கணவனுக்கு பதில் மரணசான்றிதழ் நட்டஈடா?
அமலநாயகி |
கணவனை காணவில்லை என்று சமூகத்திலுள்ளவர்களால் ஒதுக்கப்படும் நிலைக்கு தள்ளப்ப்பட்டதின் உச்சக்கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று பல தடைவகள் அமலநாயகி முடிவெடுக்கிறார்.
குமுதா |
ரவிதா |
ஆயுதமேந்தி போராடினவனயெல்லாம் அரச பதவியில சொகுசா வைத்துவிட்டு ஒரு தப்பும் செய்யாத என்னுடைய புருஷனை எதற்காக பிடிச்சனீங்க?” என்கிறார் ரவிதா
நானும் இன்னும் சில நண்பர்களும் மூன்று பெண்களுடன் மட்டக்களப்பு மயிலம்பாவெளியிலுள்ள பிள்ளையார் கோயிலில் நின்று கதைத்துக்கொண்டிருந்தோம். அந்தசமயம் அந்த வழியில் போய்வரும் கூட்டமெல்லாம் எங்களை தவறாமல் பார்த்துச்செல்கின்றனர். எங்களுக்கோ காரணம் தெரியவில்லை. ஆண்கள், பெண்கள் என எல்லோருமே எட்டி, எட்டி பார்த்து செல்கின்றனர்.
பெண்களுடன் பேசியபின்னர்தான் ஏன் இப்படி பார்க்கின்றார்கள் என்பது தெரிந்தது. இவ்வாறு அந்த பெண்களை மறைவாக சந்திக்க காரணமும் இந்த சமூகம்தான். நாங்கள் மறைந்திருந்து சந்தித்த பெண்கள் வேறுயாருமல்ல கணவன்மார்களை தொலைத்துவிட்டு தவிக்கும் பெண்கள் தானே தவிர தவறான பெண்கள் இல்லை.
“இவளுகளுக்கு என்ன பிரச்சினை இருக்குதென்டு பொட்டையும் பூவையும் வைச்சுக்கொண்டு, சாரியையும் வரிஞ்சு கட்டிக்கொண்டு, பேக்கையும் போட்டுக்கொண்டு கிளம்பிட்டாளுகள் என்று சில ஆணும் பெண்ணும் சேர்ந்து கிண்டலடிக்கிறார்கள். இப்படி இவங்க பேசுவாங்க எண்டுதான் கலியாண, காட்சிகளுக்கு போறதில்ல. நல்ல காரியங்களில கலந்துகொல்லுரதிள்ள”
“நாங்க சுமந்து கொண்டு செல்லுவது வெறுமையான பை அல்ல. அந்தப்பை எங்களுடைய வலியால் நிரம்பியுள்ளது. அதுக்குள்ளேதான் எங்கட புருஷன் இருக்கார். அவர பத்தின தகவல்கள் இருக்கின்றன. நாங்க எங்க போறம் வாரதென்றத இவங்களுக்கு சொல்ல தேவையில்ல” என்று கணவனை காணாமல் தொலைத்து தவிக்கும் அமலராஜ் அமலநாயகி கண்கலங்குகிறார்.
