்கு கீழ் எல்லா அரச நிறுவனங்களுக்கும் தகவல் வழங்குவதற்கென ஒரு அதிகாரி (information officer)  நியமிக்கப்படுவார்கள். அவர்களினூடாகவே தகவல்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தகவலொன்றை பெறவிரும்பும் நபர் குறித்த தகவல் வழங்கும் அதிகாரிக்கு முறைப்படி எழுத்து மூல கடிதம் வழங்க வேண்டும். அதில் என்ன தகவல், அதன் நோக்கம் போன்றனவும், அதோடு தொடர்புடைய ஆவணங்கள் இருப்பின்  அதனையும் கடிதத்துடன் இணைக்கலாம்.

குறித்த நபர் கேட்கும் தகவலை குறித்த தகவல் வழங்குநர் 14 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அதனை விட ஆவணங்களை தேட அல்லது தகவல்களை திரட்ட என 21 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம்.  அதற்கு அதிகமான நாட்கள் நீடிக்குமாக இருந்தால் அது தொடர்பாக தகவலை கேட்பவருக்கு காரணத்துடன் விளக்கமளிக்கவேண்டும். தகவல்களை வழங்கவென கட்டணங்கள் அறவிடப்படாது. ஆனால் தகவல் எந்த வடிவத்தில் கேற்கப்படுகின்றதோ அதனை பொறுத்து கட்டணங்கள் அறவிடப்படலாம். அதனை தகவல் ஆணைக்குழு தீர்மானிக்கும்.

தகவலுக்கான கோரிக்கையானது, ஒரு பிரஜையின் உயிர்  மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துடன் சம்மந்தப்படுகின்றபோது கோரிக்கை விண்ணப்பம் கிடைக்கப்பெற்றதிலிருந்து 48 மணித்தியாலங்களுக்குள் பதிலளிக்கப்படவேண்டும்.

பொதுவாக முக்கியத்துவமற்ற தேவையற்ற விதத்தில் எந்த ஒரு தனி  நபருக்கும் தாக்கத்தினை ஏற்படுத்த கூடிய தகவல்கள், அரச பாதுகாப்புக்கோ நாட்டின் இறைமைக்கோ தாக்கம் செலுத்த கூடிய தகவல்கள் , சர்வதேச உடன்படிக்கை அல்லது கடமை காரணத்தினால் வெளியிட முடியாத தகவல்கள், வெளியிடுதலினால் அரசாங்கத்தின் தொடர்ச்சியான பொருளாதார கொள்கைகளுக்கு தடையாக அமைகின்ற தகவல்கள், அறிவுசார் சொத்துக்களாக கருதப்படும் வணிக ரகசியங்கள், தனி நபர் வைத்திய அறிக்கைகள், சட்டமா அதிபரின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள், பொறுப்பாளர், பொறுப்பாளர் தொடர்பினை கொண்ட ரகசியமாக காக்க வேண்டிய தகவல்கள், வெளியிடுவதன் மூலம் குற்றங்களை தடுப்பதற்கு தடையாக அமையும் தகவல்கள் , நீதி மன்றத்திற்கு அல்லது  பாராளுமன்றத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் தகவல்கள் , பரீட்சைகளுடன் தொடர்புடைய இரகசியமாக பாதுகாக்க வேண்டிய தகவல்கள் என்பவற்றை தவிர ஏனைய தகவல்களை கேட்க முடியும்.

தகவலை தர மறுக்க முடியாது. தகவல் கேட்பவரை தடுக்க முடியாது. தகவல்களை வழங்குவதை நிராகரிப்பதற்கு இருக்கும் எல்லைகள் பற்றி 5 ( 4 ) அத்தியாயத்தில்  தகவலினை பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு இருக்கின்ற தேவை அத்தகவலினை வெளியிடுவதனால் ஏற்படுகின்ற தீங்கினை விட அதிகம் எனின் அந்த கோரிக்கையினை நிராகரிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவலை தர மறுப்பதற்கெதிராக மேன்முறையீடும் செய்ய ஏற்பாடுகள் உள்ளன.

கோரிக்கையொன்றை ஏற்க மறுத்தல், கூறமுடியாத காரணங்கள் தவிர்ந்த ஏனைய காரணங்களை தரமறுத்தல், இச்சட்டத்தினால் குறித்துரைக்கப்பட்ட காலத்துக்குள் தகவலை வழங்காமை. தவறான இட்டுச் செல்லும் அல்லது பொய்யான தகவலை வழங்குதல். அதிகப்படியான கட்டணங்களை வசூலித்தல். குற்றவழக்குத்தொடர்தலிலிருந்தான விலக்களிப்பு.ஒரு கோரிக்கையின் நிராகரிப்புக்கு எதிரான மேன்முறையீடுகள், வழங்கப்பட்ட தகவல் உருக்குலைக்கப்பட்டிருந்தால் அல்லது அழிவைடைந்திருந்தால் அவற்றுக்கு எதிராக மேன்முறையீடு செய்யலாம்.

இவ்வாறான அடிப்படைத் தகவல்களை தகவல் வழங்கும் அதிகாரிகள் வழங்க மறுக்கப்படுகின்ற போது குறித்த திணைக்களத்தின் மேலதிகாரிக்கு மேன்முறையீடு செய்யலாம் அதிலும் திருப்தி இல்லாவிடின் , ஆணைக்குழுவிற்கு மேன்முறைப்பாடு செய்யலாம், அதிலும் திருத்தி படாவிட்டால் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு செல்லலாம், அதிலும் திருப்தியான பதில் கிடைக்க வில்லையாயின் உச்சநீதிமன்றிற்குச் செல்லலாம்.

தகவலை கேட்கும் ஒருவர் திணைக்கள மேலதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்தால் அது தொடர்பாக ஒழுக்காற்று அதிகார சபை கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு ஒரு மாத காலப்பகுதிக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும். தகவல் வழங்கும் அதிகாரி ஒழுக்காற்று அதிகார சபை ஆணைக்குழு இவற்றுக்கு ஒத்துழைக்காவிட்டால் அவருக்கெதிராக நீதிமன்றம் செல்லவும் முடியும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதவான் அவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாவுக்கு மேற்படாத குற்றப்பணமொன்றுக்கு அல்லது இரண்டாண்டுகளுக்கு மேற்படாத காலப்பகுதியொன்றுக்கான சிறைதண்டனை அல்லது இரண்டையும் அனுபவிக்கவேண்டி வரும்.

இவ்வாறு தகவல்ஒன்றை மக்களால் பெற்றுக்கொள்ள முடியும். தகவலை பெற்று அதனை பொது தேவைக்காக பயன்படுத்துவது மட்டுமின்றி தமது உரிமைகளை வென்றெடுப்பதும் இந்த சட்டத்தின் நோக்கமாக இருக்கின்றது. இலங்கை 30 வருட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த நாடு என்ற வகையில்  பாதிக்கப்பட்ட மக்கள் இந்த சட்டத்தை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats

Sri Lanka: Sobitha Thero’s Advances and Retreats Paper No. 5645                                        Dated 11-Feb-2014 Gue...