அமலராஜ் அமலநாயகிக்கு இப்பொழுது நாற்பத்தியொரு வயதாகிறது. திருமணம் முடித்ததும், கணவன் இறுதிவரை தன்னையும் தனது பிள்ளைகளையும் காப்பாற்றுவான் என்ற நினைப்பில் இருந்தாள். 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி வயலில் அறுவடை வேலையை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிச் சென்றவர் இன்றைய நாள்வரை வீடு திரும்பவே இல்லை. அந்தோனிமுத்து அமல்ராஜ் (அப்போது 42வயது) என்பவர் தான் அமலநாயகியின் கணவனுடைய பெயர். மூன்று பிள்ளைகளின் தந்தையான அமல்ராஜை அவரது பிள்ளைகள் அப்பா எங்கே என கேட்காத நாள் இல்லை. இன்று அவர்கள் வளர்ந்து விட்டார்கள். மகள் (26), மகன் (19), மகள் (17). இந்நிலையில் இன்று அவரது பேரனும் படத்தை காட்டி எங்கே தாத்தா என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு வயலுக்கு போன அமலநாயகியின் கணவனை பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர்தான் (ளுவுகு) பிடித்துக் கொண்டு போனதாக நேரில் கண்ட சாட்சியங்கள் முதல் கடத்திச் சென்றவர்களின் பெயர் வரை சகல ஆதாரங்களையும் வைத்துள்ள போதிலும் கணவனை இன்றுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
கணவன் காணாமல்போனதும் முறைப்பாடு தெரிவிக்க மூன்று நாட்கள் தொடர்ந்து சென்றும் பொலிஸார் முறைப்பாட்டை ஏற்காத பொலிஸார் நீ அரசாங்கத்துக்கு எதிராக முறைப்பாடு செய்கிறாய் என்று கேட்டனராம். இதற்கு, “பொலிஸ் உங்கள் நண்பன் என்று சொல்லுறதெல்லாம் பொய்யா? அரசாங்கம் என்பது நீங்கள் என்றால் நாங்க யார்” என்று அமலநாயகி எதிர்த்து கேட்டதால் முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்கின்றார். கடந்த அரசாங்கத்தில் இது ஒன்றும் புதிதல்ல.
போராடி முறையிட்டும் எந்த பயனும் இல்லை. அதாவது பின்னர் தான்செய்த முறைப்பாடு தவறாகவே பதிவுசெய்யப்பட்டிருந்ததை அமலநாயகி அறிந்துகொண்டார்.
அதன் பின்னர் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழக்கள் எல்லாவற்றிலும் எல்லாவற்றையும் கூறியுள்ள போதிலும் அன்று முதல் இன்றுவரை சுமார் ஏழாண்டுகளாக தனது கணவனை தேடி கண்டுபிடிக்கும் அமலநாயகியின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இவ்வாறு கணவனை தேடி ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு வெளியேறும்போது ஊர் மக்கள் இன்று என்ன சொல்லுவார்களோ? என்ன ஆபத்து வருமோ? என்ற உயிர் பயத்தில் தான் வெளியில் சென்று வருகின்றோம். பொட்டு வைத்துகொண்டு வெளியில் சென்றுவரும் நாம் அயலவர்களின் கேவலமான வார்த்தைகளாலும் பேசுக்களாளும் மனவேதனையடைகின்றோம். அது எரிமலைபோல இருக்கும் என்று தனது மன வேதனையை கண்கலங்குகிறார்.
இன்று தனியொரு பெண்ணாக மூன்று பிள்ளைகளையும் வளர்த்து மூத்த பிள்ளைக்கு திருமணம் முடித்துவைத்து ஏனைய பிள்ளைகளையும் கரைசேர்த்த பெண் என்பதாலோ தெரியவில்லை சமூகம் பொறாமையுடன் பார்க்கிறது.
கணவனை காணவில்லை என்று சமூகத்திலுள்ளவர்களால் ஒதுக்கப்படும் நிலைக்கு தள்ளப்ப்பட்டதின் உச்சக்கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று பல தடைவகள் அமலநாயகி முடிவெடுக்கிறார். ஆனால் தந்தையை இழந்து தவிக்கும் தனது பிள்ளைகள் தாயையும் இழந்து தவிக்கவிடக்கூடாது. அந்த பிள்ளைகளுக்கு தந்தைக்கு பதிலாக தாயாய் இருந்தாவது கடமையை செய்ய வேண்டும் என்று பிள்ளைகளுக்காக தனது முடிவை மாற்றிக்கொள்வதாக அவர் தனது வேதனையை கொட்டித்தீர்த்தார்.
இப்படி வாழ்க்கை வெறுக்கும் போதெல்லாம் ஓரு பக்கம் தற்கொலையும் மறுபக்கம் தனது பிள்ளைகளும் தான் கண்முன் வந்துபோகும் என்கிறார். இவ்வாறு ஒரு சமூகம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டுகின்றது என்பது புலப்படுகிறது. அது தான் உண்மை நிலையும் கூட.
இவ்வாறான பெண்களுக்கு சமூகம் வழங்கும் பெயர் ‘காணாமல் போனவரின் மனைவி’ அதாவது திருமணம் முடித்த கணவர் காணாமல் போய்விட்டார். சாட்சியங்களின்படி பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளார்கள். உயிரோடு இருக்கின்றார்களா? கொல்லப்பட்டுவிட்டாரா என்பது தெரியாது. இப்படிப்பட்ட பெண்கள் எல்லோரும் விதவைகளா? இந்த சமூகம் இவர்களை விதவைகளாகத்தான் பார்க்க விரும்புகிறதா? என்றே கேட்க தோன்றுகின்றது.
“சமூகத்துக்கு வேறு வேலையில்லை, இப்படித்தான் ஏதாவது பேசிக்கொண்டுதான் இருக்கும் ஆனால் தமிழர் பாரம்பரியத்தில் பொட்டும் தாலியும் கணவனுடைய அடையாளம் இல்லை. கணவன் உயிரோடு இருக்கும்போது தாலி அணிய வேண்டும், பொட்டு வைக்க வேண்டும், பட்டு சேலை உடுத்த வேண்டும் என்றும் கணவன் இறந்தபின் இவையனைத்தையும் செய்யக்கூடாது என்றும் எங்கும் குறிப்பிடவில்லை. இது நவீன உலகம். தாலியை அணிந்தால் பாதுகாப்பு இல்லை. சமூகத்தில் உள்ளவர்கள் கூறுவதை கேட்பதைவிடவும் தனது பொருளாதாரம், பாதுகாப்பு பற்றியே சிந்திக்கவேண்டும்” என பிரபல பெண்ணியவாதியும் முற்போக்கு எழுத்தாளருமான பத்மா சோமகாந்தன் தெரிவிக்கிறார்.
மேலும் “தாலி என்பதன் அர்த்தம் பனை ஓலை: இதனை உயிர்நாடியாக கருதமுடியாது. மரபு வழியாக வந்த சமய கோட்பாடே தவிர சட்டமல்ல யார் இல்லாவிட்டாலும் பெண்கள் வாழவேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற முற்போக்கு சிந்தனையாளர்களாக பெண்கள் உருமாறும்போது பாரதியின் கனவும் மெய்படும். இருப்பினும் சமூகத்துக்குள் தானே எல்லாமே அடங்கியுள்ளது. கணவன் இன்னும் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் வீட்டைவிட்டு வெளிவரும் பெண்களை மட்டமான இச்சமூகம் தீண்டப்படாத உறவுகளைப்போல புறக்கணிப்பதில் தர்மம் எங்கே ஒழிந்துகொண்டிருக்கிறது? இந்த சமூகத்துக்குள்தானே அந்தப்பெண்ணும் தனது கடைசிக் காலத்தை கழிக்கவேண்டும்.
சமூகத்தால் புறக்கணிக்கப்படும் எமது பிரச்சினை மூவின மக்களின் பிரச்சினையாக இன்று பார்க்கப்படுகிறது. எனினும் காணாமல் போனோரை கண்டறிய அரசாங்கம், உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தருவது இந்த அரசாங்கத்தின் பொறுப்பு என தும்பங்கேணி, பெரிய போரத்தீவில் வசிக்கும் 39 வயதாகும் குகேந்திரராசா குமுதா கூறுகின்றூர்.
இவரது கணவர் 2002 ஆம் ஆண்டு படுவான் கரையில் வீட்டுக்கொரு போராளி என்று கிழக்கில் கருணா அம்மான் உத்தரவின் பேரில் இயக்கத்தில் இணைந்திருந்தார். ஆனால் சில நாட்களிலேயே இயக்கத்திலிருந்து விலகி பின்னர் குமுதாவை திருமணம் செய்து கொண்டார். ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் போதும் கணவனை இயக்கம் மற்றும் இராணுவம் ஆகியோரிடமிருந்து பாதுகாக்கவென பயந்து பல இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாக குமுதா கூறுகின்றார். 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி வாழைச்சேனை மீயான்குளம் என்ற பகுதியில் வைத்து விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் பிடித்துசெல்லப்பட்டு பழுகாமம் முகாமுக்குள்தான் கொண்டு சென்றார்கள் என அக்காலத்தில் முகாம்களுக்கு பொறுப்பாக இருந்தவர்களின் பெயர் முதற்கொண்டு குமுதா தெரிவிக்கிறார்.
“அந்த முகாம் இருந்த பகுதியிலிருந்து முகாமை அகற்றிக்கொண்டு பொலிஸ் அதிரடிப்படையினர் வெளியேறியதும் ஒரு நாள் என்னுடைய கணவர் தன்னுடைய மணி பேர்சுக்குள் லெமனேட் பண்ணி வைத்திருந்த அடையாள அட்டை கிடைத்தது. அதிரடிப்படையினர் இருந்த முகாமுக்குள் எனது கணவர் வைத்திருந்த அடையாள அட்டை எப்படி போனது? எனது குழந்தைக்கு இப்போது ஏழு வயது. தந்தையின் முகம் தெரியாது. அப்பா எப்போது வருவார் என்று கேட்டுகொண்டிருக்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்லுறது?” என்று சொல்லும்போது குமுதாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரையாய் கொட்டுகிறது.
குமுதாவின் கண்ணீருக்கு அரசின் பதில் விசாரணை நடக்கிறது என்பது மட்டுமே. அரசுதரப்பில் காணாமல்போனோரை கண்டறிய நியமித்த ஜனாதிபதியின் ஆணைக்குழு முறைப்பாட்டை பெற்றுக்கொண்டு முறைப்பாட்டாளர்களை விசாரிக்கின்றதே தவிர முறைப்பாட்டில் பெயர் குறிப்பிட்டிருக்கும் ஆட்களிடம் விசாரணை நடத்துவதாக தெரியவில்லை. காணாமல்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் குணதாசவிடம் கேட்டபோது, தற்போது இதுதொடர்பான தகவல்களை வழங்கமுடியாது, விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்று தெரிவித்தார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைமீது மக்கள் நம்பிக்கையை இழந்துவருகின்றனர். ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்காக வந்தால் செருப்பால் அடிப்போம் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். மேலும் இவ் ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகள் சர்வதேசத்தையும், ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவையும் ஏமாற்றும் விடயமாகவே பார்கப்படுகின்றது.
“ஜனாதிபதி ஆணைக்குழு மட்டுமல்ல நான் போன இடமெல்லாம் உங்களுடைய கணவர் இல்லையென்று கூறி மரண சான்றிதழை வழங்குவதற்கு முயற்சிக்கிறார்கள். எண்ட கணவனுடைய முகத்தை பார்க்காமல் நான் அதை எடுக்க மாட்டேன். எங்கட ஊர்ல உள்ளவங்க வெளியில உள்ளவங்கன்னு எவ்வளவோ பேர் பொட்டோடையும் தாலியோடையும் போகும் போது கேவலமா, இவளுக எப்படி போன புருஷன் வந்துருவான்னு யோசிக்காங்க என்று எங்கட நம்பிக்கையை உடைக்குறாங்க. இந்த பேச்சுகள விட எதுவா இருந்தாலும் நான் தாங்குவன். எனக்கு என் புருஷன் வேணும்” என்கிறார் குமுதா.
ஆண்துணை இல்லாமல் குமுதாவைப்போல பலர் தனது பிள்ளைகளுக்கு தந்தையின் அரவணைப்பையும் வழங்கவேண்டியவர்களாகவுள்ளனர். குழந்தையையும் தனது குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, காணாமல்போன கணவன்மார்களை தேடி அழைவது சுலபமானதல்ல.
இங்கு ஒரு பெண் 2008 முதல் 2010 வரைக்கும் 110 இடங்களுக்கு போய் ஆதாரத்துடன் முறையிட்டு விட்டதாகவும் கூறுகின்றார். கணவனை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ததாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளையும் ஆதரமாக வைத்துள்ளார். தன் கணவனை இழந்து தவிக்கும் புல்லுமலைலயைச் சேர்ந்த ரவீதா என்பதுதான் அவரது பெயர்.
மீன் பிடிக்க சென்ற ஐந்துபேரில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஏனைய நால்வரில் இருவர் நலன்புரி முகாமுக்குள் ஓடினர் எஞ்சிய இருவரை பொலிஸ் அதிரடிப்படியினர் பிடித்து சென்றுவிட்டனர். கந்தையா அந்தோணி என்ற எனது கணவரும் அதில் ஒருவர். 2008 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 02 ஆம் திகதி புல்லுமலைல இந்த சம்பவம் நடந்தது என்று 42 வயதுடைய அந்தோணி ரவிதா குறிப்பிடுகிறார். மேலும் க.பொ.த சாதாரண தரம் படித்து சிறந்த சித்திகளை பெற்றிறுந்தாலும் அவரது மகன் உயர் தரத்துக்கு சென்று படிக்க முடியவில்லை. காரணம் குடும்பத்தை சுமக்கும் பொறுப்பு தனது கணவனுக்கு அடுத்து மகன் என்பதால் இன்று மேசன் வேலைக்குச் செல்லுகிறான் என்றார் கண்ணீருடன்.
“கணவரின் உழைப்பின்றி நான்கு பிள்ளைகளையும் வளர்க்க இந்த சமூகத்துடன் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன். ஆயுதமேந்தி போராடினவனயெல்லாம் அரச பதவியில சொகுசா வைத்துவிட்டு ஒரு தப்பும் செய்யாத என்னுடைய புருஷனை எதற்காக பிடிச்சனீங்க?” என ரவிதா கேட்கும் கேள்விகளிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தளபதிகளாக இருந்தவர்கலெல்லாம் இன்று சுதந்திரமாக நடமாடும்போது தீப்பெட்டி வாங்கித்தந்த சமானியன் ஏன் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்?
அதேநேரம் ரவிதாவின் கணவன் வவுனியா சிறைச்சாலையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதாக பத்திரிகையில் செய்தியும் வெளிவந்துள்ளது. ஆனாலும் கணவன் வீடுதிரும்பவில்லை. இதேபோல பல ஆதாரங்கள் காணாமல் போனோரது குடும்பங்களிடம் இருந்தும் கூட இவர்களை கண்டுப்பிடிக்க முடியவில்லை. உடலில்லாமல் மரணச் சான்றிதழ்களை பெற மாட்டோம் எனவும் உறவுகள் கூறுகின்றன ஆனால் மரண சான்றிதழ்களை வழங்குவதை குறியாக வைத்துக் கொண்டே அரச தரப்பும் விசாரணைகளை தொடர்கின்றது.
“சாட்சியங்கள் கேக்குறாங்க, சாட்சியாக படத்தை கொண்டுபோய் கொடுத்தால், இந்த படத்தை யார் எடுத்தது என்று கேட்குறாங்க. இவங்கட நோக்கம் என்ன என்று புரியவில்லை. உயிர பணயம் வைச்சுத்தான் எல்லாம் செய்யுறம். இழப்பீடு தாரதா சொன்னாங்க ஒன்றும் தரவில்லை. என் கணவரின் சொத்தாக இருந்த மீன் வலையையும், படகையும் அரசாங்கமே கள்ளமாக விற்றுவிட்டது” என்றும் ரவிதா உரக்கக் கத்திச் சுட்டிக்காட்டினார்.
யுத்தத்தில் அதிகமாக நடுத்தர வர்க்கம் மற்றும் அதற்கும் கீழ்ப்பட்ட சமூகமே பாதிக்கப்பட்டது. சொத்து, உடைமை, உயிர்கள் இழந்து, தொலைத்தது மட்டுமல்லாமல் புலிகள் இயக்கத்துக்கு தம்மை இணைத்துக் கொண்டவர்களும் இவர்கள்தான். இன்று உயர்மட்ட வர்க்கத்தினரால் ஒதுக்ககப்படுபவர்களும் இவர்கள்தான்.
உயர்மட்ட வர்க்கத்தினரால் காணாமல்போனோரின் குடும்பம் மட்டுமின்றி புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளும் புறக்கணிக்கப்படுவதாகவும், இதற்கு உறுதியான அரசியல் நிலைப்பாடு இல்லாமையும் ஒரு காரணம் என காணாமல்போனோரை கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவிக்கிறார். யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட கீழ்மட்ட சமூகத்தினரின் வளர்ச்சியை விரும்பாத உயர்மட்ட சமூகம் இக்கீழ்மட்ட சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
இது இவ்வாறு இருக்க காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு நேரடியான அச்சுறுத்தல்கள் இன்றும் இருக்கின்றன. ஆட்சி மாற்றம் நடந்திருந்தாலும் என்னிடம் வந்து தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கடிதம்பெற வருகிறார்கள் என்று மட்டக்களப்பு - அம்பாறை மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் கூறுகின்றார். காணாமல் போனோரை கண்டறிய இந்த அரசாங்கம் என்ன செய்ய போகிறது? கணவனை இழந்த குடும்பத்துக்கு வருமானம் இல்லை தொழில் இல்லை சுய தொழில் கேட்டு எங்களிடம் வருகிறார்கள். அழ கூட உரிமை இல்லாத இடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 ஆயிரம் விதவைகள் இருப்பதாகவும் கூறினார் மாற்றத்துக்கான அரசாங்கம் இந்த விதவைகளின் வாழ்வாதாரத்துக்கு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்றும் கேள்வியையும் எழுப்பினார். மேலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கிழக்கிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதில்லை என்றும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில 9 ஆயிரத்து 990 பேர் காணாமல் போயுள்ளதாக கிழக்கிலங்கை மனிதாவள பொருளாதார அபிவிருத்தி நிறுவனமாக கெரிடாஸின் நிர்வாக அதிகாரி பி. கே. ஏம். மூர்த்தி தெரிவித்தார். காணாமல் போனோரின் குடும்பங்கள் பொலிஸ் நிலையத்திற்கு போய் பிரச்சினையை கூற கூட பயப்படுகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்குறிப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் பொறுப்பு கூறவேண்டியதும் உரிய தீர்வை வழங்க வேண்டியதுமான பாரிய பொறுப்பு அரசாங்கத்துடையதே என்றவகையில் அரசாங்கத்தில் மிக முக்கிய பதவி வழங்கக் கூடிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எம். எஸ. சார்ள்ஸ் குறிப்பிடுகையில் மட்டு மாவட்டத்தில் காணாமல் போனோர் என்ற விடயம் திட்டங்களுக்குள் உள்வாங்கப்படவில்லை. இந்தப் பிரச்சினை வடக்கு, கிழக்கு என்று மாத்திரமல்லாமல் வடக்கு, கிழக்கு தெற்கு என நாடு முழவதும் உள்ள ஒரு பொதுவான பிரச்சினையாக பார்க்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் தேசிய கொள்கை ஒன்றை உருவாக்கி அதன் மூலம் உரிய தீர்வுகாண வேண்டும். அத்துடன் இவை அரசியல் மயப்படுத்துவது முற்றாக தடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் காணாமல் போனோர் தொடர்பாக அரசு விசாரனைகளை நடத்தி வந்தாலும் கூட அவர்களது குடும்ப உறவுகளை பாதுகாக்க வேண்டியது யாருடைய பொறுப்பு? இங்கு தனது உள்ளக்கிடக்கைகளை கொட்டித்தீர்த்த மூன்று பெண்களும் இந்த ஆட்சிமாற்றத்திலேனும் தொலைந்த கணவன் கிடைத்துவிடுவான் என நினைப்பதில் தவறேதும் உள்ளதா? கடந்த அரசைப்போன்றே இந்த அரசின் நடவடிக்கையும் இருக்குமானால் அது நல்லாட்சியா? விடியலுக்காக விடைகளுடன் காத்திருக்கிறது ஓர் சமூகம்.
No comments:
Post a Comment